Published : 01 Jul 2016 01:03 PM
Last Updated : 01 Jul 2016 01:03 PM

யூரோ 2016: போலந்தை பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதியில் போர்ச்சுக்கல்!

பிரான்ஸில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடர் அரையிறுதிக்கு போர்ச்சுக்கல் அணி முன்னேறியுள்ளது. பரபரப்பான காலிறுதி ஆட்டம் 1-1 என்று டிரா ஆக, பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுக்கல் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பெனால்டி ஷூட் அவுட்:

பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ முதல் ஷாட்டை அடிக்க வந்தார், போலந்து கோல் கீப்பர் ஃபேபியான்ஸ்கியை தவறான திசையில் நகர வைத்து ரொனால்டோ முதல் கோலை அடித்தார். போர்ச்சுகல் 1-0.

அடுத்து போலந்தின் நட்சத்திர வீரர் லெவாண்டோவ்ஸ்கி தனது ஷாட்டை கோலாக மாற்றினார் 1-1.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய 18 வயது போர்ச்சுகல் வீரர் ரொனாட்டோ சான்சேஸ் அடுத்ததாக கோல் வலையில் இடது மூலைக்கு பந்தை அனுப்பினார் போர்ச்சுக்கல் 2-1.

போலந்து அணியின் மிலிகி இடது காலால் கோல் வலைக்குள் செலுத்தினார் 2-2.

அடுத்ததாக போர்ச்சுக்கல் வீரர் மவ்டின்ஹோ, போலந்தின் கோல் கீப்பர் ஃபேபியன்ஸ்கிக்கு போக்குக் காட்டி வலது காலினால் கோலுக்குள் செலுத்தினார் போர்ச்சுகல் 3-2.

போலந்தின் கிளீக் தனது கோலை முறையாக அடிக்க 3-3.

போர்ச்சுகலின் நானி அடுத்ததாக ஓடிவரும் போது சற்றே தடுமாறினாலும், பக்கவாட்டு பாதை உதை மூலம் வலது மூலைக்குள் பந்தை செலுத்த போர்ச்சுகல் 4-3.

அடுத்ததாக வந்து பிளாசிஸ்கோவ்ஸ்கி போர்ச்சுக்கல் கோல் கீப்பருக்கு இடது புறம் அடிக்க அதனை பேட்ரிசியோ அருமையாக பாய்ந்து தடுத்தார்.

அடுத்து வந்த போர்ச்சுகலின் குரேஸ்மா இடது மேல் மூலையில் வலைக்குள் பந்தை உதைக்க போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

120 நேர விறுவிறுப்பான ஆட்டத்தில் 1-1:

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே போலந்து அணி அபாரமான ஓர் ஆட்டத்தில் முதல் கோலை அடித்து போர்ச்சுக்கலுக்கு அதிர்ச்சி அளித்தது.

கிட்டத்தட்ட தங்கள் பகுதிக்கு அருகே வலதுபுறத்திலிருந்து மிக நீண்ட பாஸ் ஒன்றை போலந்து வீரர் ஒருவர் தங்களது வலதுபுறத்திலிருந்து குறுக்காக அடிக்க பந்து மேலாக, நேராக அருமையாக போர்ச்சுக்கல் கோல் பகுதிக்கு இடது புறமாக வர அங்கு போர்ச்சுக்கல் வீரர் செட்ரிக் பந்தின் பவுன்ஸை தவறாகக் கணிக்க பந்து போலந்து வீரர் கோர்சிக்கியிடம் சிக்கியதை பார்க்கத்தான் முடிந்தது. அவர் உடனே விறுவிறு மூவில் பந்தை பாக்சிற்குள் எடுத்துச் சென்று நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கி அடிக்குமாறு பந்தை பெனால்டி பகுதிக்குள் அனுப்ப அவர் துல்லியமாக அதனை பக்கவாட்டு பாத உதையில் கோலுக்குள் செலுத்தினார். போலந்து 1-0.

