Published : 26 Jun 2016 10:42 AM
Last Updated : 26 Jun 2016 10:42 AM

யூரோ கோப்பை கால்பந்து காலிறுதிக்கு முன்னேறியது போலந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று நேற்று தொடங்கியது. செயின்ட் எட்டியனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போலந்து அணிகள் மோதின. சுவிட்சர்லாந்து அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் வெற்றியும், இரு ஆட்டத்தை டிராவிலும் முடித்திருந்தது. அதேவேளையில் போலந்து இரு ஆட்டத்தில் வெற்றியும், உலக சாம்பியனுக்கு எதிராக டிராவும் கண்டிருந்தது.

ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் போலந்து முதல் கோலை அடித்தது. அந்த அணியின் குரோஷிகி கொடுத்த பாஸை பெற்று பிலாஸ்செகோவ்ஸி கோல் அடித்தார். சர்வதேச போட்டிகளில் பிலாஸ்செகோவ்ஸி அடித்த 18-வது கோல் இதுவாகும். முதல் பாதியில் போலந்து 1-0 என முன்னிலைப்பெற்றது. இரண் டாவது பாதியின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து அணியின் கோல் அடிக்கும் சில முயற்சிகளுக்கு போலந்து வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

82-வது நிமிடத்தில் சுவிட்சர் லாந்தின் ஹர்டான் ஷாகிரி, அந்தரத்தில் பறந்த படி பிரம்மிக் கும் வகையில் கோல் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். சுவிட்சர்லாந்து அணி விளையாடிய கடைசி 11 ஆட்டங்களில் ஷாகிரி அடித்த முதல் இதுவாக அமைந்தது.

இந்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை பெற்றது. அதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் எதும் அடிக்கப் படவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப் பட்டது. இதிலும் கோல்கள் அடிக்கப்படாததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் போலந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

போலந்து தரப்பில் லீவான்டோவ்ஸ்கி, மிலிக், காமில், பிலாஸ்செகோவ்ஸி, கிரைசோவியக் கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து தரப்பில் ஸ்டீபன், ஹெர்டான் ஷாகிரி, பேபியன் ஷார், ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ் கோல் அடித்தனர். கிரையன்ட் ஹகா கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் அந்த அணி தோல்வியை தழுவ நேரிட்டது.

இன்றைய ஆட்டங்கள்

பிரான்ஸ் - அயர்லாந்து

நேரம்: மாலை 6.30

ஜெர்மனி- சுலோவேக்கியா

நேரம்: இரவு 9.30

ஹங்கேரி - பெல்ஜியம்

நேரம்: நள்ளிரவு 12.30

அந்தரத்தில் பறந்தபடி கோல் அடித்த சுவிட்சர்லாந்து வீரர் ஹர்டான் ஷாகிரி.

படம்:ராய்ட்டர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x