Published : 15 Mar 2017 07:03 PM
Last Updated : 15 Mar 2017 07:03 PM

ராஞ்சியில் விவாதத்திற்குரிய பிட்சில் 3-வது டெஸ்ட்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா

இந்திய உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் குறிப்பாக விராட் கோலி கேப்டனான பிறகு பிட்ச் சர்ச்சைகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமையன்று மீண்டும் விவாதத்திற்குரிய ஒரு பிட்சில் ராஞ்சியில் இந்திய-ஆஸ்திரேலிய 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

ராஞ்சியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ராஞ்சியில் இன்னொரு ரஞ்சி தர பிட்சையே எதிர்பார்க்கலாம்.

இந்திய அணிக்கு முரளி விஜய் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. அதே போல் சுழல் பிட்ச் என்றால் கருண் நாயர் நீக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் காயத்தினால் இல்லாதது பெரும் பின்னடைவுதான், அவருக்குப் பதிலாக கம்மின்ஸ் தேர்வு செய்யப்படுவாரா அல்லது ஸ்டாய்னிஸ், மெக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஆஸ்டன் ஆகர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை காலை மேட்ச் தொடங்கும்போதுதான் தெரியும்.

கடந்த சில நாட்களாக ராஞ்சி பிட்ச் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. பிட்ச் நிறம் வழக்கத்துக்கு மாறாக டார்க்காக இருப்பது வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ராஞ்சி பிட்சைப் பற்றி கூறும்போது, ‘சேற்றை அப்பி ரோலர் போட்டு உருட்டியது போல் தெரிகிறது’ என்றார்.

முதல் நாளே திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அப்படி இல்லையென்றாலும் 2ம் நாளில் பிட்ச் உடையும் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பவுன்ஸ் இருக்காது. பெங்களூரு பிட்ச் போல், அல்லது பொதுவாகவே இந்திய பிட்ச் போல் பந்துகள் எழும்பியும் தாழ்ந்தும் வரும் என்றே தெரிகிறது.

இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை ஆஸ்திரேலியர்கள் நன்றாக ஆடியது போல் இந்திய வீரர்கள் ஆஸி. ஸ்பின்னர்களை நன்றாக ஆடவில்லை. கேப்டன் விராட் கோலி இந்தத் தொடரில் இதுவரை, 0, 13, 12, 15 என்று சொதப்பி வருகிறார். எனவே அவர் நிச்சயம் ஒரு பெரிய இன்னிங்ஸிற்குத் தயாராக இருப்பார்.

டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலியா நிச்சயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஆடும், இந்திய அணியும் பெங்களூரு வெற்றிக்குப் பிறகு உத்வேகமான மன நிலையில் களமிறங்கும் என்பதால் விறுவிறுப்பான மற்றுமொரு டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது என்று கூற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x