Last Updated : 02 Sep, 2015 04:09 PM

 

Published : 02 Sep 2015 04:09 PM
Last Updated : 02 Sep 2015 04:09 PM

வார்த்தைகளால் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் கோலி: பிஷன் பேடி காட்டம்

தேவையற்ற ஆக்ரோஷம் இசாந்த் சர்மாவின் தடையில் பரிதாபமாக முடிவடைந்துள்ளது என்று கூறிய முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி, விராட் கோலி தனது ஆக்ரோஷம் பற்றிய பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் பிஷன் சிங் பேடி கூறியதாவது: “ஆக்ரோஷம் பற்றிப் பேசிப் பேசியே கடைசியில் அது இசாந்த் சர்மாவின் தடையில் முடிந்துள்ளது. இதுதான் கிரிக்கெட் களத்திலிருந்து நாம் விரும்புவதா? இது பரிதாபமிக்க ஆக்ரோஷ வெளிப்பாடு. இன்னொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், விராட் கோலியின் ஆக்ரோஷத்துக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் அறிக்கை மாறி அறிக்கையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார், வார்த்தைகள் மூலம் தனது ஆக்ரோஷத்தை விற்பனை செய்கிறார் அவர் அவ்வளவே.

நடந்து முடிந்தவை துரதிர்ஷ்டவசமானவை. இந்தத் தொடரில் கோலி சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர் தனது ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். எப்போதும் ஒரு கேமரா கேப்டன் மீது கவனம் செலுத்தும். எனவே அவர் மிகவும் தனிப்பட்ட முறையில் சிறந்த ரோல் மாடலாக விளங்குவது அவசியம். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் ஆக்ரோஷத்தை காட்ட வேண்டுமே தவிர வாயினால் அல்ல.

விராட் கோலியின் கேப்டன்சியைப் பொறுத்தவரையில் அவர் இன்னும் தொலைதூரம் செல்ல வேண்டும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அணியின் குறைபாடுகளை வெற்றியின் மூலம் மறைத்து விட்டால் நாம் குருடர்களாக இருக்க வேண்டியதுதான்.

வெற்றி பெற்றோம் சரிதான், நல்ல வெற்றிதான் அதுவும் சரிதான், இளம் அணிக்கு வாழ்த்துக்கள்.ஆனால் அதற்குப் பிறகான அதீத கொண்டாட்டங்கள் தேவையற்றது. பெரிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தி விடவில்லையே. 3-0 என்று வெற்றி பெற்றிருந்தால் அணியினரின் கொண்டாட்டங்களை நான் புரிந்து கொள்கிறேன். சரி வென்று விட்டோம், ஆனால் ஏன் இந்த பித்தம்? அங்கு வெற்றி பெறத்தான் சென்றுள்ளோம் என்பது சரிதானே?

எனவே என்ன எதிர்பார்க்கப்பட்டதோ அதைத்தான் செய்துள்ளோம், இதில் என்ன பெரிய அமர்க்களம் வேண்டிக் கிடக்கிறது? நல்லதை மனதில் கொண்டு நாம் அதீதமாக கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இலங்கை அணி பலவீனமான அணி, அந்த அணியை இன்னும் தகர்த்திருக்க வேண்டும்.

எனினும் வெற்றி வெற்றியே, அணிக்கு எனது வாழ்த்துக்கள். அதற்காக ஒருநாடு பெரிய அமர்க்களம் செய்ய வேண்டியதில்லை. மனநிலையில் ஸ்திரத்தன்மை வேண்டும். எப்போது நாம் வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக பாவிக்கப் பழகப்போகிறோம்?

அஸ்வின் பிரமாதமாக வீசினார். முதல் முறையாக அவர் சீராக நன்றாக வீசியதைப் பார்த்தேன். ஆனால் இங்கும் நான் என்ன கூறுகிறேன் என்றால் இந்த இலங்கை அணி பலவீனமான அணி என்றே. ஆஞ்சேலோ மேத்யூஸிடமிருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் தவிர அங்கு ஒன்றுமில்லை.

அமித் மிஸ்ரா நன்றாக பவுலிங்கும், பேட்டிங்கும் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாம் இளைஞர்களை நோக்கிச் செல்ல வேண்டும், துரதிர்ஷ்டவசமாக அமித் மிஸ்ராவிடம் இன்னும் நீண்ட நாள் கிரிக்கெட் வாழ்க்கை இல்லை.

ஹர்பஜன், மிஸ்ரா இருவருக்கும் காலம் முடிந்து விட்டது என்றே கருதுகிறேன், இந்த இலங்கை அணிக்கு எதிராக இளம் ஸ்பின்னர்களை களமிறக்கியிருக்க வேண்டும். இளம் ரத்தங்களை புகுத்துவதற்கான தொடரே இது.

அதே போல் ஆல் ரவுண்டர் என்ற தகுதியில் ஸ்டூவர்ட் பின்னி அணியில் இருப்பது பெரிய கேள்விக்குறி. புவனேஷ் குமாரை ஏன் உட்கார வைத்தனர். நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதற்காக செய்தவையெல்லாம் சரியாகி விடாது. நாம் நடைமுறை எதார்த்தத்துடன் சிந்திக்க வேண்டும்.

நல்ல இளம் ஸ்பின்னர்கள் இருக்கவே செய்கின்றனர். இடது கை மற்றும் லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர், திறமை எங்கே கண்டு கொள்ளப்படுகிறது? வாரியத்திடமிருந்து நல்ல பணம் சம்பாதிக்கும் 5 அணித் தேர்வாளர்களும் அடிமட்டத்திலிருந்து திறமைகளை கண்டுணர வேண்டும்.

அடுத்து கடினமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மிக நீண்ட தொடர் காத்திருக்கிறது, இதில் நமது திறமையும், உடற்தகுதியும் கடும் சவால்களைச் சந்திக்கும்” இவ்வாறு கூறினார் பிஷன் பேடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x