Published : 24 Jun 2016 09:26 AM
Last Updated : 24 Jun 2016 09:26 AM

யூரோ கோப்பை கால்பந்து; இத்தாலியை வீழ்த்தியது அயர்லாந்து- நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், வெளியேறியது சுவீடன்

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் நடைபெற்றன. இ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இத்தாலி - அயர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 84-வது நிமிடத்தில் அயர்லாந்தின் வெஸ் கூலாகனின் கோல் அடிக்கும் முயற்சியை, இத்தாலி கோல் கீப்பர் சிறிகு தடுத்தார்.

ஆனால் அடுத்த நிமிடத்திலேயே அயர்லாந்தின் பிராடி, பந்தை அற்புதமாக தலையால் முட்டி கோல் அடித்தார். இத்தாலி அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

இந்த பிரிவில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த அயர்லாந்து, 3-வது நிலையில் சிறந்த அணி என்ற அடிப்படையில் முதல் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவீடனை 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இந்த தோல்வியால் சுவீடன் தொடரில் இருந்து வெளியேறியது.

எப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 1-1 என ஆட்டம் சமனில் இருந்த நிலையில் இஞ்சுரி நேரத்தில் டிராஸ்டாசன் கோல் அடித்து ஐஸ்லாந்துக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஐஸ்லாந்து நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ரொனால்டோ சாதனை

எப் பிரிவில் ஹங்கேரி - போர்ச்சுக்கல் இடையிலான ஆட்டம் 3 - 3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து ஆட்டம் டிராவில் முடிவடைய உதவினார். இந்த பிரிவில் ஹங்கேரி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஹங்கேரிக்கு எதிராக கோல்கள் அடித்தன் மூலம் 4 யூரோ கோப்பை கால்பந்து தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். 2004,2008,2012,2016 ம் ஆண்டுகளில் தொடர்ந்து கோல் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். யூரோவில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x