Last Updated : 15 Jun, 2016 11:41 AM

 

Published : 15 Jun 2016 11:41 AM
Last Updated : 15 Jun 2016 11:41 AM

யூரோ 2016: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏமாற்றம்; போர்ச்சுகலுடன் ஐஸ்லாந்து டிரா

பிரான்சில் நடைபெறும் யூரோ 2016 கால்பந்து தொடரின் எஃப் பிரிவு போட்டியில் வலுவான போர்ச்சுக்கல் அணியுடன் ஐஸ்லாந்து அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து அதிர்ச்சியளித்தது.

நட்சத்திர வீரர் ரொனால்டோ தலையால் முட்டி அடிக்க வேண்டிய கோல் வாய்ப்பைத் தவற விட்டதோடு, பெபேயின் கிராஸ் ஒன்றை கோலாக மாற்றும் முயற்சியில் பந்தைக் கோட்டை விட்டார்.

ஐஸ்லாந்து அணி முக்கியமான தொடர் ஒன்றில் ஆடுவது இதுவே முதல் முறை. ஆனால் தொடக்கத்தில் கைல்ஃபி சைகுர்ட்சன் கோல் அடிக்க முயன்றார் ஆனால் போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ர்சியோவைத் தாண்ட முடியவில்லை.

பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த அபாரமான கிராஸ் நானியிடம் வர அவர் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த முயன்றபோது தடுக்கப்பட்டது. மிகவும் நெருக்கமான வாய்ப்பு.

பிறகு ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் வலது புறத்தில் போர்ச்சுகல் வீரர் ஆந்த்ரே கோம்ஸ் அற்புதமான ஒரு ஆட்டத்தில் ஐஸ்லாந்து வீரர்களுக்குப் போக்கு காட்டி பிறகு தாழ்வாக கிராஸ் ஒன்றைச் செய்ய அருகிலிருந்த நானி கோலாக மாற்றினார், போர்ச்சுகல் 1-0 என்று முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பிறகும் போர்ச்சுகல் ஆதிக்கம் அதே பாணியில் தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சிகரமாக ஐஸ்லாந்து அணி சமன் செய்தது.

50-வது நிமிடத்தின் போது ஐஸ்லாந்து வீரர் ஜொஹான் பெர்க் குட்மண்ட்சன் வலதுபக்கத்திலிருந்து கிராஸ் ஒன்றை அடிக்க அது ஜார்னேசனிடம் வர அவர் அதனை அருமையாக கோலாக மாற்றி சமன் செய்தார், போர்ச்சுகல் அதிர்ச்சியடைந்தது.

அதன் பிறகு ரொனால்டோ சரியாக மார்க் செய்யப்பட்டார். இதனால் 56-வது நிமிடத்தில் அவரது ஒரு நகர்த்தல் தோல்வி அடைந்தது. 71-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதனை ரஃபேல் கிரைரோ அடித்தார், பந்து நானியிடம் வர மற்றொரு தலையால் அடிக்கும் கோல் முயற்சி கோலுக்கு வெளியே சென்றது. ரொனால்டோவின் கோல் முயற்சி ஒன்றும் கோல்போஸ்டுக்கு மேலே சென்றது.

85-வது நிமிடத்தில் ரொனால்டோவின் தலையால் அடிக்கும் கோல் முயற்சியும் தடுக்கப்பட, கடைசியில் ரொனால்டோவுக்குக் கிடைத்த 2 ஃப்ரீ கிக் வாய்ப்புகளிலும் கூட கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஐஸ்லாந்துடன் 1-1 என்று டிரா செய்து ஏமாற்றமளித்தது போர்ச்சுகல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x