Published : 29 Sep 2016 03:19 PM
Last Updated : 29 Sep 2016 03:19 PM

2-வது ஒருநாள்: வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் வெற்றி

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது.

டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸய் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார், அந்த அணி 49.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனையடுத்து வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸாய் (57), மொகமது நபி (49) ஆகியோர் 5-வது விக்கெட்டுக்காக 107 ரன்களைச் சேர்த்ததே வங்கதேச தோல்விக்குக் காரணம். இருவரும் ஆட்டமிழந்த போது 174/6 என்று ஆப்கான் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது 40.3 ஓவர்களே ஆகியிருந்தது. ஆனால் நஜிபுல்லா சத்ரான் பின்கள வீரர்களைக் கொண்டு இலக்கை எட்ட உதவினார். கடைசி 35 வெற்றி ரன்களை எடுக்க ஆப்கான் அணி 9 ஓவர்கள் போராட வேண்டியிருந்தது.

மொகமது ஷசாத், 35 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களை எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறும்போது ஆப்கான் அணி 63/4 என்று இருந்தது. அப்போது நபி, ஸ்டானிக்சாய் இணைந்தனர், ஷசாத் அவுட் ஆன அதே ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசப்பட்டாலும் அடுத்த பவுண்டரி வருவதற்கு போராட வேண்டியதாயிற்று.

ஆனால் இருவரும் பொறுமையுடனும் நிதானத்துடன் ஆடினர், ஸ்டானிக்சாய் தனது 6-வது ஒருநாள் அரைசதத்தை எடுக்க, மொகமது நபி 49 ரன்களில் மஷ்ரபே பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே ஸ்டானிக்சாயும் மொசாடெக் ஹுசைனிடம் வீழ்ந்தார், லெக் திசையில் டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷாகிப் உல் ஹசன் 4 விக்கெட்டுகளை 47 ரன்களுக்குக் கைப்பற்றினார். மஷ்ரபே அடுத்த ஓவரை வீச நஜிபுல்லா, அஷ்ரப் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள மஷ்ரபே ஓவரும் முடிவுக்கு வந்தது.

கடைசியில் 13 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் முஷ்பிகுர் ரஹிம் ஸ்டம்பிங் ஒன்றை ஸத்ரானுக்கு நழுவ விட்டார். கடைசி ஓவரில் ஸ்கோர்கள் சமமான போது நஜிபுல்லா ஆட்டமிழக்க கடைசியில் தவ்லத் ஸத்ரான் பவுண்டரி அடித்து ஆப்கானுக்கு ஒரு அரிய சர்வதேச வெற்றி கிட்டியது.

முன்னதாக வங்கதேசம் 111/2 என்ற நிலையிலிருந்து ஆட்டத்தை கோட்டை விட்டது. காரணம் ரஷித் கான், இவர் 3 விக்கெட்டுகளை 35 ரன்களுக்குக் கைப்பற்றினார். தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் தலா 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மஹமுதுல்லா 25 ரன்களில் பவுல்டு ஆனார். முஷ்பிகுர் ரஹின் 38 ரன்களையும், மொசாடெக் ஹுசைன் 45 பந்துகளில் 45 ரன்களையும் எடுக்க, கடைசியில் இவர் ரூபல் ஹுசைனுடன் சேர்ந்து 43 ரன்களைச் சேர்த்திருக்கா விட்டால் வங்கதேசம் 165 ரன்களிலேயே முடிந்திருக்கும். கடைசி 7 விக்கெட்டுகளை 86 ரன்களில் வங்கதேசம் இழந்ததே ஆப்கான் வெற்றிக்கு திருப்பு முனை ஏற்படுத்தியது.

ஆட்ட நாயகனாக மொகமது நபி தேர்வு செய்யப்பட்டார், காரணம் இவர் பேட்டிங்கில் 49 முக்கிய ரன்களை எடுத்ததோடு, பவுலிங்கில் ஷாகிப் உல் ஹசன் (17), மோர்டசா (2) ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 10 ஓவர்கள் 3 மெய்டன் 16 ரன்கள் 2 விக்கெட் என்று அபாரமாக செயல்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x