Published : 27 Jun 2016 11:07 AM
Last Updated : 27 Jun 2016 11:07 AM

மெஸ்ஸி தவறவிட்ட பெனால்டி கோல்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சிலி சாம்பியன்

'மேஜிக்' மெஸ்ஸி பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கத் தவற, இறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் சிலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது.

ஒரு முக்கிய கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு 23 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் காத்திருப்பு தொடர்கிறது. சிலி வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு சல்யூட் செய்தனர். நாளை சிலியில் பொது விடுமுறை, மைதானத்தில் லத்தீன் அமெரிக்க இசை, பாட்டு, கொண்டாட்டம். ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’ பாடல் ஒலித்தது.

மெஸ்ஸி அதிர்ச்சியில் பெஞ்சில் வந்து அமர்ந்தார். 10 வீரர்களுக்கு சிலி அணி குறுக்கப்பட்டவுடன் முடிந்தது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் மன உறுதியுடன் ஆடி 90 நிமிடம் மற்றும் கூடுதல் அரை மணி நேர ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் செய்து பிறகு ஷூட் அவுட்டில் பதற்றம் தவிர்த்து தைரியத்துடன் ஆடினர். ஆனால் ஒரு நேரத்தில் இரு அணிகளுமே 10 வீரர்களுடன் ஆடினர்.

கடந்த முறை கிளாடியோ பிராவோ, அலெக்சிஸ் சான்சேஸ், பனேகா ஆகியோரது ஹீராயிச ஆட்டத்தினால் சிலி கோப்பா அமெரிக்கா சாம்பியன் ஆனது.

பெனால்டி ஷூட் அவுட்:

இம்முறை பெனால்டி ஷூட் அவுட்டை சிலி வீரர் விடால் தொடங்கினார். நல்ல ஷாட் அல்ல, ரொமீரோ இடது புறம் பந்தை கோல் செல்லாமல் முறியடித்தார்.

இப்போது அர்ஜென்டினா, கிக் அடிக்க வந்தவர் மேஜிக் மெஸ்ஸி, விடாலை விடவும் மோசமான ஷாட், கோல் கம்பிக்கு மேலே நன்றாகவே சென்றது மெஸ்ஸி தான் என்ன செய்து விட்டோம் என்று உணரும் முன்பே இதன் விளைவுகள் தாக்கம் பெற்றன.

25 அடி 30 அடி ஃப்ரீ கிக் எல்லாம் மெஸ்ஸிக்கு ஒன்றுமில்லாத நிலையில் பெனால்டி ஷூட் அவுட் என்ற கண்ணாடித் தரை எப்பேர் பட்ட வீரரையும் சறுக்கச் செய்வதே. மெஸ்ஸிக்கும் அடி சறுக்கும். சறுக்கியது.

சிலி அணிக்கு காஸ்டிலோ முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினாவுக்கு மஸ்செரானோ எண்ணிக்கையை தொடங்கினார். மீண்டும் சிலி அணிக்கு அராங்குய் 2-வது கோலை அடித்தார். அகிரோ, சிலி கோல் கீப்பர் பிராவோவைத் தாண்டி தள்ளிவிட்டார் 2-2.

அடுத்ததாக சிலி அணிக்காக 12 ஆண்டுகள் ஆடி வரும் அனுபவ வீரர் பியூசாஜர் ஆற்றல் வாய்ந்த ஷாட், நல்ல பிளேஸ்மெண்ட் 3-2 சிலி. அர்ஜென்டினா அணியின் பிக்லியா பதற்றத்துடனே வந்தார். பதற்றத்துடனேயே அடித்தார். இதனால் பிராவோ தனது இடது புறம் கோலை தடுத்தார்.

சிலி வீரர் சில்வா வந்தார் வென்றார். 4-2 கோல் கணக்கில் சிலி சாம்பியன்.

120 நிமிட நேர கடும் சவாலான ஆட்டத்தில் 0-0:

ஆட்டம் தொடங்கி முதல் 3 நிமிடத்திலேயே லாங் பாஸ் ஒன்று வர அதனை அர்ஜென்டினா, சிலி கோலுக்கு வெளியே அடித்தது, உடனடியாகவே சிலி அணியின் விடால் அருமையாக அர்ஜென்டின தடுப்பரணை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல அவர் அருகில் சகாக்கள் யாரும் இல்லை, ரொமீரோ பந்தை சேகரித்தார். 6-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் முதல் சுவையை உணர்ந்தது சிலி. இஸ்லா மெஸ்சியை தடுக்க முயல மெஸ்ஸி பந்தை டி மரியாவிடம் அடித்தார். இது கார்னர் கொடி அருகே ஃப்ரீ கிக் ஆனது. சிலி இதனை கிளியர் செய்தது.

