Published : 09 Sep 2014 02:46 PM
Last Updated : 09 Sep 2014 02:46 PM

மாரின் சிலிச் சாம்பியன்: கிராண்ட் ஸ்லாம் சாதனை வாய்ப்பைக் கோட்டைவிட்ட நிஷிகோரி

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் குரேசிய வீரர் மாரின் சிலிச், ஜப்பான் வீரர் நிஷிகோரியை நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஜப்பான் வீரர் நிஷிகோரி நிகழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ 1 மணி 54 நிமிட ஆட்டத்தில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

கோரான் இவானிசவிச் என்ற ஒரு அபாரமான குரேசிய வீரர் அப்போது சாம்ப்ராஸ், அகாஸி உள்ளிட்ட பெரிய வீரர்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களுக்கு அச்சுறுத்தலையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்தான் இப்போது மாரின் சிலிச்சின் பயிற்சியாளர் ஆவார். இவானிசவிச் போலவே சிலிச்சும் பெரிய பெரிய சர்வ்களை அடிப்பதில் நிபுணர்.

2001ஆம் ஆண்டு தனது குரு விம்பிள்டனில் வென்ற பிறகு இப்போது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் குரேசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் சிலிச்.

2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்குப் பிறகு இப்போதுதான் 3 நட்சத்திர வீரர்களில் ஒருவர் கூட இடம்பெறாத ஒரு இறுதிப் போட்டி நடைபெற்றுள்ளது. ஜோகோவிச், நடால், பெடரர் ஆகியோர் இடம்பெறாத இறுதிப் போட்டியாக இது அமைந்தது.

இந்த இறுதிப் போட்டி இரு வீரர்களுக்குமே முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி. ஆனால் நிஷிகோரி பதட்டமடைந்தார். சிலிச் அனாயசமாக ஆடினார்.

சர்வில் பெரிய நிபுணரான சிலிச் 17 ஏஸ் சர்வ்களை அடித்தார். நிஷிகோரியால் அத்தகைய சர்வ்களை 2 தான் அடிக்க முடிந்தது.

9 முறை மாரின் சிலிச் சர்வை பிரேக் செய்ய வாய்ப்பு கிடைத்தும் நிஷிகோரி ஒரேயொரு முறைதான் உடைத்தார். மாறாக சிலில் 11 முறை கிடைத்த பிரேக் வாய்ப்புகளில் 5-ஐ வெற்றிகரமாகச் சாதகமாக்கினார்.

நிஷிகோரி இந்த இறுதிப் போட்டிக்கு முன்பு 3 டாப்-10 வீரர்களை வீழ்த்திவிட்டு வந்திருக்கிறார். அதில் இரண்டு முறை 5 செட்கள் ஆடியதால் அவரது ஆற்றல் சற்றே குறைவாகக் காணப்பட்டது.

மாரின் சிலிச் வெற்றி பற்றி கூறுகையில் தனது பயிற்சியாளர் கோரான் இவானிசவிச் மீது பாராட்டுதலைக் கொட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x