Published : 09 Dec 2016 05:17 PM
Last Updated : 09 Dec 2016 05:17 PM

வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா

மெல்பர்னில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்தை 3-0 என்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னரின் 156 ரன்கள் பெரும்பங்களிப்புடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து படுமோசமாக ஆடி 36.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது.

முதல் முறையாக மெல்போர்ன் மைதானத்தில் ரசிகர்கள் வருகை மிகமிகக் குறைவாகக் காணப்பட்டது. 20,000த்திற்கும் கொஞ்சம் அதிகம் அவ்வளவே. காரணம் நியூஸிலாந்து அணி சவாலாக ஆடவில்லை என்பதே.

வார்னர் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டில் 7 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார் வார்னர். ஒரு ஆண்டில் அதிக ஒருநாள் சதங்களை எடுத்தவர் சச்சின், இவரது எண்ணிக்கை 9 சதங்களாகும். சச்சின் இதனை 1998-ம் ஆண்டு தனது உச்சகட்ட ஆட்டத்தில் சாதித்தது. இதில் பெரும்பாலும் சிக்கியது ஆஸ்திரேலிய பந்து வீச்சே. இந்தச் சாதனையை இந்த ஆண்டு வார்னரால் முறியடிக்க முடியவில்லை. இனிமேலும் சச்சினை முறியடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இன்னொன்றையும் கூறிவிடுவது பொருந்தும் சச்சின் 33 இன்னிங்ஸ்களில் 9 சதங்களை எடுக்க வார்னர் 23 இன்னிங்ஸ்களில் 7 சதம் எடுத்துள்ளார்.

128பந்துகளைச் சந்தித்த வார்னர் 13 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 156 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். 264 ரன்களில் வார்னர் மட்டும் 156, இவருக்கு அடுத்த அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கை டிராவிஸ் ஹெட், இவர் 37 ரன்களை எடுத்தார். இரு அணிகளிலும் இவர்கள் இருவருமே அதிகமாக ரன் எடுத்துள்ளனர், நியூஸிலாந்தில் மார்டின் கப்தில் மட்டுமே அதிகபட்சமாக 34 ரன்களை எடுத்தார்.

வார்னர் ஒருவரே 156 ரன்கள், ஒட்டுமொத்த நியூஸிலாந்தும் சேர்ந்து 147 ரன்கள்!! வழக்கத்துக்கு மாறான மந்தமான (இந்திய ரக) மெல்பர்ன் பிட்சில் அனைத்து பேட்ஸ்மென்களும் ரன் எடுக்கத் திணறிய போது வார்னர் மட்டுமே வித்தியாசம் காட்டினார். இவர் வேறொரு நிலையிலிருந்து ஆடுவதாகவே தெரிகிறது. இந்த மந்தப் பிட்சில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 121. பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் விளையாட முடியாத பாதம் பெயர்க்கும் யார்க்கர்களை வீசினார். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஒரு நம்பமுடியாத கேட்சைப் பிடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார், கடந்த போட்டியிலும் நம்ப முடியாத ஒரு கேட்சை ஸ்மித் பிடித்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா சரியாக தொடங்கவில்லை. ஏரோன் பிஞ்ச் மீண்டும் சொதப்பி 3 ரன்களில் போல்ட் பந்தில் இன்சைடு எட்ஜ் ஆக ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், அநேகமாக இவர் உஸ்மான் கவாஜாவுக்கு வழி விடுவார் என்று தெரிகிறது. இந்தப் பந்தை மிட் ஆன், அல்லது நேராக ஆட நினைத்தார் ஆனால் போல்ட்டின் இன்ஸ்விங்கர் இவரது விக்கெட்டைச் சாய்த்தது. கேப்டன் ஸ்மித் ரன் எடுக்காமல் கேன் வில்லியம்சன், போல்ட் ஏற்படுத்திய லெக் திசை பொறியில் சிக்கினார். 6 பந்துகளை ஆஃப் திசையில் வீசிய போல்ட் ஒரு பந்தை ரவுண்ட் த விக்கெட்டில் வீசி உள்ளே கொண்டு வந்தார், இரண்டு ஷார்ட் மிட்விக்கெட், ஒரு ஷார்ட் ஸ்கொயர் லெக். இடுப்பளவு வந்த பந்தை ஸ்மித் ஆட நேராக ஷார்ட் ஸ்கொயர்லெக்கில் நிகோல்ஸ் கையில் கேட்ச் ஆனது. முன்னதாக கடினமான வாய்ப்பை நிகோல்ஸ் வார்னர் 18 ரன்களில் இருந்த போது விட்டார். இது திருப்பு முனையானது. ஆனால் இம்முறை பாதிக்கப்பட்டது அதிவேக பவுலர் லாக்கி பெர்குசன்.

