Published : 25 Jun 2016 10:17 AM
Last Updated : 25 Jun 2016 10:17 AM

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்று இன்று தொடக்கம்

காலிறுதி முனைப்பில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி, போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, போலந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, குரோஷியா, அயர்லாந்து, சுலோவேக்கியா, ஹங்கேரி, பெல்ஜியம், ஐஸ்லாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அல்பேனியா, ருமேனியா, ரஷ்யா, உக்ரைன், துருக்கி, செக் குடியரசு, சுவீடன், ஆஸ்திரியா ஆகிய அணிகள் வெளியேறின. நாக் அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வியை தழுவும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.

சுவிட்சர்லாந்து - போலந்து

நாக் அவுட் சுற்றில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு செயின்ட் ஈட்டியன் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் சுற்றில் முதல் முறையாக கால் பதித்துள்ள சிறிய அணியான போலந்து லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2-ல் வெற்றி பெற்றது. உலக சாம்பியனான ஜெர்மனிக்கு எதிராக டிரா செய்திருந்தது. இதனால் அந்த அணி சுவிட்சர்லாந்துக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். சுவிட்சர்லாந்து அணியில் நட்சத்திர வீரராக கிரெய்ன்ட் ஹகாவும், போலந்து அணியில் நட்சத்திர வீரராக ராபர்ட் லீவான்டோவ்ஸ்கியும் உள்ளனர்.

கரத் பாலே

பாரிஸ் நகரில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ் - வடக்கு அயர்லாந்து பலப்பரீட்சை நடத்து கின்றன. இரு அணிகளும் இந்த முறைதான் முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

வேல்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கரத் பாலே பலம் சேர்ப்பவராக உள்ளார். இந்த தொடரில் அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இன்றும் அவர் அசத்தக்கூடும். வடக்கு அயர்லாந்தை சாதாரண அணி என்று கருதமுடியாது.

நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி கடுமையாக போராடி முன்னேறி உள்ளது. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக கையாளும் வடக்கு அயர்லாந்து இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கும்.

போர்ச்சுக்கல்-குரோஷியா

லென்ஸ் நகரில் நள்ளிரவு 12.30 மணிக்கு போர்ச்சுக்கல் - குரோஷியா அணிகள் மோதுகின்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி லீக் ஆட்டத்தில் வெற்றியே பெறாமல் 3 ஆட்டத்தையும் டிரா செய்தது.

முதல் 2 ஆட்டத்தில் 20 முறை இலக்கை நோக்கி பந்தை கொண்டு சென்றபோதிலும் கோல் அடிக்க முடியாமல் திணறிய ரொனால்டோ ஹங்கேரிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அற்புதமாக இரு கோல்கள் அடித்து மிரட்டினார். இதனால் அந்த அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

குரோஷியா லீக் சுற்றில் 3 ஆட்டத்தில் 2 ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிரா ஆனது. அந்த அணி வீரர்கள் ஆக்ரோஷ மான ஆட்டத்தை வெளிப் படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். இதனால் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற கூடுதலாக மெனக் கெட வேண்டியதிருக்கும். ரொனால்டோ மீண்டும் அசத்தினால் காலிறுதியில் நுழையும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x