Published : 23 Aug 2014 03:52 PM
Last Updated : 23 Aug 2014 03:52 PM

13 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் படுதோல்வி; தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

செயிண்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தை 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் 247/7 என்று முடிய, வங்கதேசம் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய அழைத்தார். கிறிஸ் கெய்ல் தனது அனாயாச மட்டைச் சுழற்றலில் இறங்கினார். ஆனால் கர்க் எட்வர்ட்ஸ் அல் அமின் ஹுசைன் பந்தில் ஸ்டம்ப்களை இழந்தார்.

டேரன் பிராவோ, கிறிஸ் கெய்ல் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 88 ரன்களைச் சேர்த்தனர். கிறிஸ் கெய்ல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் நேற்று அரைசதம் எடுத்தார். கிறிஸ் கெய்ல். தனது வழக்கமான பாணியில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 58 ரன்களை விளாசினார்.

முதலில் வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரபே மோர்டசா பந்தை நேராக சிக்சருக்குத் தூக்கினார். அதன் பிறகு புல்டாஸ், ஷாட் பிட்ச் என்று அவருக்கு உண்மையில் சில பந்துகளைப் போட்டுக் கொடுத்தனர்.

கிறிஸ் கெய்லுக்குப் பிறகு வங்கதேச ஸ்பின்னர்கள் முழுக்கட்டுப்பாட்டுடன் வீசினர். இதனால் ராம்தின், டிவைன் பிராவோ, பொலார்ட் ஆகியோர் துவக்கம் கண்டாலும் பெரிய அளவுக்கு பந்துகளை விரட்டியடிக்க முடியவில்லை. டேரன் பிராவோ 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரசாக் விக்கெட் எடுக்காவிட்டாலும் சரியான முறையில் வீசி வெஸ்ட் இண்டீஸைக் கட்டுப்படுத்தினார்.

பொலார்ட் 20 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து மோர்டசாவின் பந்தில் ஆட்டமிழந்தபோது வெஸ்ட் இண்டீஸ் 46.4 ஓவர்களில் 222 ரன்களையே எடுத்திருந்தது. அதன் பிறகு 247 வரைதான் வர முடிந்தது.

மோர்டசா கெய்லிடம் சற்றே வாங்கினாலும் கடைசியில் 10 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் தமீம் இக்பால் மட்டும் அதிகபட்சம் 37 ரன்களை எடுத்தார். அதற்குப் பிறகு வந்த வீரர்களின் ஸ்கோர் இவ்வாறாக அமைந்தது: 7,1,4,6,0,6,2,2,0,0.

57/3 என்ற நிலையிலிருந்து மடமடவென விக்கெட்டுகள் சரிந்தது. பெவிலியனில் அடுத்த வீரர் கால்காப்பு கட்டக்கூட நேரமில்லாத கதியில் விக்கெட்டுகள் சரிந்தது. அடுத்த 13 ரன்களில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து வங்கதேசம் பரிதாபமாக 70 ரன்களுக்குச் சுருண்டது.

57/3 என்று இருந்த போது புதிர் ஸ்பின்னர் சுனில் நரைன், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் ஆல்ரவுண்டர் மஹமுதுல்லா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி சரிவைத்தொடங்கி வைத்தார். 6வது விக்கெட்டாக தமீம் இக்பால் அவுட் ஆனார்.

சுனில் நரைன் 7 ஓவர்கள் வீசி 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கிமார் ரோச் 6 ஓவர்கள் வீசி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x