Published : 09 Sep 2015 03:14 PM
Last Updated : 09 Sep 2015 03:14 PM

3-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

பென் ஸ்டோக்ஸ் சச்சரவுகளுக்குப் பிறகு நேற்று ஓல்ட் டிராபர்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவர்களில் 207 ரன்களுக்குச் சுருண்டது.

32 ஓவர்களில் 200/2 என்று இருந்த இங்கிலாந்து உண்மையில் 300 ரன்களை விடவும் அதிகமாக ரன்கள் குவித்திருக்க வேண்டும். குறிப்பாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுட 63 ரன்களையும், மோர்கன் 56 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஜேம்ஸ் டெய்லர், இவர் பொதுவாக அதிரடி முறையில் ஆடக்கூடியவர், நேற்று 114 பந்துகளில் 5 பவுண்டரிகளை மட்டுமே அடித்து 101 ரன்கள் என்று சதம் கண்டார்.

ஆனால் இவர் முதல் பவுண்டரி அடிக்க 53 பந்துகள் எடுத்துக் கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் 8-வது விக்கெட்டாகவே அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் 14 ரன்களில் மேக்ஸ்வெலிடம் அவுட் ஆனார். மொயீன் அலி, லியாம் பிளங்கெட் ஆகியோர் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 300 ரன்களை எடுத்தது.

மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 79 ரன்கள் விளாசித் தள்ளப்பட்டார். பேட்டின்சன் 6 ஒவர்களை வீசி 36 ரன்களுக்கு விக்கெட் இல்லை. கமின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா தனது இன்னிங்ஸை தொடங்கிய போது ஜோ பர்ன்ஸ் 9 ரன்களில் ஸ்டீவ் ஃபின்னிடம் வீழ்ந்தார், ஆனால் அதன் பிறகு ஏரோன் பின்ச் (53), ஸ்டீவ் ஸ்மித் (25) ஆகியோர் ஸ்கோரை 15 ஓவர்களில் 75 ரன்களுக்கு உயர்த்தினர். இந்நிலையில்தான் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஸ்டீவ் ஃபின் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். முதலில் அவர் ஷார்ட் மிட்விக்கெட்டில் நிறுத்தப்படக்கூடியவர் அல்ல, ஆனால் ஏனோ அங்கு நிறுத்தப்பட்டார்.

ரஷீத் பந்தை மேலேறி வந்து லெக் திசையில் ஆடினார் ஸ்மித், பந்து காற்றில் செல்ல ஸ்டீவ் ஃபின் அந்தரத்தில் ஒரு டைவ் அடித்து வலது கையை நீட்டி பிடிக்க முடியாத ஒரு கேட்சை பிடித்து அசத்தினார். அதே போல் ஆல்ரவுண்டர் ஆஸ்டன் ஆகருக்கு ஜேசன் ராய் பிடித்த ஒரு கேட்சும் அற்புதமானது.

ஏரோன் பின்ச் 60 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ரஷீத் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கேட்ச் கொடுத்தார்.

மேக்ஸ்வெல் (17), பெய்லி (25) ஆகியோரை மொயீன் அலி காலி செய்தார், மேக்ஸ்வெல் 2 ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார், 3-வது முயற்சியில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. வரும் வெள்ளிக்கிழமை லீட்ஸில் 4-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

ரஷீத் (2/41) அருமையாக பந்தை திருப்பினார், மொயீன் அலி (3/32) கடந்த போட்டியில் அடி வாங்கியதை நினைவில் கொண்டு சிறப்பாக வீச ஆஸ்திரேலியா 172/9 என்று ஆனது, கடைசியில் மேத்யூ வேட் (42) நின்று ஆட ஸ்கோர் 207 ரன்களை எட்டியது. ஸ்டீவ் ஃபின் அருமையான ஒரு கேட்சுடன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லியாம் பிளங்கெட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x