பெய்லியின் அசிங்கமான ஸ்டான்ஸ்:

பேட்டிங் பார்மை தேடி வரும் ஜார்ஜ் பெய்லி, பாகிஸ்தானின் இஜாஜ் அகமது போன்ற ஒரு ஸ்டான்சில் நின்றார். இஜாஜ் அகமது கூட பரவாயில்லை எனும் அளவுக்கு பவுலருக்கு பின்புறத்தைப் பாதிகாட்டுமாறு அமைந்த இவரது ஸ்டான்ஸ் சிரிப்பையே வரவழைத்தது. 51 பந்துகளைச் சந்தித்து 1 பவுண்டரியுடன் 23ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, லாக்கி பெர்குசன் இவரை தனது 150+ கிமீ வேகப்பந்துகளால் மிரட்டினார்.

அவரது இந்த புதிய ஸ்டான்ஸும் பெய்லிக்குக் கை கொடுக்கவில்லை. கிராண்ட் ஹோமிடம் இவர் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் எப்படியோ வார்னருடன் சேர்ந்து 62 ரன்கள் சேர்க்கப்பட்டது.

வார்னர் தனிநபர் போராட்டம்:

பெய்லி ஆட்டமிழந்த அதே ஓவரில் கிராண்ட் ஹோமின் சற்றே எழும்பிய பந்தை மிட்செல் மார்ஷ் மட்டையில், காலில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

டிராவிஸ் ஹெட், வார்னர் இணைந்து 105 ரன்கள் சேர்த்தனர், இதில் ஹெட் 70 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார்.

61 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்த வார்னர், 95 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் எடுத்தார். ஆனால் கடைசி 25 பந்துகளில் மேலும் 56 ரன்களை மேலும் 3 பவுண்டரிக்ள் 3 சிக்சர்களுடன் விளாசி 128 பந்துகளில் 13 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 156 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் சாத்தியமில்லாத ரன்னை எடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆனார்.

மேத்யூ வேட் 14 ரன்களையும் பாக்னர் 13 ரன்களையும் எடுக்க உதிரிகள் வகையில் 18 ரன்கள் கிடைக்க ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது. போல்ட் சிறப்பாக வீசி 10 ஒவர்கள் 49 ரன்கல் 3 விக்கெட் என்று அசத்தினார். சாண்ட்னர் ஒரு முனையில் அருமையாகக் கட்டுப்படுத்தி 9 ஓவர்களில் 43 ரன்களையே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சவுதி 45 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லை.

நியூஸிலாந்து வீழ்ச்சி:

265 ரன்கள் இலக்கை மந்தமான பிட்சில் துரத்த களமிறங்கிய நியூஸிலாந்து லேதம் (28), கப்தில் (34) ஆகியோர் மூலம் 9 ஓவர்கள் 44 ரன்கள் என்ற டீசண்டான துவக்கம் கண்டது. இந்நிலையில் பேட் கமின்ஸிடம் லேதம் ஆட்டமிழந்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் ஜேம்ஸ் பாக்னர் ரவுண்ட் த விக்கெட்டில் எல்.பி.ஆனார். சிறிது நேரத்தில் கப்தில், டிராவிஸ் ஹெட்டின் ஆஃப் பிரேக்கை கவரில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் வெளியேறினார். நிகோல்ஸ், ஸ்டார்க்கின் பாதம் பெயர்க்கும் யார்க்கரில் பவுல்டு ஆக, வாட்லிங்கும் 8 ரன்களில் ஹெட்டிடம் எல்.பி.ஆக 98/5 என்று நியூஸிலாந்துக்கு ஆணியடிக்கப்பட்டது.

கடைசியில் நியூஸிலாந்து 37-வது ஓவர் முதல் பந்தில் ஸ்மித்தின் ஸ்டன்னிங் கேட்சிற்கு 147 ரன்களுக்குச் சுருண்டு ஒயிட்வாஷ் ஆனது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹெட், பாக்னர், கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x