Published : 06 Feb 2016 04:42 PM
Last Updated : 06 Feb 2016 04:42 PM

வார்னர், மிட்செல் மார்ஷ் அபாரம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

வெலிங்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் ஒருநாள் போட்டியின் படுதோல்விக்கு பழி தீர்த்து தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா வார்னர் (98), கவாஜா (50), மிட்செல் மார்ஷ் (69) ஆகியோர் அதிரடியில் 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். மெக்கல்லம் வழக்கமான காட்டடியில் தொடங்கினார். ஹேஸ்டிங்ஸின் முதல் ஓவரிலேயே மேக்ஸ்வெல்லின் கையை கிழித்துக் கொண்டு பாயிண்டில் ஒரு பவுண்டரி பிறகு ஒரு அசுர புல் ஷாட் ஸ்கொயர்லெக்கிற்கு பறந்தது.

அடுத்து ஜோஷ் ஹேசில்வுட் சிக்கினார். வழக்கம் போல் மேலேறி வந்து ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவர் பவுண்ட்ரிக்கு மேல் ஒரு சிக்ஸ், பிறகு முன்னங்காலில் வந்தாலும் ஷார்ட் பிட்ச் பந்தை பிளாஷாக ஹூக் செய்ய லாங் லெக்கில் சிக்ஸ்.

அடுத்து போலண்ட் வந்தார், வந்தவுடன் மெக்கல்லமின் மட்டை ஒரு சுழல் சுழல நேராக இன்னொரு சிக்ஸ். 12 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அவர் 28 ரன்களை எடுத்திருந்தார். ஆனால் போலண்டின் அடுத்த பந்தை மேலேறி வந்து ஒரு சுழற்று சுழற்றினார் பந்து சிக்கவில்லை, ஸ்டம்பைத் தாக்கியது.

ஆனால் அடுத்த 11 ஓவர்களுக்கு மார்டின் கப்தில், கேன் வில்லியம்சன் எளிதாக ஆட்டத்தை நகர்த்தினர். கப்தில் 45 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 53 ரன்களைச் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் வீசிய அருமையான ஸ்பெல்லில் பார்மில் உள்ள நிகோல்சை 4 ரன்களில் வீழ்த்தினார். 95/3 என்ற நிலையில் வில்லியம்சன், கிராண்ட் எலியட் (32) இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் 63 ரன்களைச் சேர்த்தனர்.

ஆனால் இருவரும் ஆடம் ஸாம்பா என்ற லெக் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்தனர். வில்லியம்சன் 74 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கிராண்ட் எலியட் 32 ரன்களில் ஸாம்ப்பாவிடம் வீழ்ந்தார். ஆண்டர்சன் (16), ரோங்கி (19) ஆகியோர் சோபிக்கவில்லை இதனால் 40.2 ஓவர்களில் 205/7 என்று ஆனது நியூஸிலாந்து. ஆனால் கடைசியில் சாண்ட்னர் அருமையாக ஆடி 3 பவுண்டரி 1 சிக்சருடன் 39 பந்துகளில் 45 ரன்களையும், ஆடம் மில்ன 27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 36 ரன்களையும் எடுத்து 8-வது விக்கெட்டுக்காக 7 ஓவர்களில் 61 ரன்களை முக்கியமான தருணத்தில் சேர்த்தனர். நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், போலண்ட், ஸாம்பா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வார்னர், கவாஜா, மார்ஷ் அதிரடி:

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் கவாஜா, வார்னர் தொடங்கினர். கவாஜா அருமையாக இடைவெளிகளில் பந்தைத் தட்டி விட்டு ஒன்று இரண்டு என்று எடுக்க, அவ்வப்போது பவுண்டரியையும் அடிக்க, வார்னர் மற்றொரு முனையில் விறுவென 3 பவுண்டரி 1 சிக்சருடன் 16 பந்துகளில் 22 ரன்கள் வந்தார். டிரெண்ட் போல்ட்டை அவர் பாயிண்டில் அடித்த சிக்ஸ் சக்தி வாய்ந்த சிக்ஸ் ஆகும். 6-வது ஓவரில் கவாஜா, ஹென்றியின் ஓரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். ஆஸ்திரேலியா 6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. வில்லியம்சன் வந்தவுடன் வார்னர் ஒரு சிக்ஸ் அடித்தார். பிறகு மில்ன பந்தை மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ் அடித்தார். 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 77/0. மீண்டும் வார்னர் சாண்ட்னர் பந்தை தூக்கி சிக்ஸ் அடித்து 35 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 50 ரன்களை எட்டினார். 13 ஓவர்களில் ஆஸ்திரேலியா 101/0 என்று இருந்தது. பிறகு கவாஜா 48 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை எடுத்தார். 50 ரன்கள் எடுத்தவுடன் சாண்ட்னரிடம் அவர் கேட்ச் கொடுத்து அவர் பந்து வீச்சிலேயே அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 16.2 ஓவர்களில் 122/1 என்று அதிரடி தொடக்கம் கண்டது.

பிறகு, ஹென்றி அருமையாக ஓரு ஓவரை வீச அந்த 20-வது ஓவரில் ஸ்மித் (2), பெய்லி (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்ததால் நியூஸிலாந்து பக்கம் ஆட்டம் சாய்ந்தது. பெய்லிக்கு அருமையான வேகமான இன்ஸ்விங்கர், அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை பவுல்டு ஆனார். மேக்ஸ்வெல் ஹாட்ரிக்கைத் தடுத்தார் ஆனால் 6 ரன்களில் அவர் டிரெண்ட் போல்ட் பந்தில் பிளேய்ட் ஆன் முறையில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஆனால் வார்னர் ஆடிக் கொண்டிருந்தார். மார்ஷும், வார்னரும் இணைந்து ஸ்கோரை 31-வது ஓவரில் 191 ஆக உயர்த்திய போது 79 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் அடித்து 98 ரன்கள் எடுத்த வார்னர் சாண்ட்னர் பந்தில் எல்.பி.ஆனார். மேத்யூ வேடையும் சாண்ட்னர் வீழ்த்த ஆஸ்திரேலியா 197/6 என்று தோல்வி முகம் காட்டியது.

அதன் பிறகு மிட்செல் மார்ஷ், ஜான் ஹேஸ்டிங்ஸ் இணைந்து 86 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்க்க 283/6 என்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது.

மிட்செல் மார்ஷ் 72 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 69 நாட் அவுட், ஹேஸ்டிங்ஸ் 47 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 48 நாட் அவுட். நியூஸிலாந்து தரப்பில் சாண்ட்னர் அருமையாக வீசி 3 விக்கெட்டுகளையும், ஹென்றி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ஆல்ரவுண்ட் திறமை காட்டிய மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x