Published : 07 Sep 2014 11:32 AM
Last Updated : 07 Sep 2014 11:32 AM

முத்தரப்புத் தொடர்: தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.

ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் ஆரோன் பிஞ்சும், பில் ஹியூஸும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கினார்.

அந்த அணி 25 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் டேல் ஸ்டெயின். பில் ஹியூஸ் 15 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்களில் நடையைக் கட்டினார்.

இதையடுத்து பிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் பெய்லி. இந்த ஜோடியும் 33 ரன்களே சேர்த்தது. பெய்லி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மிட்செல் மார்ஷ் களமிறங்க, மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் 72 பந்துகளில் அரைசதம் கண்டார்.

பிஞ்சை 54 ரன்களில் கிளீன் போல்டாக்கிய ஸ்டெயின், அடுத்த பந்தில் கிளன் மேக்ஸ்வெல்லை (0) வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலியா சரிவுக்குள்ளானது. மார்ஷ் 27 ரன்களிலும், பிராட் ஹேடின், மிட்செல் ஜான்சன் ஆகியோர் தலா 6 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் 38 ஓவர்களில் 144 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

ஆனால் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜேம்ஸ் பாக்னர்-மிட்செல் ஸ்டார்க் ஜோடி, ஆஸ்திரேலியாவை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 48-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா.

கடைசி ஓவரின் 4-வது பந்தில் பாக்னர் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மிட்செல் ஸ்டார்க் 46 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஸ்டெயின் 10 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டூ பிளெஸ்ஸி அபாரம்

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ஆம்லாவுடன் இணைந்தார் டூ பிளெஸ்ஸி. ஒருபுறம் ஆம்லா நிதானமாகஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடி ரன் சேர்த்தார் டூ பிளெஸ்ஸி.

இதனால் 20-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களை எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய டூ பிளெஸ்ஸி 45 பந்துகளில் அரை சதமடித்தார்.

டிவில்லியர்ஸ் அரைசதம்

டூபிளெஸ்ஸியை தொடர்ந்து ஆம்லா 72 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வேயன் பர்னெல் 6 ரன்களில் வெளியேற, கேப்டன் டிவில்லியர்ஸ் களம்புகுந்தார்.

அதிரடியாக ஆடிய அவர், பாக்னர் வீசிய 40-வது ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசி 39 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.

4 ரன்களில் நழுவிய சதம்

ஸ்கோர் சமநிலையை எட்டியபோது 96 ரன்கள் எடுத்தி ருந்த டூ பிளெஸ்ஸி, துரதிருஷ்ட வசமாக ஆட்டமிழந்தார். அவர் 99 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

எனினும் அடுத்த பந்தில் டிவில்லியர்ஸ் பவுண்டரி அடிக்க, 40.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x