17-வது நிமிடத்தில் மெஸ்ஸி மின்னல் வேகம் காட்ட சிலி வீரர் டயஸ் ஃபவுல் செய்துதான் காப்பாற்ற நேரிட்டது, இதனால் இவர் புக் செய்யப்பட்டார், 35 யார்டு ஃப்ரீ கிக் கிடைத்தது, மெஸ்ஸி பிரீ கிக் என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் இம்முறை சிலி கோல் கீப்பர் பிராவோவிடம் நேராக வந்தது. 20-வது நிமிடத்தில் டி மரியா ஓர் அற்புதமான நகர்வில் ஷூட் செய்யும் நிலைமையை உருவாக்கினார், ஆனால் ஷாட்டை சரியாக ஆட முடியவில்லை. பந்து மேலே சென்றது. அதேபோல் 23-வது நிமிடத்தில் ஹிகுவெய்னுக்குக் கிடைத்த வாய்ப்பையும் பிரேவ் பிராவோவினால் முறியடிக்கப்பட்டது.

28-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை மெஸ்ஸிக்கென்றே நியமிக்கப்பட்ட சிலி வீரர் டயஸ் ஃபவுல் செய்ய சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 42வது நிமிடத்தில் சிலி வீரர் விடால் பந்தை எடுத்துச் செல்ல, அர்ஜென்டின வீரர் ரோஜோ அவருக்கு கடும் சவால் அளிக்கும் முயற்சியில் தவறாக விடாலின் பின்னாலிலிருந்து தடுக்க முயன்றார். இது மஞ்சள் அட்டைக்குரிய தவறுதான் ஆனால் நடுவர் மிகக் கடுமையாக நடந்து கொண்டு ரெட் கார்டு காண்பித்தார், இரு அணிகளுமே 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்டது.

2-வது பாதியில் இரு அணிகளும் ஆக்ரோஷ வார்த்தை பரிமாறல் முழங்கை இடிப்புகளுடன் தொடங்கின. இரு அணிகளுமே ஒரு சரியான லயத்திற்கு வர முடியவில்லை பாஸ்கள் தடம் மாறியபடி இருந்தன. மைதானத்தின் மத்திய வட்டத்திலேயே ஆடிக் கொண்டிருந்தனர், தாக்குதல் வீரர்கள் ஏனோ ஊடுருவ முயலவில்லை.

இப்படியே சென்று கொண்டிருந்த போது சிலியின் மும்மூர்த்திகள் சான்சேஸ், வார்கஸ், சார்ல்ஸ் அராங்குய் ஆகியோர் கூட்டிணைந்து தொல்லை கொடுக்க தொடங்கினர். வலது புறம் பந்து மாறி மாறி வந்து மரியா வார்கஸிடம் வர இறுக்கமான கோணத்திலிருந்து வார்கசின் ஷாட் அர்ஜென்டின கோல் கீப்பர் ரொமிரோவிடம் நேராக வந்தது, இது ஒரு ஹாஃப் சான்ஸ்.

மெஸ்ஸி, சிலி அணியின் 2,3 தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குகாட்டி பந்தை அகிரோவுக்கு அடிக்க அருமையான வாய்ப்பை அவர் வைடாக அடித்து தவற விட்டார். இதில் மெஸ்ஸி வெறுப்படைந்தார். மெஸ்ஸி மீண்டும் கடுமையாகவே முயன்றார். கடைசியில் சுமார் 50 அடி தூரம் வரை ஓடி பந்தை தன் வசம் வைத்திருந்தார்.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேர 9-வது நிமிடத்தில் வார்கஸ் கிட்டத்தட்ட கோல் அடித்திருப்பார். டைவ் அடித்து தலையால் முட்டிய பந்தை ரொமிரோ அருமையாகப் பிடித்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில்தான் அர்ஜென்டினா அதிர்ஷ்டம் சோதிக்கப்பட்டது, பந்தை அருமையாக எடுத்து வந்து அர்ஜென்டின வீரர்கள் சிலி எல்லைக்குள் புகுந்து பந்து அகிரோவுக்கு வர அகிரோவின் அபாரமான கோல் முயற்சியில் பந்து வலைக்குள் செல்லும் கடைசி விநாடியில் தன் சக்திக்கும் மீறி எம்பிய சிலி கோல் கீப்பர் பிராவோ பந்தை பாருக்கு மேலே தட்டி விட்டார், இந்த தொடரின் ஆகச் சிறந்த கோல் தடுப்பு இது என்றே கூறிவிடலாம். உண்மையில் இந்த கோல் வாய்ப்பு கடைசி விநாடியில் பிராவோவினால் தட்டி விடப்படும்போதே இது சிலிக்கான இரவு என்று தெரிந்தது. இரு அணிகளும் கடைசியில் தங்களால் இயன்ற அளவுக்கு சவாலாக ஆடினர். ஆனால் கோல் வரவில்லை. ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

இதில் சிலி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பா அமெரிக்காவை 2-வது முறையாக தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x