இந்த முன்னிலை கொடுத்த உற்சாகத்தில் போலந்து அணி தங்கள் வசத்திலிருந்து பந்தை போர்ச்சுகலுக்கு அளிக்கவில்லை, போர்ச்சுக்கல் அணி வீரர்களும் தங்கள் வசம் வரும் பந்தையும், பாஸ்களையும் போலந்து வீரர்களிடம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர், மேலும் முதல் கோல் உட்பட போலந்து 5 ஷாட்களை கோலை நோக்கி அடிக்க போர்ச்சுகல் அணி ஒரு ஷாட்டை கூட கோலை நோக்கி அடிக்கவில்லை. பாஸ் செய்துகொண்டேயிருந்தனரே தவிர ஒருவீரராவது உள்ளே நுழைந்து பெனால்டி பகுதிக்குள் நுழைய முயற்சி செய்யவில்லை என்பதோடு சீராக போலந்தின் தடுப்பு வீரர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டனர் போர்ச்சுகல் வீரர்கள்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்த இடம் தெரியாமல் ஆடினார், வலது புறம், இடது புறம், நடுக்களம் என்று அவர் மாறி மாறி ஆடினாலும் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை, ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில்தான் போர்ச்சுக்கல் வசம் பந்து சிறிது நிமிடங்கள் இருந்தன. அதுவும் சான்சேஸ் மட்டுமே உள்ளே ஊடுருவ முயற்சி செய்து கொண்டிருந்தார், இம்முறையும் அவர் அருமையாக செட்ரிக்கிடம் அடிக்க வந்த பந்தை ரொனால்டோ கோல் நோக்கி அடித்தார், ஷாட்டில் வலுவில்லை.

11-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த கார்னரால் ஒன்றும் நடக்கவில்லை. 15-வது நிமிடத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே ரொனால்டோ தனக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை எதிர்பார்த்தபடியே விரயம் செய்தார்.

போர்ச்சுக்கல் இன்னமும் செட்டில் ஆகாத நிலையில் பந்துகளை தங்கள் கால்களிலிருந்தே இழந்து கொண்ட ஒரு தருணத்தில் 17-வது நிமிடம் போர்ச்சுக்கலுக்கு பெரும் ஆபத்தாக முடிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பந்தை ஒரு லாங் பாஸில் விறுவிறுவென்று போர்ச்சுக்கல் பகுதிக்குள் எடுத்துச் செல்ல லெவண்டோவ்ஸ்கி அடித்த ஷாட் ஒன்று கோலுக்கு வெளியே சென்றது, ஆனால் அடுத்த நிமிடமே லெவண்டோவ்ஸ்கியிடம் பிளாசிஸ்கோவ்ஸ்கி பந்தை அளிக்க அவர் மிகவும் சாதுரியமாக ஃபாண்ட்டேயின் இடது புறம் தட்டி விட்டு பிறகு லெவண்டோவ்ஸ்கியே விறுவிறுவென நகர்ந்து பந்தை தனது வலது காலுக்கு மாற்றிக் கொண்டு அடித்த ஷாட் போர்ச்சுகல் கோல் கீப்பர் பேட்ரிசியோவினால் தடுக்கப்பட்டது. இந்த நகர்வில் நிச்சயம் போலந்து 2-வது கோலை அடித்திருக்க வேண்டும், ஏனோ அது தகையவில்லை.

21-வது நிமிடத்தில் போலந்து வீரர் மிலிக் கோல் நோக்கி அடித்த ஷாட்டை போர்ச்சுகலின் பீப் தடுக்க கார்னர் வாய்ப்பு போலந்துக்குக் கிடைத்தது. அதாவது போலந்து அணியின் ஜெட்ரிஸிக் மற்றும் பிளாஸிஸ்கோவ்ஸ்கி முக்கோண வடிவமைத்து பந்தை போர்ச்சுக்கல் எல்லைக்குக் கொண்டு வந்து பிளாசிஸ்கோவ்ஸ்கி பாக்ஸிற்குள் எகிறி அருமையாக ஸ்ட்ரைக்கர் லெவண்டோவ்ஸ்கியிடம் அடிக்க, இதைத்தான் பீப் தடுக்க கார்னர் விளைந்தது, அது ஒன்றும் ஆகவில்லை, கார்னர் கோலாக மாறுவதெல்லாம் அரிதாகி விட்டன.

