Last Updated : 02 Aug, 2016 11:41 AM

 

Published : 02 Aug 2016 11:41 AM
Last Updated : 02 Aug 2016 11:41 AM

ரியோ 2016: தடைகளைத் தாண்டிய டட்டீ சந்த்

1980-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டட்டீ சந்த். இதற்காக அவர் சந்தித்துள்ள போராட்டங்கள் ஏராளம். ஒருபுறம் மைதானத்திலும், மறுபுறம் நீதிமன்றத்திலும் பெரும் போராட்டம் நடத்தி இந்த நிலைக்கு வந்திருக்கிறார் டட்டீ சந்த். அவரது போராட்டக் கதையை விரிவாகப் பார்ப்போம்.

ஒடிஷாவில் மாதம் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டட்டீ சந்த். அவரது அப்பா ஒரு நெசவாளி. டட்டீயின் அக்கா சரஸ்வதி ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமிக்கவராக இருந்தார். “விளையாட்டுத் துறையில் சாதித்தால் அரசு வேலை கிடைக்கும், நிதி உதவிகளும் கிடைக்கும்” என்று ஊரிலுள்ள சிலர் கூற, ஓட்டப்பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார் சரஸ்வதி. அவரைப் பார்த்து டட்டீ சந்தும் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். உள்ளூர் மற்றும் மாவட்ட அள விலான போட்டிகளில் வென்றதால் இருவருக்கும் பள்ளியில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

இவர்கள் இருவரில் சரஸ்வதியின் கனவு ஒரு பாதுகாப்பான வேலையோடு முடிவுக்கு வந்தது. தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற அவருக்கு ஒடிஷா காவல்துறையில் வேலை கிடைக்க, அதோடு தன் விளையாட்டுத்துறை கனவுகளை முடித்துக்கொண்டார். ஆனால் டட்டீ சந்த் அப்படி ஓயவில்லை. விளையாட்டுத் துறையில் மேலும் சாதிக்க விரும்பினார். 2013-ம் ஆண்டு தனது 17வது வயதில் உலக இளைஞர் தடகளப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார். இதற்கு தகுதி பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற அவர் 2014-ம் ஆண்டு தைபேயில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். இதன் மூலம் இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில்தான் அவரது வாழ்க்கையை இருள் சூழ்ந்தது. ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின்போது வந்த புகாரைத் தொடர்ந்து இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு பாலின சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஆண்ட்ரோஜன் ஹார்மோன் (androgen hormone) சுரப்பதாக கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹைபராண்ட்ரோ ஜெனிசம் (hyperandrogenism) என்ற ஹார்மோன் பிரச்சினை யால் பாலின சோதனையில் டட்டீ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதிக்க, தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டார் டட்டீ சந்த். தன் கனவுகள் தகர்ந்ததால் கண்ணீரோடு பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார் டட்டீ சந்த்.

பாலியல் சோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டவர்களுக்கு 2 வழிகள்தான் உள்ளன. முதலாவது வழி விளையாட்டுத்துறையை விட்டு விலகுவது. இரண்டாவது வழி, ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அளவைக் குறைக்க சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவது. ஆனால் டட்டீ சந்த் 3-வதாக ஒரு வழியை கண்டுபிடித்தார். அது தனக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வழக்கு தொடர்வது. “என் உடலில் இயற்கையாக உள்ள ஒரு குறைக்கு நான் ஏதும் செய்ய முடியாது. நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. அப்படி இருக்கும்போது என் உடலில் உள்ள குறையை வைத்து எனக்குத் தடை விதிக்க முடியாது. சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும்” என்று சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவருக்கு ஆதரவாக இந்திய விளையாட்டு ஆணையமும் களத்தில் குதித்தது. மேலும் சர்வதேச அளவில் பல வீரர்களும், விஞ்ஞானிகளும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை 25-ம் தேதி டட்டீ சந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நீக்கியது. தடை விலக்கப்பட்டாலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சிபெற டட்டீ சந்துக்கு அழைப்பு கிடைக்கவில்லை. இதனால் துவண்டு போனார் டட்டீ. இதைக் கேள்விப்பட்ட அவரது முன்னாள் பயிற்சியாளரான நாக்பூரி ரமேஷ், அவரை ஹைதராபாத்தில் பயிற்சி பெற அழைத்தார். ஹைதராபாத்தில் பாட்மிண்டன் பயிற்சி மையத்தை நடத்திவந்த கோபிசந்திடம் பேசிய ரமேஷ், அங்குள்ள நவீன வசதிகளை டட்டீ சந்த் பயன்படுத்த அனுமதி பெற்றார்.

ரமேஷ், கோபிசந்த் ஆகியோரின் உதவியால் புதிய பலம் பெற்ற டட்டீ சந்த் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். அடுத்தடுத்து போட்டிகளில் வென்றவர் கடந்த ஜூன் 25-ம் தேதி கஜகஸ்தானில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் 100 மீட்டர் தூரத்தை 11.24 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார். (ஒலிம்பிக்கில் ஒருவர் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் பந்தய தூரத்தை 11.32 வினாடிகளில் கடக்கவேண்டும்) இதன் மூலம் பி.டி.உஷாவுக்கு பிறகு இப்பிரிவில் கலந்துகொள்ளும் முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

“கோபிசந்தும், பயிற்சியாளர் ரமேஷும் இல்லாவிட்டால் நான் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருக்க முடியாது” என்று கூறும் டட்டீ சந்த், இதுவரை காட்டிய போராட்ட குணத்தை ஒலிம்பிக்கிலும் காட்டி பதக்கத்தை வெல்வேன் என்று நம்புகிறார். அவரது கனவு நனவாக வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x