Last Updated : 26 Oct, 2016 09:54 AM

 

Published : 26 Oct 2016 09:54 AM
Last Updated : 26 Oct 2016 09:54 AM

ராஞ்சியில் இன்று 4-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் தோனி குழுவினர்

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் 4-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதுகின்றன. கேப்டன் தோனியின் சொந்த மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுவதால் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து பதிலடி கொடுத்தது. கடைசியாக மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

விராட் கோலி 154 ரன்கள் விளாசி அசத்தினார். 4-வது வீரராக களமிறங்கிய தோனி புத்துணர்ச்சி யுடன் சில அசாத்தியமான ஷாட்களை விளையாடி 80 ரன்கள் விளாசினார். 3-வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 151 ரன்கள் சேர்த்தது இலக்கை தொய்வின்றி துரத்த உதவியது.

இன்றைய ஆட்டத்திலும் தோனி 4-வது வீரராக களமிறங்குவார் என கருதப்படுகிறது. 9 ஆயிரம் ரன்களை 50 சதவீத சராசரியுடன் கடந்துள்ள முதல் வீரரான அவரிடம் இருந்து சொந்த மண்ணில் இன்று மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

தோனி தலைமையில் ராஞ்சியில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி 20 ஆட்டத்தில் விளை யாடி உள்ளது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் டி 20 ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழை காரணமாக முடிவில்லாமல் போனது.

துணை கேப்டனான விராட் கோலி ராஞ்சி மைதானத்தில் இரு ஆட்டத்தில் விளையாடி 216 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் 139 ஆகும். 3-வது ஒருநாள் போட்டியில் 286 ரன்கள் இலக்கை அடையை கோலியின் நேர்த்தியான ஆட்டம் உதவியாக இருந்தது. 6 ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

26 சதங்கள் அடித்துள்ள கோலியை இன்றைய ஆட்டத்தில் விரைவில் ஆட்டமிழக்க செய்வதே நியூஸிலாந்து அணியின் பிரதான திட்டங்களுள் ஒன்றாக இருக்கும். 35 வயதான தோனி மீண்டும் அதிரடி பார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சொந்த மண்ணில் தோனி இனிமேல் மறுபடியும் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரிய வில்லை. இதனால் இன்றைய ஆட்டம் அவருக்கு உணர்வுப் பூர்வமானதாக அமையக்கூடும். தோனி அதிரடியாக விளையாட ஆரம்பித்துள்ளதால் நியூஸிலாந்து அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னணி வீரர்களான அஸ்வின், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமலேயே இந்த தொடரில் இந்திய அணி அசத்தி வருகிறது. பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான கேதார் ஜாதவ் இது வரை 6 விக்கெட்கள் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்கள் கைப் பற்றியவர்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். ஒவ்வொரு முறையும் அவரை தோனி பந்து வீச்சுக்கு உட்படுத்தும் போதும் விக்கெட் வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பவராக உள்ளார்.

அமித் மிஸ்ரா தனது அனுபவத்தால் அசத்தி வருகிறார். அக் ஷர் படேலின் பந்து வீச்சும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ் ஆரம்பத்திலும், ஜஸ்பிரித் பும்ரா கடைசி கட்டத்திலும் நெருக்கடி கொடுப்பவர்களாக திகழ்கின்றனர்.

ரெய்னா இடத்தை தக்கவைத் துள்ள 31 வயதான கேதார் ஜாதவ் பேட்டிங்கிலும் கைகொடுப்பவராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கருத்தில் கொண்டு கேதார் ஜாதவை 6-வது வீரராக நீண்ட கால திட்டத்துக்கு தகுந்தபடி பயன்படுத்திக்கொள்ள அணி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. ஹர்திக் பாண்டியா முதல் ஆட்டத்தில் ஜொலித்த நிலையில் அடுத்த இரு ஆட்டத்திலும் சொல்லிக் கொள்ளும்படியான திறன் அவரிடம் இருந்து வெளிப்பட வில்லை. இதனால் அவர் ஆல்ரவுண் டராக சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது.

இந்திய அணியின் தொடக்க பேட்டிங் இந்த தொடரில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஜோடி மூன்று ஆட்டங்களிலும் முதல் விக்கெட்டுக்கு முறையே 49, 21, 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள் ளது. இன்றைய ஆட்டத்தில் இவர்கள் அதிரடி பார்முக்கு திரும்பினால் நடுக்கள வீரர்களுக்கு நெருக்கடி குறையும்.

டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரிலாவது குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி வீரர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

இந்திய சுற்றுப்பயணத்தில் டாம் லதாம், வில்லியம்சன் ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ரன்களை சேர்த்துள்ளனர். மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோரிடமிருந்து இதுவரை பெரிய அளவிலான ரன்குவிப்பு வெளிப்படவில்லை. இவர்கள் இருவரும் இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் சொதப்பிய நிலையில் இந்த தொடரில் நியூஸிலாந்து அணியின் பின்கள பேட்டிங் பலம் சேர்த்து வருகிறது. நீஷம், மேட் ஹென்றி, டிம் சவுத்தி ஆகியோர் அணியின் ரன்குவிப்பில் சீரான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் நியூஸிலாந்து அணியும் களமிறங்குவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, மணீஷ் பாண்டே, ஜெயந்த் யாதவ், அக் ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மன்தீப் சிங், அமித் மிஸ்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ்.

நியூஸிலாந்து:

வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர், டாம் லதாம், லூக் ரான்ஜி, ஜேம்ஸ் நீஷம், கோரே ஆண்டர்சன், டக் பிரேஸ்வெல், ஆன்டன் டேவ்சிச், வாட்லிங், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி.

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x