Last Updated : 15 Apr, 2016 02:32 PM

 

Published : 15 Apr 2016 02:32 PM
Last Updated : 15 Apr 2016 02:32 PM

10 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்: புனே அணியின் டு பிளெஸிஸ் ஆதங்கம்

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 6-வது போட்டியில் தோனி தலைமை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரெய்னா தலைமை குஜராத் லயன்ஸ் வீழ்த்தியது.

இந்தப் போட்டி குறித்து கூறிய புனே அணியின் ஃபா டுபிளெசிஸ் ‘10 ரன்கள் தங்கள் அணி குறைவாகப் பெற்றதாக’ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

முதலில் பேட் செய்த புனே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. டுபிளெஸிஸ்தான் அதிகபட்சமாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி ஏரோன் பிஞ்ச் (50), மெக்கல்லம் (49) ஆகியோரின் காட்டடி தர்பாரில் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மீண்டும் தமிழக லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களையும் வீசினார் 26 ரன்கள் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

ஆர்.பி.சிங், இசாந்த் சர்மாவின் தொடக்க ஓவர்களில் 4 நான்குகள் 2 சிக்சர்கள் என்றவுடனேயே பவர் பிளேயின் கடைசி ஓவரி முருகன் அஸ்வினிடம் கொடுத்தார் தோனி, ஆனால் ஏரோன் பிஞ்ச் அவருக்கு காட்டுக் காட்டென்று காட்டி 4 பவுண்டரிகளை விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது. பிறகு சிக்கன வீச்சாளர் ரஜத் பாட்டியாவை லாங் ஆன் மே;ல் 2 சிக்சர்கள் அடித்து ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் குஜராத் லயன்ஸ் 8.3 ஓவர்களில் 85 என்று அதிரடி தொடக்கம் கண்டது.

மெக்கல்லமும் மோசமான பவுலிங்கை பிரித்தார். ரவிச்சந்திரன் அஸ்வினின் யார்க்கரில் மெக்கல்லம் பந்து சரியாக சிக்காமல் கிரீஸுக்கு வெளியே தடுமாற வழக்கமான ஸ்டம்பிங்கைக் கோட்டை விட்டார் தோனி. மெக்கல்லம் ஆட்டம் இழந்த பிறகு ரெய்னா, பிராவோ வெற்றியை உறுதி செய்ய குஜராத் லயன்ஸ் வென்றது.

இந்த தோல்வி குறித்து புனே அணியின் டு பிளெசிஸ் கூறும்போது, “இன்னும் கூடுதலாக 10 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போதுமான ரன்கள் இல்லை. கடைசியில் விக்கெட்டுகளை இழந்தோம். விரைவில் ரன் குவிப்பில் ஈடுபடும் தரமான வீரர்கள் எங்கள் அணியில் இருந்தும் எங்கள் விருப்பத்துக்கு இணங்க ரன்களைக் குவிக்க முடியவில்லை.

குஜராத் அணியில் பந்தின் வேகத்தைக் குறைத்து வீசும் திறமை கொண்ட வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல கட்டர்களை வீசினர், சரியான இடத்திலும் வீசினர். ஸ்பின்னர்களும் துல்லியமாக வீச எங்களால் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது.

இந்த பிட்சில் சரியான இடத்தில் பந்தை இறக்க முடிந்தால் பேட்ஸ்மென்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் எங்களால் அவ்வாறு வீச முடியவில்லை.

நாங்கள் புதிய அணி எனவே பேட்டிங், பவுலிங் என்று சரியான அணிச்சேர்க்கையை இனிமேல் களமிறக்குவோம்.

நாங்கள் பேட் செய்யும் போது முதல் 10 ஒவர்கள் நன்றாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு பிட்ச் மந்தமானது, தாக்குதல் ஆட்டம் ஆடமுடியவில்லை.

இரு அணிகளுமே நன்றாக பேட் செய்தனர், அவர்களுக்கு இலக்கு என்னவென்று தெரிந்துள்ளதே வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x