Published : 16 Jul 2016 03:30 PM
Last Updated : 16 Jul 2016 03:30 PM

லார்ட்ஸில் ஷேன் வார்ன் செய்ய முடியாததை செய்து காட்டிய யாசிர் ஷா

இங்கிலாந்து அணியின் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான பாரம்பரிய பலவீனத்தை யாசிர் ஷா நேற்று பயன்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை 253/7 என்று சரிவடையச் செய்தார்.

யாசிர் ஷா 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்து பேட்ஸ்மென்களை தன் வாழ்நாள் முழுதும் ஆட்டிப்படைத்த ஷேன் வார்ன் கூட லார்ட்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஷேன் வார்ன் 4 முறை இங்கு விளையாடியுள்ளார். ஆனால் முஷ்டாக் அகமது 5 விக்கெட்டுகளை லார்ட்ஸில் எடுத்துள்ளார். மேலும் ஆசியாவுக்கு வெளியே முதன் முதலாக யாசிர் ஷா இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ரூட், வின்ஸ், பேலன்ஸ், பேர்ஸ்டோ, மொயின் அலி ஆகியோர் அடங்கிய இங்கிலாந்து மிடில் ஆர்டரை உடைத்தார் யாசிர் ஷா. தொடருக்கு முன்பே கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இங்கிலாந்தின் வலுவற்ற மிடில் ஆர்டர் குறித்து பேசி இங்கிலாந்தை உசுப்பேற்றினார்.

அலிஸ்டர் குக், ஜோ ரூட் இணைந்து சதக்கூட்டணி அமைக்க ஜோ ரூட்டின் பொறுமையற்ற மோசமான ஷாட்டினால் அவர் 48 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அடுத்த 6 விக்கெட்டுகளை 114 ரன்களுக்கு இழந்தது. அதாவது 118/1 என்ற நிலையிலிருந்து 232/7 என்று இங்கிலாந்து சரிவு கண்டது.

யாசிர் ஷாவைக் கண்டு பதற்றமடைந்த ஜோ ரூட் அவரை மிரட்ட வேண்டும் என்பதற்காக ஸ்லாக் ஸ்வீப் செய்தார், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்து கொஞ்சம் எழும்ப டாப் எட்ஜ் எடுத்து மொகமது ஹபீஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹபீஸ் இதனைச் சரியாகப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அன்று அலிஸ்டர் குக்கிற்கு அமிர் பந்தில் கேட்ச் விட்டவர் இவர்.

அடுத்ததாக வின்ஸ் 16 ரன்களில் மோசமான தீர்ப்புக்கு ஆட்டமிழந்தார் என்றே கூற வேண்டும். லெக் ஸ்டம்புக்கு நேராக யாசிர் ஷா பந்தை கால்காப்பில் வாங்கினார், பந்து திரும்பவில்லை, அது நேர் பந்து. தர்மசேனா அவுட் கொடுத்தார், இவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் வின்ஸ் ரிவியூ செய்த போது நாட் அவுட் என்றே தீர்ப்பாகியிருக்கும், அதனை எல்.பி. என்று தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் கேரி பேலன்ஸுக்கு யாசிர் வீசிய பந்து அருமையானது. பந்து திரும்பி பேலன்ஸ் மட்டையைக் கடந்து கால்காப்பை தாக்கியது, அருமையான லெந்த். பேலன்ஸ் 6 ரன்களுக்கு எல்.பி. ஆனார்.

பேர்ஸ்டோ களமிறங்கி 5 அட்டகாசமான பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து யாசிர் ஷா-வின் ஏமாற்றுப்பந்துக்கு பவுல்டு ஆனார். பந்து திரும்பும் என்று நினைத்து கட் ஆட போனார் பேர்ஸ்டோ, ஆனால் பந்து ஸ்கிட் ஆகி ஸ்டம்பைத் தாக்கியது.

மொயின் அலி 23 ரன்களுக்கு நன்றாகவே ஆடினர், ஆனால் அவரும் ஒரு பாரம்பரிய ஸ்வீப் ஷாட் ஆடமுயன்று யாசிர் ஷாவிடம் எல்.பி.ஆனார். நடுவர் ஜோயெல் வில்சன் கையை உயர்த்தினார், நடுவர் கையை உயர்த்தியவுடன் மொயீன் அலி அனாவசியமாக ரிவியூ செய்தார், நடுவர் தீர்ப்பு அவுட் என்றால் அது எப்போதும் ரிவியூவில் மாறாது, குறிப்பாக எல்.பி.தீர்ப்புகளில், ஏனெனில் பந்து பேடைத் தாக்கும் போது ஸ்டம்புக்கு நேராக இருந்ததா என்பது நடுவருக்குரியதே, அதனால் ஒரு ரிவியூ வேஸ்ட் செய்யப்பட்டதானது. இடையில் அலிஸ்டர் குக் 81 ரன்களில் மொகமது அமிரின் ஃபுல் லெந்த் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார்.

2-ம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்ஸ் 31 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 11 ரன்களுடனும் உள்ளனர். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலை பெற்று 2-வது இன்னிங்சில் சீப்பாக அவுட் ஆகாமல் 250-275 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்தை களமிறக்கினால், யாசிர் ஷா போட்டியை வெற்றிபெற்றுத் தர வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x