Last Updated : 27 May, 2016 05:34 PM

 

Published : 27 May 2016 05:34 PM
Last Updated : 27 May 2016 05:34 PM

விராட் கோலி உத்திகளில் சமரசம் செய்து கொள்ளாமலேயே ரன் குவிக்கிறார்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

இந்தியாவின் தற்போதைய நம்பர் 1 பேட்ஸ்மென் விராட் கோலியின் ரன் குவிப்பு பற்றி முன்னாள் நம்பர் 1 சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார்.

கல்ஃப் நியூஸுக்கு சச்சின் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நேரான மட்டையுடன் நல்ல கிரிக்கெட் ஷாட்கள் மூலம் விராட் ரன் குவிக்கிறார். அவர் ஒரு சிறப்பு வாய்ந்த திறமையாளர். அவர் தனது ஆட்டத்திற்காக கடுமையாக உழைக்கிறார். அவரது ஒழுக்கம், கட்டுக்கோப்பு மற்றும் அர்ப்பணிப்பை பலரும் பின் பற்ற வேண்டும்.

அனைத்து கிரிக்கெட் வடிவங்களையும் அவர் தனது பேட்டிங் உத்தியில் சமரசம் செய்து கொள்ளாது அணுகுகிறார். மேலும் அவர் மனோபலம் மிக்கவர் இதனால் நெருக்கடியான தருணங்களிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் போட்டியின் தரம் சீராக முன்னேறி வருகிறது. கடந்த 2 தொடர்களைப் பார்த்தால், லீக் சுற்றின் கடைசி ஆட்டம் வரை சென்றே இறுதிப் போட்டியாளர்களைத் தீர்மானிக்கிறது. இது இந்தத் தொடருக்கு அருமையான ஒரு விஷயம் இதனால்தான் ஆர்வம் கடைசி வரை பராமரிக்கப்படுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் தனிச்சிறப்பு வாய்ந்தது என்றே நான் கருதுகிறேன். அந்த வடிவத்தில் பவுலர்களுக்கு சாதகமாக விக்கெட்டுகள் அமைக்க உதவுகிறது. மற்ற வடிவங்கள் பேட்ஸ்மென்களுக்கு சற்று கூடுதல் சாதகமாகவே உள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்குச் சாதகமாவதன் மூலம் சமச்சீர் நிலை ஏற்படும்.

எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்தான் உடனடியான சவால். அது டெஸ்ட் என்று அழைக்கப்படுவதற்குக் காரணமே அது பல விதங்களிலும் ஒரு வீரரை சோதனைக்குட்படுத்துகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் உண்மையில் ரசிகர்கள் பார்வையில் உற்சாகமூட்டக்கூடியதே.

அலிஸ்டர் குக் சாதனை குறித்து...

ஒவ்வொரு முறையும் புதிதாகத் தொடங்கி புதிய ஆட்டத்துக்கு தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கடந்த போட்டியில் ஒருவர் சதம் எடுத்திருக்கலாம்; ஆனால் நடந்து முடிந்த விஷயமே.

மேலும் இப்போதெல்லாம் பவுலர்கள், பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்கள் ஒரு சிறந்த பேட்ஸ்மெனின் உத்திகளை ஆராய்ந்து கொண்டேயிருக்கின்றனர். எனவே கடினமான உழைப்பு மற்றும் கட்டுக்கோப்புக்கு பதிலீடு கிடையாது.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x