Published : 29 Jun 2016 09:44 AM
Last Updated : 29 Jun 2016 09:44 AM

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை வெளியேற்றியது ஐஸ்லாந்து: காலிறுதியில் ஜூலை 3-ம் தேதி பிரான்ஸை சந்திக்கிறது

யூரோ கால்பந்து தொடரில் கத்துக்குட்டியான ஐஸ்லாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி யடைந்தது. இந்த வெற்றியால் காலிறுதிக்கு முன்னேறிய ஐஸ்லாந்து வரும் 3-ம் தேதி போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றின் கடைசி போட்டியில் நைஸ் நகரில் இங்கிலாந்து - ஐஸ்லாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. 4-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோலை அடித்தது. பெனால்டி வாய்ப்பை கேப்டன் வேய்ன் ரூனி கோலாக மாற்றினார். இந்த கோல் அடித்ததன் மூலம் டேவிட் பெக்காமின் 53 கோல்கள் சாதனையை ரூனி சமன் செய்தார்.

ஐஸ்லாந்து அடுத்த நிமிடத்திலேயே பதில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. 5-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹாரி ஆர்னசன் உதவியுடன் சிகுர்ட்சன் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. தொடர்ந்து 18-வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் சிக்த்ரோசன் 2-வது கோலை அடித்து முன்னிலையை ஏற்படுத்தினார். இந்த கோலை அடிக்க ஜான் டடி போட்வார்சன் உதவினார்.இதனால் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. மேலும் ஒரு கோல் அடித்து சமன் செய்ய இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐஸ்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.

இறுதி விசில் அடிக்கப்பட்டதும் ஐஸ்லாந்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் இங்கிலாந்து அணி வீரர்கள் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

யூரோ கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சிகளில் ஒன்றாக இங்கிலாந்தின் இந்த தோல்வி அமைந்தது. குறைந்த மக்கள் தொகை கொண்ட ஐஸ்லாந்து, முதல் முயற்சியிலேயே காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

1950 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் பகுதி நேர வீரர்களை கொண்டு விளையாடிய அமெரிக்க அணியிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியடைந்தது. அந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து பட்டம் வெல்லும் அணியாக கருதப்பட்டது. ஆனால் இந்த தோல்வி எல்லாற்றையும் புரட்டி போட்டது. அதன் பின்னர் 66 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள கத்துக்குட்டி அணியிடம் படுதோல்வி கண்டுள்ளது.

1966-ல் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதன் பின்னர் பெரிய அளவி லான தொடரை இதுவரை கைப்பற்றவில்லை. இந்த தொடரிலும் அந்த அணியின் சோகம் தொடர்கிறது. மேலும் இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய 3 நாட்களில் யூரோ தொடரில் இருந்து இங்கிலாந்து கால்பந்து அணி தோல்வியை சந்தித்து மூட்டை கட்டியுள்ளது.

பயிற்சியாளர் ராஜினாமா

ஐஸ்லாந்திடம் தோல்வி யடைந்து காலிறுதி வாய்ப்பை இங்கிலாந்து அணி இழந்த நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இங்கிலாந்து பயிற்சியாளர் ராய் ஹோட்ஜ்சன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலியின் பேபியோ கேப்பெல் லாவுக்கு பதிலாக ஹோட்ஜ்சன், இங்கிலாந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இங்கிலாந்து விளையாடிய 56 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பெரிய தொடர்களில் சாதித்த தில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x