Published : 29 Jul 2016 08:21 PM
Last Updated : 29 Jul 2016 08:21 PM

யாருக்கு வெற்றி? விறுவிறுப்பான கட்டத்தில் ஆஸி.-இலங்கை முதல் டெஸ்ட்

பல்லெகிலேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டம் கடும் மழையினால் பாதிக்கப்பட 268 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்டம் இன்றைய தினம் நிரந்தரமாக நிறுத்தப்பட்ட போது ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களுடனும் ஆடம் வோஜஸ் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாளை ஆட்டத்தின் கடைசி நாள், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தாலும் இலங்கையின் வெற்றி வாய்ப்பு சற்றே கூடுதலாக தெரிகிறது.

இன்று மொத்தம் 40.4 ஓவர்களே சாத்தியமாயின, மழை, பிறகு கடைசியில் மோசமான வெளிச்சம் ஆகியவை காரணமாக 4-ம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

40.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சில் 27 ஓவர்களை ஆடியது. முன்னதாக இலங்கை அணி தன் 2-வது இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலான 268 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு இது மறக்க வேண்டிய டெஸ்ட் போட்டியானது, எந்த வித யோசனையுமற்ற ‘மட்டி’ ஆக்ரோஷத்தை அவர் வெளிப்படுத்தி இந்த டெஸ்ட் போட்டியில் 0, 1 ஆகிய ஸ்கோர்களில் ஆட்டமிழந்துள்ளார். இத்தகைய பிட்ச்களில் பந்து பவுன்ஸ் ஆகும் ஷூட் ஆகும், இதை கணிக்கத் தவறிய வார்னர் ஹெராத் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று பவுல்டு ஆனார்.

மீண்டும் ஆக்ரோஷமே ஒரே சிந்தனையாக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் விளாசினார். ஸ்வீப் ஷாட்கள் மூலம் ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்துவது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற கணிக்கக்கூடிய விதங்களில் நடந்து கொள்ளும் பிட்சில் சாத்தியம், ஆனால் இலங்கை, இந்தியா போன்ற துணைக்கண்ட மண்பொதி பிட்ச்களில் பவுன்ஸ், திருப்பம் கணிக்க முடியாது போகும் போது ஸ்வீப் ஷாட் சரியான தெரிவல்ல, ஆனால் மேலை அணிகள் எப்போதும் ஸ்வீப் ஆடினால் ஸ்பின்னர்கள் பயந்து விடுவர் என்ற அணுகுமுறையைக் கொண்டவர்கள். இம்முறை கவாஜா திலுருவன் பெரேராவின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று எல்.பி. ஆகி வெளியேறினார்.

இதன் பிறகுதான் ஜோ பர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடுவதன் பலனை உணர்ந்தனர், ஆனால் இலங்கை வீச்சாளர்கள் நெருக்கடியை தளர்த்தவில்லை.

ஆனால் நிதானப் போக்கும் மரபுக்கு விரோதமான ஒரு ஸ்பின்னர் எதிரணியில் இருக்கும் போது கடினமே. லக்‌ஷன் சந்தகன் அப்படிப்பட்ட ஒரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர், அவரது வெளியே செல்லும் பந்துகளும் உள்ளே கொண்டு வரும் பந்துகளும் ஒரே ஆக்சனில் வருவதாகும், இதை வாசிப்பது கடும் கடினம். இப்படித்தான் 29 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நன்றாக ஆடிவந்த ஜோ பர்ன்ஸ், சந்தகனின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி ஸ்கொயராக சரேலென திரும்ப பவுல்டு ஆனார். இது இடது கை ஷேன்வார்ன் பந்தாகும். ஜோ பர்ன்ஸ், ஷேன் வார்ண்டு செய்யப்பட்டார் என்றே கூற வேண்டும்.

ஆடம் வோஜஸ் வந்த முதல் பந்திலேயே திலுருவன் பெரேராவிடம் எல்.பி.என்று தீர்ப்பளிக்கப்பட்டார். வோஜஸ் ரிவியூ சென்றார். ரிபிளேயில் பந்து லெக் ஸ்டம்பை விட்டு சற்றே விலகிச்செல்லுமாறு தெரிந்தது, காலை நன்றாகத் தூக்கிப் போட்டு வோஜஸ் ஆடியதால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். அந்த நிலையில் வோஜஸ் அவுட் ஆகியிருந்தால் ஆஸ்திரேலியா 64/4 என்று தோல்வி நெருக்குதலை சந்தித்திருக்கும்.

மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட போது ஆஸ்திரேலிய வீரர்கள் உண்மையில் 'விட்டா போதும்டா சாமி' என்றே நினைத்திருப்பார்கள்.

முன்னதாக நேற்றைய நாயகன் குசல் மெண்டிஸ் 7 ரன்கள் கூடுதலாகச் சேர்த்து 176 ரன்களில் ஸ்டார்க் பந்தில் விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹெராத் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து பதிலி வீரர் மோய்சஸ் ஹென்ரிக்ஸின் கவர் திசை அபார கேட்சுக்கு ஹேசில்வுட்டிடம் அவுட் ஆனார். ஆனால் இவரது 35 ரன்கள் நிச்சயம் ஆஸ்திரேலியா தோல்வி அடையும் போது அவர்களது ஓய்வறை விவாதமாக அமைய வாய்ப்புள்ளது. லக்‌ஷன் சந்தகன் அவுட் ஆன விதம் வழக்கத்துக்கு மாறாக அமைந்தது. ஸ்டார்க் பந்தை லெக் திசையில் நன்றாக ஒதுங்கிக் கொண்டு ஆட நினைத்தார், ஆனால் ஸ்டார்க் அவரது நகர்வைத் தொடர்ந்தார், உடலில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச சந்தகன் உடலில் பட்டு உருண்டு சென்று இரண்டு பெய்ல்களையும் தட்டி விட்டது.

நாளை மழை வந்தால் கூட முடிவு ஏற்படக்கூடிய அளவுக்கு ஆட்டம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x