Published : 04 Aug 2016 08:08 AM
Last Updated : 04 Aug 2016 08:08 AM

1988 சியோல் ஒலிம்பிக்: பென் ஜான்சன் - சாதனையும், சோதனையும்

தென் கொரிய தலைநகர் சியோலில் 24-வது ஒலிம்பிக் போட்டி 1988-ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்றது. 160 நாடுகளைச் சேர்ந்த 6,197 வீரர்கள், 2,194 வீராங்கனைகள் என மொத்தம் 8,391 பேர் கலந்து கொண்டனர். 27 விளையாட்டுகளில் 263 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

சோவியத் யூனியன் 55 தங்கம், 31 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 132 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. கிழக்கு ஜெர்மனி 37 தங்கம், 35 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், அமெரிக்கா 36 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 94 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

தகுதி நீக்கம்

கனடாவின் பென் ஜான்சன் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதோடு, புதிய உலக சாதனையும் படைத்தார். ஆனால் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது சோதனையில் தெரியவந்தால் அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

குத்துச் சண்டையில் சர்ச்சை

அமெரிக்காவின் ராய் ஜோன்ஸ், தென் கொரியாவின் பார்க் சி-ஹன் ஆகியோரிடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் பார்க் சி-ஹென் வெற்றி பெற்றார். ஆனால் நடுவர்கள் ஜோன்ஸுக்கு எதிராக செயல் பட்டதாகவும், கொரிய ஏற்பாட்டாளர்கள் தங்கள் நாட்டு வீரருக்கு சாதகமாக செயல்படுமாறு நடுவரிடம் முன்கூட்டியே பேரம் பேசிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் அந்த 3 நடுவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஜோன்ஸ் சிறந்த குத்துச்சண்டை வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்டெபி கிராப்

64 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் டென்னிஸ் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க வீராங்கனை ஸ்டெபி கிராப் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அர்ஜென் டினாவின் கேப்ரிலா சபாட்டினியை வீழ்த்தினார் ஸ்டெபி கிராப்.

கருணை உள்ளம்

படகுப் போட்டி நடத்தப்பட்டபோது கடுமையான காற்று வீசியது. அப்போது போட்டியாளர் ஒருவர் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அதைப் பார்த்த கனடா வீரர் லாரன்ஸ் போட்டியைக் கைவிட்டுவிட்டு அவரைக் காப்பாற்றி, ரோந்துப் படகில் வந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் போட்டியில் கலந்துகொண்டார்.

இதனால் 2-வது இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த அவரால் 21-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. லாரன்ஸின் துணிவையும், தியாகத்தையும் பாராட்டி, அவருக்கு சிறப்பு விருது வழங்கியதோடு, வெள்ளிப் பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.

யூரி ஸகாரெவிச்

சோவியத் யூனியனின் பளுதூக்குதல் வீரர் யூரி ஸகாரெவிச் ஆடவர் ஹெவி வெயிட் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 210 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 245 கிலோ என மொத்தம் 455 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். இவர் 1983-ம் ஆண்டு உலக சாதனை நிகழ்த்த முயற்சி செய்தபோது, அவருடைய கைமூட்டு முறிந்து இடம்பெயர்ந்தது. இருப்பினும் செயற்கை மூட்டு பொருத்திய பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனைப் படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x