Last Updated : 18 Jul, 2017 09:17 AM

 

Published : 18 Jul 2017 09:17 AM
Last Updated : 18 Jul 2017 09:17 AM

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சாதிப்பேன் என நினைக்கவே இல்லை: மனம் திறக்கும் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் டென்னிஸில் 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இந்த தொடரில் தான் ஒருபோதும் ஜாம்பவானாக மாறுவேன் என்று நினைத்ததில்லை என கூறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஒரு செட்டை கூட இழக்காமல் 6-3, 6-1, 6-4 என்ற கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 1976-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு செட்டை கூட இழக்காமல் கோப்பையை வெல்லும் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் இந்த சாதனையை சுவீடனின் ஜோர்ன் போர்க் நிகழ்த்தியிருந்தார். பெடரர் வெல்லும் 8-வது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.

இதன் மூலம் விம்பிள்டனில் 7 முறை பட்டங்கள் வென்றிருந்த இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா, அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். 8-வது முறையாக மகுடம் சூடியதன் மூலம் விம்பிள்டன் ஜாம்பவானாக உருவெடுத்துள்ளார் பெடரர். ஒட்டுமொத்தமாக பெடரர் வென்றுள்ள 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். அவர் ஆஸ்திரேலிய ஓபனில் 5 முறையும், பிரெஞ்சு ஓபனில் ஒரு முறையும், அமெரிக்க ஓபனில் 5 முறையும் கோப்பையை வென்றுள்ளார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார்.

மேலும் அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ் 32 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 35 வயதில் பட்டம் வென்று தகர்த்துள்ளார் பெடரர். பட்டம் வென்ற பெடரர் கோப்பையுடன் ரூ.18 கோடி பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றார். விம்பிள்டனில் பட்டம் வென்றதன் மூலம் உலகத் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும் பிடித்துள்ளார் பெடரர்.

கடந்த 16 வருடங்களுக்கு முன்பு விம்பிள்டனில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அப்போதைய டென்னிஸ் உலகில் கொடி கட்டிப் பறந்த அமெரிக்காவின் பீட் சாம்பிரஸை 7-6, 5-7, 6-4 6-7,7-5 என வீழ்த்தி தன்னையும் ஒரு நட்சத்திர வீரராக இந்த உலகுக்கு அறிப்படுத்திக் கொண்டவர்தான் ரோஜர் பெடரர். எனினும் அந்த தொடரில் அவரால் கால் இறுதியை தாண்ட முடியவில்லை. அடுத்த ஆண்டில் முதல் சுற்றுடன் வெளியேறிய போதும் அவர் மனம் தளரவில்லை. 2003-ம் ஆண்டு அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் விம்பிள்டன் கோப்பையை கைகளில் ஏந்தினார். இன்று பீட் சாம்பிரஸின் சாதனையை முறியடித்துள்ளதுடன் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று 35 வயதிலும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கி உள்ளார்.

விம்பிள்டனில் படைத்த சாதனை பற்றி ரோஜர் பெடரர் கூறும்போது, பீட் சாம்பிரஸின் சாதனையை விம்பிள்டனில் முறியடிப்பேன் என நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்தேன். தற்போது வாய்ப்பு கிடைத்ததால் பட்டம் வென்றுள்ளேன். 8 வெற்றிகள் என்பது எப்போதும் அடையக்கூடிய இலக்கு அல்ல. அதை நிகழ்த்த வேண்டுமானால் நீங்கள் அதிக அளவிலான திறமையை கொண்டிருக்க வேண்டும் மற்றும் 3 வயதில் இருந்தே பெற்றோர், பயிற்சியாளரால் விளையாட்டை நோக்கி தள்ளப்பட வேண்டும். ஆனால் நான் அப்படி போன்ற குழந்தையாக இருந்தது இல்லை.

இந்த ஆண்டு எப்படி சென்று கொண்டிருக்கிறது, எவ்வளவு நன்றாக உணர்கிறேன், கடினமான சூழ்நிலைகளை எப்படி நிர்வகிக்கிறேன், எனது ஒவ்வொரு நாளின் ஆட்டத்தின் நிலை என அனைத்தையும் நினைக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. மீண்டும் சிறந்த நிலையை ஒருநாள் அடைவேன் என எனக்கு தெரியும். ஆனால் இந்த நிலையை எட்டுவேன் என்று நினைக்கவில்லை. இந்த ஆண்டில் இரு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்வேன் என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். நான் கூறியதை மக்கள் நம்பவில்லை. அடுத்து என்ன நடைபெறும் என்பது யாருக்குமே தெரியாது. மீண்டும் நான் இங்கு விளையாடுவேன். விம்பிள்டனில் இது எனது கடைசி தொடராக இருக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x