Published : 04 Oct 2014 08:57 PM
Last Updated : 04 Oct 2014 08:57 PM

ரெய்னா அதிரடி சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்

பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி சதத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

வெற்றிபெறத் தேவையான ரன்களை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து சாம்பியன் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ். 19வது ஓவரை பேட் கமின்ஸ் வீச முதல் பந்தை ஹெலிகாப்டர் ஷாட்டில் மிட்விக்கெட்டில் ஃபிளாட் சிக்ஸ் அடித்த தோனி, 3வது பந்தை லாங் ஆன் திசையில் உயரமாக, நீளமாக சிக்ஸ் அடித்து வெற்றிக்கான ரன்களை எடுக்க 185/2 என்று வெற்றி பெற்றது சென்னை.

சுரேஷ் ரெய்னா 59 பந்துகளில் அதிரடி சதம் எடுத்து கடைசியில் 62 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சருடன் 109 நாட் அவுட் என்று சிறப்புற்றார். மேலும் இந்தத் தொடரில் அவர் அதிக ரன்களை அடித்து கோல்டன் பேட் விருது சிறப்பையும் பெற்றார்.

துரத்தலைத் தொடங்கிய போது பேட் கமின்ஸை 2 பவுண்டரிகள் அடித்த டிவைன் ஸ்மித் அதே ஓவரில் அபாரமான ஸ்பின் வகை யார்க்கருக்கு பவுல்டு ஆனார்.

அப்போது இறங்கினார் ரெய்னா, வந்த முதல் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு அதிர்ஷ்ட பவுண்டரி கிடைத்தது. ஆனால் அதன் பிறகு மைதானம் நெடுக சிதற அடித்தார் ரெய்னா.

முதலில் ஆந்த்ரே ரசல் பந்தை ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் அற்புதமான சிக்ஸரை அடித்து தன் சிக்சர் கணக்கைத் தொடங்கிய ரெய்னா அதன் பிறகு பியூஷ் சாவ்லாவை 4 சிக்சர்களும், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட குல்தீப் யாதவ் என்ற ‘சைனமன்’ பவுலரை 3 சிக்சர்களும் விளாசினார். 27 பந்துகளில் அரைசதம் கடந்தார் ரெய்னா.

ஒரு முறை குல்தீப் பந்தில் அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா தவறவிட்டார். கடைசியில் சதம் எடுப்பதற்கு முன்னால் யூசுப் பத்தானிடம் ஒரு கேட்ச் கொடுத்தார். கடினமான வாய்ப்பு யூசுப் பாய்ந்தும் பயனில்லை.

ரெய்னா ஒவ்வொரு முறை மேலேறி வரும் போதும் பந்து சிக்சருக்குப் பறந்தது ஒரு சிக்சர் லாங் ஆனில் 96மீ சென்றது. மேலேறி வந்து மட்டையைக் கொண்டு வந்து தூக்கி அடித்து ஷாட்டை பினிஷ் செய்யும்போதும் அவர் இடது கை சச்சின் டெண்டுல்கர் போலவே தெரிந்தார்.

மெக்கல்லமும் இவரும் இணைந்து 12.2 ஓவர்களில் 118 ரன்களைச் சேர்த்தனர். அதில் ரெய்னாவின் ஆதிக்கப் பங்களிப்பு 78, மெக்கல்லம் 39. மெக்கல்லம் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 39 எடுத்து அவுட் ஆனார். 127/2 என்ற நிலையில் தோனி களமிறங்கினார். இருவரும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். கேப்டன் தோனி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அவர் அடித்த 1 பவுண்டரி 2 சிக்சர்களுமே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கமின்ஸ் பந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் நேகி 5விக். கம்பீர் அபாரம்: கொல்கத்தா 180 ரன்கள் குவிப்பு

.முன்னதாக, டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தார். ஸ்கோர் 180 ரன்கள் என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஸ்கோர் என்றே கூறவேண்டும். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸின் டெல்லி இடது கை சுழற்பந்து வீச்சாளர் பவன் நேகி 19வது ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க கொல்கத்தா மட்டுப்படுத்தப்பட்டது.

பவன் நேகி 4 ஓவர்கள் வீசி 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 19வது ஓவர் முடிவில் கொல்கத்தா ஸ்கோர் 161/6 என்று இருந்தது.

ஆனால் கடைசி ஓவரை நெஹ்ரா வீசினார். அதிரடி வீரர் யூசுப் பத்தான் முதல் 2 அபாரமான யார்க்கர் லெந்த் ஓவர் பிட்ச் பந்துகளை ஸ்கொயர் லெக் மற்றும் ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார். பிறகு ஓவர் த விக்கெட் வீசிய நெஹ்ரா லெந்த்தை மாற்றாததால் அடுத்த பந்து மிட்விக்கெட்டில் சிக்சருக்குப் பறந்தது. கடைசி ஓவரில் நெஹ்ரா 19 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

முன்னதாக 18வது ஓவரில் மணீஷ் பாண்டேயிடம் சிக்கினார் ஆஷிஷ் நெஹ்ரா, முதல் பந்தே உயர்ந்து வந்த புல்டாசை பாண்டே பவுண்டரிக்கு விரட்டினார், அது நோபாலாகவும் ஆனது. அடுத்த பந்து லெந்த்தில் சற்றே வாகாக எழும்பி வர லாங் ஆனில் பெரிய சிக்சரை அடித்தார் பாண்டே. அடுத்த பந்து மோசமான புல்டாஸ், இம்முறை மிட்விக்கெட்டில் பந்து சிக்சருக்குப் பறந்தது. 18வது ஓவரிலும் 20 ரன்களைக் கொடுத்த நெஹ்ரா படுமோசமாக வீசி 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

முன்னதாக தொடக்கத்தில் (இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்ட) கம்பீர், ராபின் உத்தப்பா மிக அருமையாக விளையாடி 10.5 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 91 ரன்களைச் சேர்த்தனர். உத்தப்பா, நெஹ்ராவின் பந்தை நேராக ஒரு கவாஸ்கர் பாணி டிரைவ் பவுண்டரியுடன் தொடங்கினார்.

பிறகு 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் எடுத்த நிலையில் 32 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்த போது நேகி வீசிய பந்தை மேலேறி வந்து சிக்ஸ் அடிக்க நினைத்து ஸ்டம்ப்டு ஆனார். கம்பீர் முதலில் ஜடேஜாவை லாங் ஆனில் சிக்ஸ் அடித்தார் அப்போது பவுண்டரியில் பிராவோ எம்பிப் பந்தை பிடிக்க முயன்று சிக்சருக்குள் தள்ளி விட்டார்.

இரண்டாவது முறை பவன் நேகியை அதே பாணியில் அடிக்க பவுண்டரியில் டுபிளேசிஸ் கேட்சைப் பிடித்து விட்டார். ஆனால் பேலன்ஸ் தவறி ஒரு காலால் பவுண்டரியை மிதித்தார் அதுவும் சிக்ஸ் ஆனது. 52 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்து 80 ரன்களை எடுத்த கம்பீர் ஜடேஜாவிடம் ஆட்டமிழந்தார்.

இடையே காலிஸ் விக்கெட்டை 1 ரன்னில் வீழ்த்தினார் பவன் நேகி. மணீஷ் பாண்டே 19 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யூசுப் பத்தான் 9 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

பவன் நேகியின் 5 விக்கெட்டுகள் இல்லையெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ரன்களை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது இலக்கு 181 ரன்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x