Published : 19 Jun 2016 10:24 AM
Last Updated : 19 Jun 2016 10:24 AM

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் - அயர்லாந்தை வீழ்த்தியது பெல்ஜியம்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் - துருக்கி அணிகள் நேற்று முன்தினம் மோதின. ஆரம்பம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் அல்வாரா மொராட்டா 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். நோலிடோவிடம் பாஸை பெற்று தலையால் முட்டி கோல் அடித்தார் மொராட்டா.

அடுத்த 3-வது நிமிடத்தில் நோலிடோ கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் துருக்கி அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. 25-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹகன் ஃப்ரீகிக் மூலம் அடித்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் உத்வேகத்துடன் விளையாடியது. 48-வது நிமிடத்தில் மொராட்டா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

அதன் பின்னர் 3 முறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதும் ஸ்பெயின் வீரர்கள் நழுவ விட்டனர். கடைசி வரை துருக்கியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஸ்பெயின் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் செக் குடியரசை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஸ்பெயின் முன்னேறியது. ஸ்பெயின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி நள்ளிரவு குரோஷியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை டிராவில் முடித்தாலே ஸ்பெயின் தனது பிரிவில் முதலிடம் பிடித்து விடும். இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் நட்சத்திரம் இனியெஸ்டா கோல் அடிப்பதற்கு பல்வேறு வாய்ப்பு களை உருவாக்கி கொடுத்தார்.

இவரது துல்லியமான நகர்வு, பாஸ் பல்வேறு தருணங்களில் துருக்கி அணியை நிலைகுலையச் செய்தது.

துருக்கி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய மங்கி விட்டது. கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி செக்குடியரசுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் மற்ற பிரிவுகளில் உள்ள அணிகளின் முடிவை பொறுத்தே துருக்கியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

இங்கிலாந்து-ரஷ்யா போட்டி யைப் போன்றே இதுவும் ரசிகர்களின் ரகளை நிரம்பிய ஆட்டமாக அமைந்தது, துருக்கி ரசிகர்கள் மைதானத்துக்குள் பட்டாசைத் தூக்கி எறிந்து தங்கள் வெறுப்பைக் காட்டினர். இதனால் துருக்கி அணியே யுஏபாவின் தடைகளை எதிர்நோக்கியுள்ளது.

நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. லுகாஹூ இரு கோல்களும், விட்செல் ஒரு கோலும் அடித்தனர். பெல்ஜியத்துக்கு இது முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் தோல்வியடைந்திருந்தது. அதே வேளையில் அயர்லாந்துக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தை சுவீடனுன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சுவிட்சர்லாந்து-பிரான்ஸ்
நேரம்: நள்ளிரவு 12.30

ருமேனியா-அல்பேனியா
நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x