Published : 02 Jan 2017 04:45 PM
Last Updated : 02 Jan 2017 04:45 PM

லோதா குழு டூ உச்ச நீதிமன்ற அதிரடி: 10 அம்சங்களில் பிசிசிஐ களையெடுப்பு

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இடையூறாக இருந்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வேளையில், லோதா பரிந்துரைகள் முதல் உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவுகள் வரையிலான பிசிசிஐ சீரமைப்பு நடவடிக்கையின் 10 அம்சங்கள்:

* பிசிசிஐ-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. லோதா குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவையான ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாக பதவிகளில் இருக்கக்கூடாது. தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது ஆகியவற்றை அமல்படுத்துவதில் பிசிசிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

* லோதா குழுவின் பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்துகிறோம் என மாநில கிரிக்கெட் சங்கங்கள் உறுதிமொழி கடிதம் அளிக்கும் வரை அவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் அளிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு நவம்பரில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகித்து வரும் அதிகாரிகளை நீக்க வேண்டும்; பிசிசிஐ அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகளை வழிநடத்தும் பார்வையாளராக முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையை நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

* கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் வரவு - செலவுக் கணக்குகளைச் சரிபார்க்க நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சொல்பவரைப் பார்வையாளராக ஏற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையும் வாரியம் விரும்பவில்லை. இதை அரசின் தலையீடாகச் சித்தரிக்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமிருந்து ஒரு கடிதத்தைக் கேட்டிருந்தார் அனுராக் தாக்கூர். இதற்காக துபாயில் இருந்த ஐசிசி தலைவர் சசாங்க் மனோகரை 2016 ஆகஸ்டில் அணுகினார்.

* அனுராக் தரப்பில் இப்படி ஒரு முயற்சி நடந்ததை உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை. தான் பிறப்பித்த உத்தரவுகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை வேறு விதமாகச் சித்தரிக்க முயலும் போக்கை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஆனால், தாக்கூரோ அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மறுத்தார். உண்மை என்ன என்பதை சசாங்க் மனோகர் போட்டு உடைத்தார். அதன்பின் சிக்கல் வலுவானது.

* உச்ச நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு இடையே, தங்களுடைய நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதையோ, தங்களைக் கண்காணிப்பதையோ விரும்பவில்லை என்பதை உச்ச நீதிமன்றத்துக்குப் பல வழிகளில் உணர்த்தி வந்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

* லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த இடையூறாக இருந்ததால் இப்போது பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து இருவரும் இத்துடன் விலகிக்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.

* பிசிசிஐ சீர்த்திருத்தங்களை நோக்கமாக கொண்ட நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த தடையாக இருந்ததற்காக அனுராக் தாக்கூர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனுராக் தாக்கூர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

* பிசிசிஐ-யின் புது நிர்வாகிகளை தேர்வு செய்ய மூத்த வழக்கறிஞர்கள் பாலி நாரிமன், கோபால் சுப்பிமணியன் ஆகியோரை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதிய நிர்வாகிகளுக்கான பெயர்களை பரிந்துரைப்பது, நியமனம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாரிமனும், கோபால் சுப்பிரமணியனும் வரும் 19-ம் தேதிக்குள் முடிக்கவேண்டும்.பிசிசிஐ-யின் பணிகளை புதிய நிர்வாகக்குழு ஏற்கும் வரை தற்போதைய துணைத்தலைவர் தலைவராக பொறுப்பு வகிப்பார். மேலும் இணைச் செயலாளர், செயலாளராக செயல்படுவார் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

* நீதிமன்ற வழிகாட்டுதலின்படின் பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள், லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த தவறினால் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

* உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட லோதாகுழுவின் பரிந்துரைகளை கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும் என்பதை இந்த உத்தரவுகள் தெளிவுப்படுத்தி உள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், குற்ற தண்டனை பெற்றவர்கள், 9 வருடங்களுக்கு மேலாகவும் பதவியில் இருப்பவர்கள், மற்ற விளையாட்டு சங்கங்களிலும் அங்கம் வகிப்பவர்கள் கிரிக்கெட் வாரிய அமைப்புகளில் எந்த ஒரு பதவியிலும் இருக்கக்கூடாது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x