Published : 22 Apr 2016 10:16 AM
Last Updated : 22 Apr 2016 10:16 AM

மெக்கல்லத்தை ஆட்டிப் படைத்த முஸ்தபிசுர் ரஹ்மான்: குஜராத்தை நொறுக்கிய ஹைதராபாத்

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ் அதிரடி நியூஸி. வீரரான பிரெண்டன் மெக்கல்லத்தை வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆட்டிப் படைத்தார்.

இன்றைய பந்துவீச்சு உலகில் மொகமது ஆமிர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தங்களது பல்வேறு தினுசான பந்துவீச்சின் மூலம் சிறந்த பேட்ஸ்மென்களையும் அச்சுறுத்தும் அதிரடி வீரர்களையும் மிரட்டி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது குறைவான வேகத்திலும் பந்தின் தையலை அபாரமாகப் பயன்படுத்தி மெதுவான, வேகமான கட்டர்களை வீசி மிரட்டி வருகிறார். ஏற்கெனவே அவர் தன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமற்ற வங்கதேச பிட்சில் இந்திய அணியையும் தென் ஆப்பிரிக்க அணியையும் ஒருநாள் போட்டிகளில் படுத்தி எடுத்தது நினைவிருக்கலாம், தென் ஆப்பிரிக்க அணியை டெஸ்ட் போட்டி ஒன்றிலும் ஆட்டிப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ராஜ்கோட்டில் குஜராத் லயன்ஸின் பிரெண்டன் மெக்கல்லமிற்கு கடும் தொல்லைகள் கொடுத்தார்.

முதலில் ஒரு வேகம் குறைந்த ஆஃப் கட்டரை முஸ்தபிசுர் ரஹ்மான் வீச மெக்கல்லம் ஆட முற்பட்டு தோல்வி அடைந்தார். அடுத்த பந்து சற்றே வேகம் கூடி சற்றே கூடுதலாக எழும்ப மெக்கல்லம் பொதுவாக தன் நிலையிலிருந்து திரும்பாதவர், பாயிண்டில் அடிக்கும் முயற்சியில் ‘ஸ்கொயர்’ ஆனார், மட்டையின் விளிம்பை உரசிச் சென்றது. 3-வது பந்து வேறு விதமாக சற்றே ஃபுல் லெந்தில் வீசப்பட மெக்கல்லம் அடிக்க கவரில் ஷிகர் தவண் மிஸ் பீல்ட் செய்ய மெக்கல்லம் ஒரு ரன் எடுத்தார்.

ரெய்னா அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்த மெக்கல்லம், மீண்டும் ஒரு முஸ்தபிசுர் ஸ்பெஷல் கட்டரில் பந்து எழும்ப பீட் ஆனார். அடுத்த பந்தை ஆடும் போது மெக்கல்லம் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு உரிய மரியாதை கொடுத்து ஆடினார். பிற்பாடு இவர் ஜடேஜாவை பவுல்டு செய்த பந்து... பாவம் ஜடேஜாவுக்கு கொஞ்சம் டூ மச் தான்.

4 ஓவர்களில் 19 ரன்களையே இவர் விட்டுக் கொடுத்தது குஜராத் லயன்ஸ் 135 ரன்களுக்கு மட்டுப்பட்டு தோல்வி தழுவியது.

முஸ்தபிசுர் ரஹ்மான் மெக்கல்லத்தை ஆட்டிப்படைத்ததைப் பார்த்தும் சன் ரைசர்ஸ் வீச்சாளர் பரீந்தர் ஸ்ரன் கற்றுக் கொள்ளவில்லை, வந்து மெக்கல்லமிற்கு ஒரு அல்வா லெந்த் பந்தை வீச ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் ஆனது, மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து அரக்கத்தனமாக பவுண்டரி விளாசினார் மெக்கல்லம்.

2 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக் கொடுத்த ஸ்ரண், பிராவோ விக்கெட்டுடன் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தார்.

ஏரோன் பிஞ்ச்சை பவுல்டு செய்த புவனேஷ் குமார்:

நடப்பு ஐபிஎல் தொடரில் 3 வெற்றிகரமான துரத்தலில் 3 அரைசதங்கள் அடித்து தொடக்க வீரர்கள் சாதிக்கும் ஐபிஎல் தொடராக இதனைத் தொடங்கியவர் ஏரோன் பிஞ்ச். அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்று சன் ரைசர்ஸ் அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்து பார்மை மீட்டுக்கொண்ட புவனேஷ் குமார், நேற்று இன்ஸ்விங்கர்களை அபாரமாக வீசினார். முதல் பந்து இன்ஸ்விங்கரை பிஞ்ச் பிளிக் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், அடுத்த பந்தும் குட் லெந்த்தில் இன்ஸ்விங்கராக மட்டையின் உள்விளிம்பில் ஆடினார். அதன் பிறகு புவனேஷ் எதிர்பார்த்த பெரிய இன்ஸ்விங் விழுந்தது. மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து லெக் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. ரன் எடுக்காமல் பிஞ்ச் அவுட் ஆனார்.

கடைசியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை புவனேஷ் கைப்பற்ற 4 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு வீழ்த்தினார்.

குஜராத் லயன்ஸ் அணி 135 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததையடுத்து தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 14.5 ஓவர்களில் 137 ரன்களை விளாசி வென்றது. சிக்சர்களே இல்லாத பார்ட்னர்ஷிப்பில் டேவிட் வார்னர் 48 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுக்க ஷிகர் தவண் 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். சன் ரைசர்ஸ் தனது 2-வது வெற்றியை ஈட்டியது. ஆட்ட நாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x