Last Updated : 31 Jan, 2015 10:03 AM

 

Published : 31 Jan 2015 10:03 AM
Last Updated : 31 Jan 2015 10:03 AM

1992 திணறவைத்த திருப்புமுனைகள்

1992 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திருப்புமுனைகளுக்குப் பஞ்சமில்லாதது. குறிப்பாக இந்தியாவுக்கு. முதல் மூன்று போட்டிகளும் இந்தியாவுக்குத் துரதிர்ஷ்டவசமாகவே அமைந்தன. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 ரன்னில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன்னில் தோல்வி. இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா விளையாடிய போட்டி. கடைசிப் பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களை எடுத்தது. இந்திய அணி ஆடியபோது 17-வது ஓவரில் சிறிது நேரம் மழை பெய்தது. எனவே ஓவர் 47ஆகக் குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்த தருணம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. மழை பெய்ததால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் இலக்கில் 2 ரன்கள் மட்டுமே குறைக்கப்பட்டது அப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான்

முதல் மூன்று போட்டிகளும் இப்படி ஆனதால் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. இந்தச் சிக்கலான சூழ்நிலையில் மார்ச் 4 அன்று பாகிஸ்தானை இந்திய அணி சிட்னியில் சந்தித்தது.

இதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் சந்தித்துக் கொள்ளும் முதல் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடிச் சேர்த்த 54 ரன்கள், ஜடேஜாவின் 46 ரன்கள், கபில்தேவின் 35 ரன்கள் இந்தியா 216 ரன்களை எடுக்க உதவின. பாகிஸ்தான் அணியில் அமீர் சோகைல் மட்டுமே சிறப்பாக ஆடி 62 ரன் எடுத்தார்.

இந்தியாவின் பந்து வீச்சும் களத் தடுப்பும் துடிப்பாக இருந்தன. இதனால் ரன் சேகரிக்கத் திணறிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான். இதன் பிறகு உலகக் கோப்பை யில் இந்தியாவை பாகிஸ்தானால் வெற்றி கொள்ளவே முடியவில்லை.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்ற ஆட்டத்திலும் மழை தொடர்ந்து குறுக்கிட்டது. டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி வெற்றது. மற்ற போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை.

தொடக்க நிலையில் தடுமாற்றம்

இந்தியாவுக்கு மழை பெரும் இடைஞ்சலாக இருந்தது. போட்டிக்குப் போட்டி தொடக்க ஜோடி மாறிக்கொண்டே இருந்தது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இலங்கை, ஜிம்பாப் வேவுக்கு எதிரான போட்டிகளில் காந் தும் கபில்தேவும் தொடக்க வீரர்க ளாகக் களமிறங்கினார்கள்.

தென்னாப் பிரிக்காவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் மஞ்ச் ரேக்கரும். பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் ஜடேஜாவும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த், ரவிசாஸ்திரி. இப்படித் தொடக்க ஜோடி மாறிக்கொண்டே இருந்தது.

சச்சின் டெண்டுல்கர் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் சோடை போகவில்லை. 7 இன்னிங்ஸ் களில் 283 ரன்கள் (சராசரி 40.4) எடுத் தார். அதில் மூன்று அரை சதங்கள். ஜிம்பாப்வேக்கு எதிராக 81, நியூசிலாந் துக்கு எதிராக 84 ரன்களை அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 54 வெற்றிக்குப் பெரிதும் உதவியது. அனைத்து போட்டிகளிலும் பந்து வீசினார். மொத்தம் 35 ஓவர்கள் வீசிய அவர் ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். கொடுத்த ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 4.5.

இரு வெற்றிகளை மட்டுமே பெற்ற இந்தியா புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. 8 மற்றும் 9-வது இடங்களை முறையே அப்போதைய கற்றுக்குட்டி அணிகளான இலங்கையும் ஜிம்பாப்வேவும் பிடித்தன. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 4 வெற்றிகளுடன் மூட்டையைக் கட்டியது. பாகிஸ்தான் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆச்சரியம் தந்த அணிகள்

இந்தத் தொடரில் நியூசிலாந்து 8 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்று ஆச்சரியப் பட வைத்தது. கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. அதிகம் எதிர்பார்க் கப்படாத தென்னாப்பிரிக்கா 5 வெற்றி களுடன் தனது முதல் உலகக் கோப்பை யிலேயே அரையிறுதியில் காலடி எடுத்து வைத்தது. இந்த அணிகள் தவிர இங்கிலாந்தும் அரையிறுதிக்குச் சென்றது.

‘குரங்கு’ தவ்வல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடினார் ஜாவித் மியாண்டட். 110 பந்துகளைச் சந்தித்த அவர் 40 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் பந்து கால் காப்பில் படும்போதேல்லாம் விக்கெட் காப்பாளராக இருந்த கிரண் மோரே குதித்து குதித்து அம்பயரிடம் அவுட் கேட்டுக்கொண்டே இருந்தார்.

இதற்காக ஒரு கட்டத்தில் கிரண் மோரேயிடம் வாக்குவாதமும் செய்தார் மியாண்டட். அதன் தொடர்ச்சியாக பேட்டைக் கையில் தூக்கிக்கொண்டு ‘குரங்கு’ தாவுவது போல குதித்து கிரண் மோரேவைக் கிண்டல் செய்தார்.

கிரண் மோரேவுக்கு எதிராக குரங்கு தவ்வலில் ஈடுபட்ட மியாண்டட்.

ரோட்ஸின் புலிப் பாய்ச்சல்

லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பிரிஸ்பேனில் விளையாடின. மேக்மில்லன் வீசிய பந்தை இன்சமாம்-உல்-ஹக் அடிக்க முயற்சி செய்தார். பந்து கால் காப்பில் பட்டு அருகிலேயே விழுந்தது. பக்கத்தில் யாரும் இல்லை என்பதால் விரைவாக ஒரு ரன் எடுக்க விரும்பி ஓடிய இன்சமாம் கால்வாசி தூரத்தைக் கடந்துவிட்டார். எதிர் முனையில் இருந்த இம்ரான் கான், ரன் வேண்டாம் என்று கூற, திரும்பவும் கிரீஸுக்குள் வர இன்சமாம் முயற்சித்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஜான்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தைக் கையில் எடுத்தார். ஸ்டெம்ப்புக்குச் சில அடி தூரம் வந்ததும் அப்படியே புலிபோலப் பாய்ந்து ஸ்டெம்புகளைத் தகர்த்து இன்சமாமை ரன் அவுட் செய்தார். உலகக் கோப்பையில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலேயே மிகவும் சிறப்பான ரன் அவுட் இது எனப் புகழப்படுகிறது.

ஜான்டி ரோட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x