Published : 10 Apr 2015 09:57 AM
Last Updated : 10 Apr 2015 09:57 AM

ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’டான புனேவில் இந்த ஆட்டம் நடைபெறுவதால் அந்த அணி வெற்றியோடு தொடங்க விரும்பும். அதேநேரத்தில் கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய பலம் வாய்ந்த பஞ்சாப் அணிக்கும் இது முதல் போட்டி என்பதால் அந்த அணியும் வெற்றி யோடு தொடங்க முயற்சிக்கும்.

பஞ்சாப் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அந்த அணியின் இன்னிங்ஸை வீரேந்திர சேவாக்கும், முரளி விஜயும் தொடங்குவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. முரளி விஜய் கடந்த 7 ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வந்திருக்கிறார். சேவாக் அடிக்க ஆரம்பித்துவிட்டால், அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த ஜோடி பஞ்சாப் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் மேக்ஸ்வெல்

மிடில் ஆர்டரில் மனன் வோரா, கிளன் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இவர்களில் யாராவது ஒருவர் களத்தில் நின்றுவிட்டாலும் ராஜஸ் தான் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் 552 ரன்கள் குவித்த சிக்ஸர் மன்னன் மேக் ஸ்வெல், இந்த முறையும் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டுவார் என நம்பலாம்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மிட்செல் ஜான்சன், சந்தீப் சர்மா ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேல், ரிஷி தவன் அல்லது ஷ்ரதுல் தாக்குல் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை நாயகன் ரஹானே

பிசிசிஐ-ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் இடையிலான பிரச்சினை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’ ஜெய்ப்பூரிலிருந்து புணேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய மைதானத்தில் ஆரம்பக் கட்ட போட்டிகளில் ஆடுவது அந்த அணிக்கு சவாலாக இருக்கலாம் என்றாலும், அதை சமாளிக்கக் கூடிய அளவுக்கு அந்த அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர்.

அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர் ஆகியோர் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கள மிறங்குவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரஹானே, இப்போது உலகக் கோப்பை உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய கையோடு வந்திருப்பதால் இந்த முறை அவர் இன்னும் சிறப்பாக ஆடுவார் என நம்பலாம்.

மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித், சஞ்ஜூ சாம்சன், கேப்டன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் வாட்சன், பின்னி, ஃபாக்னர் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் என்பது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கிறிஸ் மோரிஸ், ரஜத் பாட்டியா, தவல் குல்கர்னி, ஃபாக்னர் ஆகியோர் பலம் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. கிறிஸ் மோரிஸ் இடம் பெறும்பட்சத்தில் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும். கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அசத்தலாக ஆடிய கையோடு ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.

பஞ்சாப்:

ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), அக் ஷர் படேல், அனுரீத் சிங், பியூரான் ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், கிளன் மேக்ஸ்வெல், குருகீரத் சிங், கரன்வீர் சிங், மனன் வோரா, மிட்செல் ஜான்சன், பர்விந்தர் அவானா, ரிஷி தவன், சந்தீப் சர்மா, ஷ்ரதுல் தாக்குர், ஷான் மார்ஷ், சிவம் சர்மா, திசாரா பெரேரா, சேவாக், விருத்திமான் சாஹா, முரளி விஜய், நிகில் நாயக், யோகேஷ் கோல்வால்கர்.

ராஜஸ்தான்:

ஷேன் வாட்சன் (கேப்டன்), அபிஷேக் நய்யார், அஜிங்க்ய ரஹானே, அங்கித் சர்மா, பென் கட்டிங், தீபக் ஹூடா, குல்கர்னி, திஷந்த் யாக்னிக், ஜேம்ஸ் ஃபாக்னர், கேன் ரிச்சர்ட்ஸன், கருண் நாயர், பிரவீண் டாம்பே, ராகுல் திவேதியா, ரஜத் பாட்டியா, சஞ்ஜூ சாம்சன், ஸ்மித், ஸ்டூவர்ட் பின்னி, டிம் சவுதி, விக்ரம்ஜித் மாலிக், கிறிஸ் மோரிஸ், ஜுவான் தேரான், பரீந்தர் சிங், தினேஷ் சலுங்கே, திரிவேதி, பிரதீப் சாஹு.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும், பஞ்சாப் 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x