Published : 25 Nov 2015 01:35 PM
Last Updated : 25 Nov 2015 01:35 PM

மோர்கெல், ஹார்மர் அபாரம்: 215 ரன்களில் சுருண்டது இந்தியா

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தன் முதல் இன்னிங்சில் இந்தியா 215 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது. வான் ஸில் ரன் எடுக்காமல் அஸ்வினிடமும், இரவுக்காவலனாக இறக்கப்பட்ட இம்ரான் தாஹிர் 4 ரன்களில் ஜடேஜாவிடமும் ஆட்டமிழந்தனர்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த இந்திய அணியில் முரளி விஜய் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார், அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 54 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கடினமான பிட்ச் மற்றும் ரன் எடுக்க சிரமமான சூழ்நிலையில் 106 பந்துகளைச் சந்தித்து 32 ரன்களையும் எடுத்தார்.

விக்கெட் கீப்பர் டேன் விலாஸ் கைங்கரியத்தில் 15 ‘பை’-கள் உட்பட 21 ரன்கள் உதிரி வகையில் வந்தது.

ஷிகர் தவண் 12 ரன்கள் எடுத்து மீண்டும் ஒரு முறை சொதப்பி டீன் எல்கர் பந்தை சற்றே மேலேறி வந்து ஆட முயன்றார் ஆனால் பந்து சரியாக சிக்கவில்லை தவணின் அணுகுமுறையும் சரியாக அமையவில்லை இதனையடுத்து மட்டையின் உட்புறத்தில் பட்டு எல்கரிடமே கேட்ச் ஆனது. அவர் அதனை நன்றாகப் பிடித்தார்.

முரளி விஜய் அருமையான மற்றொரு டெஸ்ட் இன்னிங்ஸுக்கு அடித்தளம் அமைத்த நிலையில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்திருந்த போது மோர்னி மோர்கெல் அருமையாக ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை சற்றே ஸ்விங் செய்ய முழுதும் ஏமாந்தார் விஜய் பந்து கால்காப்பை தாக்கியது, அவுட் என்றார் நடுவர். முரளி விஜய்யும், ஷிகர் தவணும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 50 ரன்களை சேர்த்தனர். இதுவே ஜோடி அளவில் சேர்க்கப்பட்ட அதிக ரன்களாகும்.

இதற்கு அடுத்தபடியாக ஜடேஜா-சஹா ஜோடி 7-வது விக்கெட்டுக்காக 48 ரன்களைச் சேர்த்தனர். உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

மோர்கெல், ஹார்மர் அபாரப் பந்து வீச்சு:

உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாரா, ரஹானே, விராட் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்து இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை எடுத்து திணறியது.

இந்தியாவின் நம்பக பேட்ஸ்மேனான புஜாரா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஹார்மரின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிலிருந்து திரும்ப கால்காப்பில் வாங்கினார், அது ஸ்டம்பைத் தாக்கும் என்று முடிவெடுத்த நடுவர் கையை உயர்த்தினார். அது நேராக கால்காப்பில் வாங்கப்பட்டது.

மோர்னி மோர்கெல் மீண்டும் பந்து வீச அழைக்கப்பட்ட போது தொடர்ந்து ரஹானே, கோலி ஆகியோரை அவர் பிரச்சினைக்குள்ளாக்கினார். ரஹானே அவுட் ஆவதற்கு முதல் பந்து எட்ஜ் எடுத்தது ஆனால் கேட்சாகவில்லை, அடுத்த பந்து உள்ளே வர ரஹானே பவுல்டு ஆனார். ஸ்டம்புக்குச் செல்லும் வழியில் கால்காப்பைத் தட்டிச் சென்றது பந்து. ரஹானே சற்றே ஆக்ரோஷம் காண்பித்து ஆடினார், ஹார்மர் பந்து ஒன்றை லாங் ஆனில் மேலேறி வந்து சிக்சர் அடித்தார். ஆனால் 13 ரன்களில் அவர் மோர்கெலின் அபார பந்துக்கு பவுல்டு ஆனார்.

