Last Updated : 15 Jul, 2016 09:40 AM

 

Published : 15 Jul 2016 09:40 AM
Last Updated : 15 Jul 2016 09:40 AM

ரியோ தடகளத்தில் இரு தமிழக வீரர்கள்

ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர்கள், சுதந்திரத்துக்கு பிறகு பதக்கம் வென்றதில்லை. ஏன் இறுதிச் சுற்றில் கால்பதிப்பதே அரிதுதான். 2012-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இறுதி சுற்று வரை முன்னேறியிருந்தனர். இம்முறை ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் இருந்து அதிக பட்சமாக 16 வீராங்கனைகள் உட்பட 36 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் ஆடவர் பிரிவில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜீவ் ஆகிய நால்வர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தருண் அய்யாசாமி, ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் தமிழ் மண்ணை சேர்ந்தவர் கள். இந்த நால்வர் கூட்டணி பெங்களூ ருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 13-வது இடம் பிடித்தது.

இவர்கள் பந்தய தூரத்தை 3:00.91 விநாடிகளில் கடந்தனர். இது தேசிய சாதனையாகவும் அமைந்தது. இதற்கு முன்னர் இந்த நால்வரை உள்ளடக்கிய அணி துருக்கியில் நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 3:02.17 விநாடிகளில் கடந்திருந்தது.

ஆரோக்கிய ராஜீவ் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சவுந்தரராஜன், லில்லி சந்திரா. ராஜீவின் தம்பி ரஞ்சித்தும் ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு எலிசபெத் என்ற தங்கையும் உள்ளார்.

லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த ஆரோக்கிய ராஜீவ், தற்போது இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமாண்டிங் ஆபீசராக பணியாற்றி வருகிறார். இளம் வயதிலிருந்தே தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இவரை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்கியவர் ரயில்வேயில் பணியாற்றி வரும் தடகள வீரர் ராமச்சந்திரன்தான்.

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் 400 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் டிரிப்பிள் ஜம்ப் ஆகிய போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பதக்கங்களை ஆரோக்கிய ராஜீவ் பெற்றுள்ளார்.

2010-ல் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார். அங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று, 2012-ல் தேசிய போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதைத் தொடர்ந்து 2013 மற்றும் 2015-ல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் அதே பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 2014-ல் ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2015-ல் தென் கொரியாவில் ராணுவ விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ரியோ ஒலிம்பிக் குறித்து ஆரோக்கிய ராஜீவ் கூறும்போது, “தகுதிச் சுற்றுப் போட்டியில் நாங்கள் 3.009 விநாடிகளில் இலக்கை எட்டினோம். இந்த நேரம் இந்த ஆண்டில் உலக அளவில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. எங்களது பயிற்சியை மேலும் தீவிரப்படுத்துவோம். ரியோவில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தருண் அய்யாசாமி

தருண் அய்யாசாமி, திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள சின்னேரிபாளையம் ஊராட்சி, ராவுத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அய்யாசாமி. தாயார் பூங்கொடி. தருணின் ஏழு வயதில் தந்தை இறந்துவிட்டார். தாயார், தனியார் பள்ளி ஆசிரியர். இளம் வயதில் ஆரம்பித்த தடகள ஆர்வம் தற்போது தருணை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

தருண் தனது பள்ளிப் பருவத்தில் கோ-கோ விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மாநில அளவிலான போட்டியிலும் அவர் பங்கேற்றுள்ளார். குழு விளையாட்டில் தனது தனிப்பட்ட திறன் வெளியே தெரியாது என கருதிய தருண் 10-ம் வகுப்பு படிக்கும் போதுதான் ஓட்டப்பந்தயத்தின் மீது தனது கவனத்தை திருப்பினார்.

திருப்பூரை சேர்ந்த தடகள பயிற்சியாளர் ஜே.அழகேசனிடம் முறைப்படி பயிற்சி பெற்று தன்னை மெருகேற்றினார்.

2012 முதல் 2014 வரை உள்ள காலகட்டத்தில் மாநில தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்றாண்டுகள் தங்கம் வென்று அசத்தினார். 2014-ல் மாநில தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 21.4 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 48.6 விநாடிகளிலும் தருண் இலக்கை கடந்தது தற்போது வரை சாதனையாக உள்ளது.

இதே போன்று மாநில அளவில் 8 சாதனைகளையும், தேசிய அளவில் 6 சாதனைகளையும் தருண் படைத்துள்ளார். தேசிய அளவில் 40 பதக்கங்களை வென்றுள்ளார். 2016-ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தருண் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளார்.

மகன் ஒலிம்பிக்கில் ஓடுவதை நான் பார்க்க வேண்டும் என்பது கடந்த பிப்ரவரி மாதம் தெற்காசியப் போட்டியில் தருண் அய்யாசாமி தங்கம் வென்றபோது, அவரது தாய் பூங்கொடி சொன்னவார்த்தைகள். இன்றைக்கு அது பலித்துள்ளது. ஒரு தாயின் கனவை தனயன் நிறைவேற்றி யுள்ளார்.

பூங்கொடி கூறும்போது, “வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் இது. குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இத்தனை நாள் பட்ட துயரங்கள் இதனால், கரைந்துவிட்டன. தருண் அய்யாசாமி கர்நாடக மாநிலம் மங்களூர் ஆல்வாஸ் பல்கலையில், பி.ஏ., மனிதவளம் மேம்பாடு முதலாம் ஆண்டு பட்டதாரி.

தருண் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். கடந்த 6 ஆண்டுகளாக ஓட்டப்போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று மாவட்டம், மாநிலம், தேசிய போட்டிகளில் பங்கேற்று வந்தான். தருண் தடகளப்போட்டிகளில் பங்கேற்க சென்றால், அந்த மாதத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கூடுதல் செலவாகும். அன்றைக்கு பட்டசிரமங்கள் எல்லாம், இன்றைக்கு இந்த வெற்றிமூலம் நீங்கியுள்ளது” என்றார்.

ஒலிம்பிக் போட்டி தொடர்பாக தருண் அய்யாசாமி கூறும்போது, “பெங்களூருவில் நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் நாங்கள் இலக்கை அடைந்த நேரம் இந்த ஆண்டில் உலக அளவில் 2-வது சிறந்த ஓட்டமாக பதிவாகி உள்ளது.

ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி சவாலாக இருக்கும் என கருதுகிறோம். இம்முறை நிச்சயம் இறுதி சுற்றில் கால்பதித்து தங்கம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மற்ற இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் குன்ஹூ முகமது இந்திய ராணுவத்தில் சுபைதாராக பணியாற்றி வருகிறார். முகமது அனுஷ் இந்திய கப்பற்படையில் பணியாற்றுகிறார்.

கடந்த 3 ஒலிம்பிக் போட்டியிலும் தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் பதக்கம் கைப்பற்றவில்லை.

ஆனால் தற்போது இந்த ஆண்டில் உலகின் சிறந்த அணிகளில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி இம்முறை தொடர் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஏனே னில் ஒலிம்பிக் சாம்பியனான பஹா மஸ், வெண்கலப்ப பதக்கம் வென்ற டிரினிடாட் அணிகளின் பார்ம் மோச மாகவே உள்ளது. மேலும் இவர்கள் உலக தரவரிசையில் குறிப்பிடும்படியான இடத்திலும் இல்லை.

ஆனால் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற யூரோ சாம்பியன்ஷிப்பில் பெல்ஜியம் அணி பந்தய தூரத்தை 3:01.10 விநாடிகளில் கடந்தது. இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் இலக்கை 3:01.44 விநாடிகளில் அடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. எனினும் தமிழக வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x