Published : 14 Apr 2016 10:15 AM
Last Updated : 14 Apr 2016 10:15 AM

10 பந்துகளில் 35 ரன்கள் குவித்து சாதனை: சர்பிராஸ் கானுக்கு வார்னர், வாட்சன் பாராட்டு

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 10 பந்துகளில் 35 ரன்களைக் குவித்த இந்திய வீரர் சர்பிராஸ் கானுக்கு ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை விளாசியது. அந்த அணியில் விராட் கோலி 75 ரன்களையும், டிவில்லியர்ஸ் 82 ரன்களையும் நொறுக்கித் தள்ளினர். குறிப்பாக அந்த அணிக்காக ஆடிய 18 வய தான இளம் இந்திய வீரர் சர்பிராஸ் கான் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 35 ரன்களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.

இதைத்தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 25 பந்துகளில் 58 ரன்களை எடுத்தபோதிலும் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 45 ரன்களில் தோற்றது. இப்போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் வாட்சன், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட் களைக் கைப்பற்றினர். 82 ரன்களைக் குவித்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியைப் பற்றி பெங்களூரு அணிக்காக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்பிராஸ் கானின் ஆட்டம் என்னை பிரமிக்க வைத்தது. அவர் எல்லா விதமான ஷாட்களையும் சிறப்பாக ஆடுகிறார். இதற்காக அவர் கடுமையாக பயிற்சி பெற்றிருப்பது அவரது ஆட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது.

ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி, கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் சேர்ந்து ஆடுவது சிறந்த அனுபவமாக உள்ளது. அதிலும் இன்றைய தினம் டிவில்லியர்சின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த தொடரின் மூலம் கிறிஸ் கெய்லுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு வாட்சன் கூறினார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:

இப்போட்டியில் கோலியும், டிவில்லியர்சும் சிறப்பாக ஆடினர். இருப்பினும் சர்பிராஸ் கானின் அதிரடி ஆட்டம்தான் அந்த அணி கடைசி ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க உதவியது. அவரது துடிப்பான பேட்டிங்கால் பெங்களூரு அணி கடைசி 4 ஓவர்களில் 63 ரன்களைக் குவித்தது. நானும் அந்த நேரத்தில் பந்துவீச்சாளருக்கு உரிய ஆலோசனைகளை வழங்காமல் தவறு செய்துவிட்டேன்.

இவ்வாறு வார்னர் கூறினார்.

இப்போட்டியின்போது காயம் அடைந்ததால் அடுத்த 2 போட்டி களில் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இதைத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x