கேப்டன் விராட் கோலி 22 ரன்களுக்கு திருப்திகரமாக ஆடவில்லை, அசவுகரியமாகவே ஆடினார். 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்து ஒன்றை வீசினார் மோர்கெல். ஆஃப் திசை லைனில் சற்றே பந்தை வெளியே எடுத்தார், விராட் வழக்கம் போல் எட்ஜ் செய்தார் விக்கெட் கீப்பர் விலாஸுக்கு கேட்ச் ஆனது.

மோர்னி மோர்கெல் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தார். விஜய், ரஹானே, கோலி ஆகியோரை அபாரமான பந்துகள் மூலம் வீழ்த்தினார், கோலி இன்னமும் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை ஆட முடியாமல் திணறியது பட்டவர்த்தனமாக அவரது ஆட்டத்தில் தெரிந்தது, அவரது பலவீனத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்டார் மோர்னி மோர்கெல்.

ரோஹித் சர்மா சொதப்பல்

ரோஹித் சர்மா, மோர்னி மோர்கெலின் அருமையான ஸ்பெல்லுக்கிடையே சிக்கினார், தொடர்ந்து பந்தை உள்ளே கொண்டு வருவதும், வெளியே எடுப்பதுமாக அவரைக் குழப்பி எடுத்தார், இது ரோஹித் சர்மாவின் சொதப்பலான கால் நகர்வில் தெரிந்தது. முதல் ரன்னே ஒரு தடுமாற்ற ஸ்வீப் ஷாட்டில்தான் வந்தது.

இடையிடையே மோர்கெலின் பந்தை கால்காப்பில் வாங்கினார். ஒரு பந்து அவரது மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து சென்றது.

கடைசியில் ரபாதா பந்து வீச அழைக்கப்பட அந்த ஓரு ஓவரும் ரோஹித்துக்கு சவுகரியமாக அமையவில்லை. கடைசியில் வேதனை போதுமென்று ஆஃப் பிரேக் பவுலர் சைமன் ஹார்மரின் லெக் திசை நோக்கி திரும்பிய பந்தை தொட்டார், கெட்டார். கால்காப்பு-பேட்டில் பட்டு ஏ.பி.டிவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனது.

28 பந்துகளைச் சந்தித்து 2 ரன்களையே எடுத்து ரோஹித் சர்மா ஏமாற்றமளித்தார்.

ஜடேஜாவின் ஆக்ரோஷம்:

விஜய் தன்னம்பிக்கையுடன் அனாயசமாக ஆடினார் என்றால் ஜடேஜா தனது அச்சத்தை போக்கிக் கொள்ள மட்டையை சுழற்றினார். ஹார்மர் அவருக்கு சில பவுண்டரி பந்துகளை வழங்கினார்.

ஆனாலும் மேத்யூ ஹெய்டன் பாணியில் மோர்னி மோர்கெல் பந்து ஒன்றிற்கு மேலேறி வந்து அவரது தலைக்கு மேலாக நேராக அடித்த பவுண்டரி ஜடேஜாவின் அச்சமற்ற அணுகுமுறையை பிரதிபலித்ததாக அமைந்தது. இன்னொரு ஷாட்டையும் ஆஃப் திசையில் அவர் சுழற்றி பவுண்டரிக்கு விரட்டினார், இதனையடுத்து மோர்கெலின் அளவு மற்றும் திசை பாதிக்கப்பட்டது.

மோர்கெலை நன்றாக ஆடிய இவர் ரபாதாவின் வேகத்துக்குத் தடுமாறி கடைசியில் அவரது இன்ஸ்விங்கரை கவர் திசையில் அடிக்க முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு 34 ரன்களில் பவுல்டு ஆனார்.

விருத்திமான் சஹா 106 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஹார்மர் பந்தில் வெளியேறினார். அஸ்வின் 15 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு வாய்ப்புகள் வழங்கினார், கடைசியில் இம்ரான் தாஹீரின் கூக்ளியை டிரைவ் ஆட முயல பந்து மட்டை-கால்காப்பு இடைவெளியில் புகுந்து பவுல்டு ஆனது.

அமித் மிஸ்ரா ஹார்மர் பந்தில் எல்.பி ஆனார். இசாந்த் சர்மாவுக்கு பந்தை எதிர்கொள்ள வாய்ப்பில்லாமல் போனது. இந்தியா 215 ரன்களுக்குச் சுருண்டது.

ஹார்மர் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மோர்கெல் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x