Published : 04 May 2015 02:56 PM
Last Updated : 04 May 2015 02:56 PM

3-வது டெஸ்டில் மே.இ.தீவுகள் வெற்றி: இங்கிலாந்து அதிர்ச்சி

பார்பேடோஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை மே.இ,தீவுகள் 1-1 என்று சமன் செய்தது.

39/5 என்று 3-ம் நாள் களமிறங்கிய இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 123 ரன்களுக்குச் சுருண்டது. டெய்லர், ஹோல்டர், வி.பெர்மால் ஆகியோர் தலா 3 விக்கெடுகளைக் கைப்பற்றினர்.

வெற்றி பெற 192 ரன்கள் தேவை என்று களமிறங்கிய மே.இ.தீவுகள். 80/4 என்று தடுமாறிய போது, டேரன் பிராவோ, பிளாக்வுட் ஜோடி இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 108 ரன்களைச் சேர்த்தது. டேரன் பிராவோ 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார்.

முதல் இன்னிங்சில் அதிரடி 85 ரன்களை எடுத்த பிளாக்வுட் இம்முறை நிதானம் கடைபிடித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவில் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறி சர்ச்சையில் சிக்கி பிறகு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரிலும் சோபிக்காமல் போன மே.இ.தீவுகளுக்கு சிம்மன்ஸ் வழிகாட்டுதலின் கீழ் ஒரு அரிய டெஸ்ட் வெற்றி கிட்டியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கொலின் கிரேவ்ஸ், இந்தத் தொடருக்கு முன்னதாக ‘தரமற்ற’ அணி என்று மேற்கிந்திய அணியை வர்ணித்திருந்தார்.

சந்தர்பால் விக்கெட்டை கைப்பற்றிய ஆண்டர்சன் 397 விக்கெட்டுகளில் இருக்கிறார். ஆஷஸ் தொடரில் நிச்சயம் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

2012-ம் ஆண்டு அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக 72 ரன்களுக்குச் சுருண்ட பிறகு இங்கிலாந்தின் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கை இதுவே. ஸ்டோக்ஸ் 32 ரன்களையும், கிறிஸ் பட்லர் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களையும் எடுத்தாலும் இங்கிலாந்தினால் முன்னிலையை 200 ரன்களுக்குக் கொண்டு செல்லமுடியவில்லை.

ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்ட நாயகனாக ஜெர்மைன் பிளாக்வுட் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அடுத்ததாக அயர்லாந்துடன் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. பிறகு நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

மே.இ.தீவுகளுக்கு ஒரு மாதம் ஓய்வு, அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிராங்க் வொரல் டிராபியில் விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x