இரு அணிகளும் சவாலான ஆட்டத்திற்கு காலிறுதியைக் கொண்டு வர போர்ச்சுக்கலின் ரொனால்டோ சான்சேஸ் அருமையாக ஆடி வந்தார், ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் ஒரு ஆக்ரோஷ நகர்வை மேற்கொண்டது. முதலில் சான்சேசிடம் பந்து வர அதனை நானியிடம் அனுப்பினார், இவரை போலந்து வீரர்கள் சூழும் முன்னர் அவர் மீண்டும் சான்சேஸிடம் அனுப்பினார். அவர் தனது வலதுகாலிலிருந்து மின்னல் வேகத்தில் இடது காலுக்கு மாற்றி, இதற்கு மேல் பாஸ் செய்து கொண்டிருந்தால் மரியாதை இல்லை என்று நினைத்த சான்சேஸ் மிக அருமையாக இடது காலால் கோலை நோக்கி அடித்தார், அவர் குறி வைத்து அடித்த இடம் வேறு ஆனால் அடித்த புல்லட் ஷாட் இடையில் கிரிச்சோவியாக் என்ற போலந்து வீரரின் கையில் பட்டு லேசாக திசைதிரும்பியது, சான்சேஸின் ஒரிஜினல் ஷாட்டுக்கு தன்னை திசைப்படுத்திக் கொண்ட போலந்து கோல் கீப்பர் ஃபேபியான்ஸ்கியால் பந்தின் திடீர் திசைமாறலை ஒன்றும் செய்ய முடியவில்லை போலந்து சமன் செய்தது ஆட்டம் 1-1 என்று சமநிலை எய்தியது.

இடைவேளைக்குப் பிறகு...

இடைவேளைக்குப் பிறகு ஆட்டத்தில் போலந்து தொடக்கம் போலவே விறுவிறுப்பு காட்டியது. 48-வது நிமிடத்திலேயே லெவண்டோவ்ஸ்கியின் தலையால் அடிக்கும் முயற்சியில் வலுவில்லாமல் போனது.

48-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல்லிடம் கொஞ்ச நேரம் பந்தைக் காட்டாத போலந்து பிளாஸிகோவ்ஸ்கி, பிஸ்செக் ஆகியோரின் அருமையான ஒன் டு ஒன் பாஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட பிஸ்சேக், மிலிக்கைக் குறிவைத்து அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது. 52-வது நிமிடத்தில் மீண்டும் போர்ச்சுகலின் 18 வயது சுறுசுறுப்பு கால்கள் முன்னகர்ந்து போலந்து கோல் நோக்கி அடித்த ஷாட்டை ஃபேபியான்ஸ்கி எளிதில் பிடித்தார்.

இரண்டாவது பாதியில் முதல் பாதி போலவே போலந்து அணி சிறிது நேரத்திற்குப் பிறகு சற்றே களைப்படைய போர்ச்சுகல் ஆட்டம் அச்சுறுத்தலாக அமைந்தது, குறிப்பாக ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் ஃபாண்டே போலந்து கோல் நோக்கி தலையால் முட்டினார், முன்னதாக, பீப்பின் பாஸ் ஒன்று ரொனால்டொவை குறிவைத்து அடிக்கப்பட அதனை ஜெட்ரிக்சிக் படாதபாடு பட்டு வெளியே தட்டி விட்டார்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது இரு அணிகளுமே களைப்படைந்து விட்டதா அல்லது பெனால்டியில் ஷூட் அவுட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆடியதா என்பது தெரியவில்லை மொத்தத்தில் ஆக்சிலேட்டரிலிருந்து இரு அணிகளும் காலை எடுத்துவிட்டன, ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது.

அதில் ஒரேயொரு தவறு அல்லது போர்ச்சுக்கல் கோல் கீப்பரின் ஒரே ஒரு கணிப்பு சரியாக இந்தத் தொடர் முழுதும் மோசமாக ஆடிய போர்ச்சுகல் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இது ஏதோ ஒருவிதத்தில் அதிர்ஷ்டமே. குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த காலிறுதியிலும் சரியாக ஆடவில்லை, பாஸ்களை கோட்டைவிட்டார் கோல் நோக்கி அடித்த ஷாட்டில் வலுவில்லை.

அரையிறுதிக்குச் செல்ல வேண்டிய அணி உண்மையில் போலந்து அணியே, இந்த ஆட்டத்தில் அந்த அணியே சுறுசுறுப்பாக ஆடியது, அச்சுறுத்தலாக ஆடியது, ஆனால் பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரேயொரு ஷாட் அவர்களை வெளியேற்றியது. இந்த தொடரில் போர்ச்சுகல் அணி இதுவரை 6 முறை காலிறுக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 4 யூரோ கால்பந்து தொடர்களில் 3 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல்.

அரையிறுதியில் போர்ச்சுகல் அணி பெல்ஜியம் அல்லது வேல்ஸ் அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x