Published : 27 Mar 2017 05:37 PM
Last Updated : 27 Mar 2017 05:37 PM

137 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா; தொடரைக் கைப்பற்றும் வெற்றிப்பாதையில் இந்தியா

தரம்சலா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்சில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 106 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3-ம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது, 4-ம் நாளான நாளை வெற்றிக்குத் தேவை 87 ரன்களே என்ற நிலையில் லோகேஷ் ராகுல் 13 ரன்களுடனும் முரளி விஜய் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்புகள் மாறி மாறி வந்த தொடரில் இந்த டெஸ்ட் போட்டயில், முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு, இந்திய வெற்றி உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது, ஆஸ்திரேலியா ஏதாவது அதிசயம் நிகழ்த்தினாலோ அல்ல்து இந்தியா விவரிக்க முடியாத அளவுக்கு படுமோசமாக ஆடினாலோதான் ஆஸ்திரேலியாவுக்கு தொடரை வெல்ல வாய்ப்பு கிட்டும், மற்றபடி பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி மீட்க இன்னும் 86 ரன்களே தேவைப்படுகிறது.

இன்று காலை ஜடேஜாவின் தைரியமான அரைசதத்திற்குப் பிறகு 332 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்து 32 ரன்கள் என்ற முக்கியமான முன்னிலை பெற்றது. முழு விவரம்:>ஜடேஜாவின் அபார அரைசதத்துடன் இந்திய அணி 332 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பு

உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா, இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சு, ரஹானேயின் அருமையான கேப்டன்சி, சஹாவின் பெரும்பங்களிப்பு செய்த விக்கெட் கீப்பிங் ஆகியவற்றினால் ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருட்டியது, இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற புவனேஷ் குமார் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசப்பட்ட பிறகு அதே ஷார்ட் பிட்ச் பந்தில் ஸ்மித் விக்கெட்டை பவுல்டு முறையில் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா தன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய போது முதல் இன்னிங்ஸ் போலவே டேவிட் வார்னருக்கு 3-வது ஸ்லிப்பில் கருண் நாயர் கையில் வந்த கேட்சைக் கோட்டை விட்டார், ரஹானே கேப்டன் என்பதால் அவர் பிழைத்தார், கோலி கேப்டனாக இருந்தால் உடனேயே கருண் நாயரை டீப் தேர்ட் மேன் அல்லது டீப் ஃபைன் லெக்கிற்கு பீல்ட் செய்ய அனுப்பியிருப்பார்.

ஆஸ்திரேலியா மடிந்த விதம்:

ஆனாலும் வார்னர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உமேஷ் யாதவ்வின் அருமையான அவுட் ஸ்விங்கரை வார்னர் ஆட முற்பட அது விளிம்பில் பட்டு சஹாவிடம் கேட்ச் ஆனது, வார்னர் 6 ரன்களில் வெளியேறினார். ஆஸி. 10/1.

ஸ்மித் களமிறங்கி உடனேயே ஒரு பவுண்டரியையும் புவனேஷ் குமாரை 2 பவுண்டரியையும் அடித்து 15 பந்தில் 17 என்று அச்சுறுத்தினார், ஆனால் புவனேஷ் குமார் 2 பவுண்டரிகள் சென்றாலும் ஷார்ட் பிட்ச் உத்தியை மாற்றாமல் அடுத்த பந்தையே ஷார்ட் பிட்ச் ஆக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசினார், ஸ்மித் புல் ஷாட முற்பட பந்து அவர் நினைத்த வாகிற்கு வரவில்லை, மட்டையின் அடி விளிம்பில் பட்டு ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

இந்த விக்கெட் இந்திய பவுலர்களுக்கு உற்சாகம் அளித்தது. மற்றொரு தொடக்க வீரர் ரென்ஷா உமேஷ் யாதவ்வின் அருமையான மார்புயர பந்திற்கு ‘ஸ்கொயர்’ ஆனார், பந்து மட்டையின் விளிம்பைத் தொட்டு சஹாவிடம் தஞ்சம் அடைந்தது. ஆஸி. 31/3 என்று பதற்றமடைந்தது.

இந்நிலையில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல், அதி தடுப்பு வீரர் ஹேண்ட்ஸ்கம்ப் இணைந்தனர், இதில் மேக்ஸ்வெல், குல்தீப் யாதவ்வை அடித்து ஆடத் தொடங்கினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 56 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களில் இருந்த ஹேண்ட்ஸ்கம்ப், அஸ்வின் வீசிய பந்திற்கு பின்னால் சென்றார், பந்து திரும்பும் என்று நினைத்தார் ஆனால் திரும்பவில்லை அப்படியென்றாலும் ஆடாமல் விட்டிருக்கலாம் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்று தெரியாத அவர் திரும்பாத பந்தை தொட்டார், ரஹானே மிக அருமையாக அதைக் கேட்ச் பிடித்தார்.

மார்ஷ் 1 ரன் எடுத்தபோது ரஹானேயின் அதி நெருக்கமான களவியூகத்தில் ஜடேஜாவின் பந்து ஒன்று அதிகமாகத் திரும்பி எழும்ப ஷாட் லெக்கில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 92/5 என்று ஆஸ்திரேலியா தடுமாறியது.

கிளென் மேக்ஸ்வெல் அருமையாக ஆடி 60 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்த நிலையில், எந்த அடிப்படையில் அஸ்வின் ஓவர் த விக்கெட்டில் வீசிய ஆஃப் ஸ்பின் பந்தை மட்டையில் ஆடாமல் கால்காப்பில் வாங்க முடிவெடுத்தார் என்று தெரியவில்லை, எல்.பி. தீர்ப்பளிக்கப்பட்டது, இவரது மேல்முறையீடும் மறுக்கப்பட ஆஸ்திரேலியா ஒரு ரிவியூவையும் இழந்தது.

அடுத்தாக கமின்ஸ், 12 ரன்கள் எடுத்த இவருக்கு டெய்ல் எண்டருக்கு வீசும் அருமையான ஒரு பந்தை வீசினார் ஜடேஜா. அழகாக பிளைட் செய்து டிரைவ் ஆட வா வா என்று அழைத்தார், கமின்ஸ் இசைந்தார், எட்ஜ் எடுத்தது மீண்டும் ரஹானே கேட்ச். ஓகீஃப் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தை சில்லி பாயிண்டில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். லயன் ரன் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்தில் விஜய்யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹேசில்வுட்டுக்கு அஸ்வின் ஸ்லிப்பில் குனிய முடியாமல் ஒரு கேட்சை விட்டார், பிறகு அஸ்வின் பந்தில் விஜய் ஒரு கேட்சை விட்டார். ஆனால் அடுத்து ஒரு பந்தை அஸ்வின் வேகமாக வீச எல்.பி. தீர்ப்பளிக்கப்பட்டது, ரிவியூ வீணானது. மேத்யூ வேட் ஒரு முனையில் 90 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஆஸ்திரேலியா 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருண்டது, இந்திய தரப்பில் ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நாயகன் குல்தீப் யாதவ்வுக்கு 5 ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டது.

106 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் ஒரு அதிர்ஷ்ட பவுண்டரியுடன் மேலும் 2 அருமையான பவுண்டரிகளுடன் கமின்ஸ் ஓவரை அதிரடியில் தொடங்கினார். ஆட்ட முடிவில் இந்திய அணி 19/0. பார்டர்-கவாஸ்கர் கோப்பை கோலியின் கண்களின் முன் நிழலாடத் தொடங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x