Last Updated : 06 Jul, 2016 09:38 AM

 

Published : 06 Jul 2016 09:38 AM
Last Updated : 06 Jul 2016 09:38 AM

யூரோ கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் நுழைவது யார்?- போர்ச்சுக்கல் - வேல்ஸ் இன்று பலப்பரீட்சை

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லயன் நகரில் போர்ச்சுக்கல் - வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஷ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணி யூரோ தொடரில் முதன்முறையாக களமிறங்கிய போதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் சுலோவேக்கியாவை 2-1 என்ற கணக்கிலும், ரஷ்யாவை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

இங்கிலாந்திடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து பி பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. நாக் அவுட் சுற்றில் வடக்கு அயர்லாந்தை 1-0 எனவும், காலிறுதியில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை 3-1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்தது.

போர்ச்சுக்கல் அதிர்ஷ்டத் தால் அரையிறுதி வரை முன்னேறி யுள்ளதாக அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த அணி கடைசியாக விளையாடிய 5 யூரோ தொடரில் 4-வது முறை யாக அரையிறுதிக்கு தகுதி பெற் றுள்ளது. அந்த அணியின் அதிக பட்ச செயல்பாடாக 2004-ல் இறுதிப்போட்டி வரை முன்னேறி யிருந்தது.

இம்முறை போர்ச்சுக்கல் அணி லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் 3 போட்டியையும் டிரா செய்தே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சுற்றில் கூடுதல் நேரத்தில் 1 கோல் அடித்து குரோஷியாவை வீழ்த்தியது.

காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தை வென்றது. இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றி பெறவில்லை என்ற விமர்சனத் துக்கும் ஆளாகி உள்ளது.

போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், வேல்ஸ் நட்சத்திர வீரர் கரேத் பாலேவும் ரியல் மாட்ரிட் கிளப்பில் ஒன்றாக விளையாடி வருகின்றனர். இதனால் இவர்கள் இருவர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

பாலே இந்த தொடரில் 3 கோல்களும், ரொனால்டோ இரு கோல்களும் அடித்துள்ளனர். ரொனால்டோ இன்று மேலும் ஒரு கோல் அடித்தால் யூரோ தொடர்களில் அதிக கோல்கள் அடித்த பிரான்சின் பிளாட்டினியின் சாதனையை முறியடிப்பார். பிளாட்டினி 8 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் அணியின் நட்சத்தி வீரர் கரேத் பாலே கூறும்போது, “இந்த போட்டி இரு வீரர்களுக்கு இடையிலானது அல்ல. இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் அரையிறுதி ஆட்டம். ரொனால்டோ அற்புதமான வீரர். அவரது செயல்பாடு அனைவரும் அறிந்ததே. ஒரு குழுவாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். தனிப்பட்ட வீரர் மீது எங்களது கவனம் இல்லை.

போர்ச்சுக்கல் அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியின் ஆட்டங்களை டிவி-யில் பார்த்துள்ளோம். போர்ச்சுக்கல் ஆபத்தான அணி. தரவரிசையில் உயர் இடத்தில் உள்ள ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறியதை விமர்சிப்பது சரியாக இருக்காது. இன்று இரவு நாங்கள் மேலும் ஒரு சிறந்த ஆட்டத்தை கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் வரலாறு படைப்போம்’’ என்றார்.

ரொனால்டோ இந்த தொடரில் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். லீக் சுற்றில் முதல் இரு ஆட்டத்திலும் கோல் அடிக்கும் பல்வேறு வாய்ப்புகளை அவர் கோட்டை விட்டார். ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை அவர் வீண் செய்தார். எனினும் ஹங்கேரிக்கு எதிராக இரு கோல்கள் அடித்து அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்து சென்றார்.

இந்த ஆட்டத்தில் கோல் அடித்ததால் 4 யூரோ தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். 3 முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற அவர் நாக் அவுட்சுற்றில் சோபிக்கவில்லை. காலிறுதியிலும் ரொனால்டோ தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறினார்.

எனினும் அரையிறுதியில் அவர் நம்பிக்கை அளிப்பார் என கருதப்படுகிறது. 31 வயதாகும் ரொனால்டோ, போர்ச்சுக்கல் அணிக்கு கோப்பை வென்று கொடுக்க இதைவிட வேறு ஒரு நல்ல தருணம் கிடைக்காது என்றே நிபுணர்களும் கருதுகின்றனர்.

தடை காரணமாக போர்ச்சுக்கல் அணியின் பென் டேவிஸ், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராம்சே-வுக்கு பதிலாக ஜானி வில்லியம்ஸூம், பென் டேவிஸூக்கு பதிலாக புல்ஹாம் ஜாஸ் ரிச்சர்ட்ஸூம் களமிறங்கக்கூடும் என தெரிகிறது.

நேரம்: நள்ளிரவு 12.30 | ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x