Published : 05 Feb 2017 11:27 AM
Last Updated : 05 Feb 2017 11:27 AM

ஹைதராபாத்தில் இன்று வங்கதேசம் - இந்தியா ஏ பயிற்சி ஆட்டத்தில் மோதல்

வங்கதேசம் - இந்தியா ஏ அணிகள் இடையிலான இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு இந்த ஆட்டம் முக்கியமானதாக கருதப் படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டிக்கான பயிற்சின்போது ஹர்திக் பாண்டியாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து குணமடைந்த அவர், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முடிவடைந்த குறுகிய வடிவிலான தொடர்களில் பங்கேற்றார்.

அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜெயந்த் யாதவ், சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் அரியாணா அணிக்கு எதிராக களமிறங்கினார். இவர்களுடன் கேப்டன் அபிநவ் முகுந்துக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

6 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள அவர் இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிப்பார். மேலும் இவர்கள் 3 பேரும், முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்கதேச அணிக்கு எதிராக 9-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் அபிநவ் முகுந்துக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைப்பது அரிதுதான். தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோரில் ஒருவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே அபிநவ் முகுந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையே உள்ளது.

ஆனால் ஆல்ரவுண்டர்கள் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும். இதனால் இவர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும்.

அபிநவ் முகுந்த் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடரில் 3-வது தொடக்க வீரராககூட இடம் பெற வாய்ப்புள்ளது.

இவர்களை தவிர ரஞ்சி கோப்பை யில் அதிக ரன்கள் குவித்த பிரியங்க் பன்சால், இளம் வீரர்களான இஷான் கிஷன், ரிஷப் பன்ட் ஆகியோருக்கு இந்த ஆட்டத்தின் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

தஸ்கின் அகமது, ஷாகில் அல்-ஹசன் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பந்து வீச்சை எதிர்த்து விளையாடுவதற்கு பன்சால் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும்.

இதபோல் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சபாஷ் நதீமுக்கு, வங்கதேச அணியின் முன்னணி வீரர்களான முஸ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால், மோமினுல் ஹக் உள்ளிட்டோருக்கு எதிராக பந்து வீசும் அனுபவம் கிடைக்கும்.

மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாக அனிகெத் சவுத்ரி, ஷமா மிலிந்த் ஆகிய இரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஆட்டத்தில் விளையாட உள்ளனர். ஜாகீர்கானின் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு இதுவரை சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அமையவில்லை.

37 வயதான ஆசிஷ் நெஹ்ரா டி20 ஆட்டங்களில் மட்டுமே விளை யாடி வருகிறார். இதனால் பயிற்சி ஆட்டத்தில் அனிகெத் சவுத்ரி, ஷமா மிலிந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தேர்வுக்குழுவினர் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்யக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x