Published : 19 Aug 2016 11:24 AM
Last Updated : 19 Aug 2016 11:24 AM

ரோட்டக் முதல் ரியோ வரை: சாக்‌ஷியின் ஒலிம்பிக் சாதனையும் 15 தகவல்களும்!

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க ஏக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தணித்தார். மகளிர் பிரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையையும் படைத்தார் ஹரியாணாவைச் சேர்ந்த சாக்‌ஷி.

* கால் இறுதியில் சாக்‌ஷி மாலிக் 2-9 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷியாவின் வெலெரியா கோப்லோவாவிடம் தோல்வி கண்டார். வெலெரியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் 'ரெபிசேஜ்' சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்ஷிக்கு கிடைத்தது. இந்த சுற்றில் அவர், மங்கோலிய வீராங்கனை ஆர்கோன் புர்வித்ஜை 12-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.

* வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 8-5 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் டைனிபெகோ வாவை வீழ்த்தினார் சாக் ஷி. இந்த ஆட்டத்தில் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்தார். கடைசி கட்ட விநாடிகளில் மீண்டு எழுந்த அவர் கடுமையாக போராடி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 13 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவின் பதக்க ஏக்கத்தை சாக்‌ஷி தீர்த்து வைத்துள்ளார்.

* 4-வது வீராங்கனை: ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த 23 வயதான சாக்‌ஷி மாலிக் ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்தவர். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற 4-வது வீராங்கனை என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் பளு தூக்குதலில் கர்ணம் மல்லேஷ்வரி, குத்துச்சண்டையில் மேரிகோம், பாட்மிண்டனில் சாய்னா நெவால் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.

* ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜே.டி.ஜாதவ், யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் பதக்கம் வென்று கொடுத்துள்ளனர். இதில் சுஷில் குமார் 2008-ல் வெண்கலப் பதக்கமும், 2012-ல் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

* 2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்‌ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தோஹாவில் 2014-ல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* தற்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்ற நிலையில் பதக்கப் பட்டியலில் தற்போது 70-வது இடத்தில் உள்ளது.

* பரிசு மழை: நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை தேடித் தந்த சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி பரிசு வழங்க உள்ளதாக ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு அரசுப் பணியும் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

* விளையாட்டு அமைச்சகத்தின் விருது வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம், ரயில்வே அமைச்சகம் சார்பில் ரூ.60 லட்சம், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் ரூ.20 லட்சம், ஒலிம்பிக் நல்லெண்ண தூதர் சல்மான்கான் வழங்கும் ரூ.1,01,000 ஆகிய பரிசுத் தொகையையும் சாக் ஷி பெற உள்ளார். மொத்தம் ரூ.3.50 கோடி பரிசுத்தொகையை அள்ள உள்ளார் சாக்‌ஷி.

* ரயில்வே அமைச்சகம் பரிசுத் தொகையுடன் சாக் ஷிக்கு பதவி உயர்வும் வழங்க உள்ளது. சாக் ஷி தற்போது வடக்கு ரயில்வேயில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் பதவி சாக் ஷிக்கு வழங்கப்பட உள்ளது.

* சாக் ஷியின் பயிற்சியாளர் குல்தீப் மாலிக்குக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்க உள்ளது.

* பாராட்டு மழை: பதக்கம் வென்ற சாக்‌ஷிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த வெற்றி யின் மூலம் இந்தியர்களை சாக் ஷி பெருமைப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

* ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சாக் ஷியின் வெற்றி இளம் வீரர்களுக்கு உந்துதலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

* ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சேவக், தோனி, அபிநவ் பிந்த்ரா, சுஷில் குமார், மேரி கோம், விஜேந்தர் சிங், ககன்நரங், விவிஎஸ் லட்சுமண், அனில் கும்ப்ளே, அஸ்வின், ரூபிந்தர்பால் சிங், ஸ்ரீஜேஷ், ஹீனா சித்து, ஜூவால கட்டா உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் சாக் ஷிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தது குறித்து சாக்‌ஷி கூறும்போது, “எனது 12 ஆண்டு கால கடின உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் இந்த பதக்கம். இதற்காக பகல், இரவாக கடும் உழைப்பை கொடுத்துள்ளேன். லண்டன் ஒலிம்பிக்கில் எனது சீனியர் கீதா போகத் முதல் முறையாக விளையாட தகுதி பெற்றிருந்தார். ஆனால் அவர் பதக்க நிலையை எட்டவில்லை.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனையாக நான் திகழ்வேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. களத்தில் உள்ள நமது மற்ற மல்யுத்த வீரர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

போட்டியின் கடைசி நிமிடம் வரை பதக்கம் உன்னுடையது தான் என்று என் உள்மனது கூறிக் கொண்டே இருந்தது. அந்த பதக்கம் எனக்காக காத்திருக்கிறது என்பதை அறிந்த நான், எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மல்யுத்தம் என்பது 6 நிமிடங்கள் தான். எந்த நொடியிலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கடைசி 8 விநாடியில் அதை என்னுடையதாக மாற்றினேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x