Published : 13 Dec 2014 08:58 PM
Last Updated : 13 Dec 2014 08:58 PM

விராட் கோலி இன்னிங்ஸ்: கிளார்க், இயன் சாப்பல் புகழாரம்

விராட் கோலியின் அடிலெய்ட் டெஸ்ட் சதங்களைப் பற்றி மைக்கேல் கிளார்க் புகழும்போது சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ஏறக்குறைய சாத்தியமில்லாத வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற விராட் கோலி பற்றி மைக்கேல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார்.

காயத்தினால், பெவிலியனிலிருந்து கோலியின் சதத்தை பார்வையிட்ட மைக்கேல் கிளார்க், கூறும்போது, “தொலைக்காட்சியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தை எப்போதும் பார்த்து ரசிப்பேன்.

ஆனால், மேட்சில் அவரை அவுட் செய்யவும், அவரது மனத்தைக் கலைக்கவும் எப்போதும் நேரத்தைச் செலவிட்டுள்ளேன். இப்போது கோலி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். ஆனால் இந்த இடத்தில் ஒன்றை கூறிவிட வேண்டும், என்ன ஒரு அருமையான, நம்பமுடியாத இன்னிங்ஸை ஆடிவிட்டார் விராட் கோலி இன்று. அதனை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.

பந்துகள் கடுமையாக ஸ்பின் ஆகிக் கொண்டிருந்தது, இயல்பாகவே நிறைய சீரற்ற தன்மை பிட்சில் இருந்தது, சில பந்துகள் எழும்பின, சிலது தாழ்வாக வந்தது, நான் நினைக்கிறேன் இன்று விராட் தனது ‘கிளாஸ்’என்ன என்பதைக் காண்பித்து விட்டார் என்று. அவருக்கு எனது முழுமையான பாராட்டுக்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரை வீழ்த்தும் விதத்தை இன்று கண்டுபிடித்துள்ளோம். அவர் அவுட் ஆன அந்த ஒரு பந்தைத்தான் அவர் இன்று தவறாக ஆடினார் என்று கூறலாம்.” என்றார் மைக்கேல் கிளார்க்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறும்போது, "கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் சதம் அடித்துள்ளார். ஒரு விதத்தில் எனது தம்பி கிரெக் சாப்பல் 1975-76-இல் இதனைச் செய்ததை எனக்கு இன்று விராட் கோலி நினைவுபடுத்தினார். இது வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒரு ஆட்டம், அதுவும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது ஒரு மகத்தான இன்னிங்ஸ் இது, குறிப்பாக விக்கெட்டுகள் எதிர்முனையில் விழுந்து கொண்டிருக்கும் போதும் தொடர்ந்து வெற்றி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு ஆடினார்.

மேலும், எவ்வளவு கேப்டன்கள் அவுட் ஆன போது அவர் ஏமாற்றமடைந்த அளவுக்கு ஏமாற்றமும் வருத்தமும் அடைந்திருப்பார்கள்? ஆனால், இந்த இந்திய அணியிடம் நிறைய உறுதி இருக்கிறது என்பதையும், கடந்தமுறை சரணாகதி அடைந்தது போல் இம்முறை இல்லை என்பதை அவர் ஆஸ்திரேலிய அணிக்குக் காட்டியுள்ளார்.” என்றார் இயன் சாப்பல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x