Published : 07 Aug 2016 03:02 PM
Last Updated : 07 Aug 2016 03:02 PM

மந்தமான இங்கிலாந்து பேட்டிங்கை தூக்கி நிறுத்திய மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ: 311 ரன்கள் முன்னிலை

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று கடைசி 2 மணி நேர ஆட்டம் வரையிலும் மந்தமாக சென்று கொண்டிருந்த ரன் விகிதத்தை மொயின் அலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிகரிக்க, இங்கிலாந்து 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பேர்ஸ்டோ (82 நாட் அவுட்), மொயின் அலி (60 நாட் அவுட்) இணைந்து 27.3 ஓவர்களில் 132 ரன்களை அடித்தனர். இதனால் இங்கிலாந்து 414/5 என்று 4-ம் நாள் ஆட்ட முடிவில் உள்ளது, இன்று வந்தவுடனேயே டிக்ளேர் செய்ய வாய்ப்பிருக்கிறது, ஆனால் பிட்ச் இன்னமும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருப்பதால் ஒருவேளை பேர்ஸ்டோ சதத்துடன் 350 ரன்கள் முன்னிலை பெற்று குக் டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

முன்னதாக 282/5 அதாவது உண்மையில் பின் தங்கிய 103 ரன்களை கழித்தால் இங்கிலாந்து 179/5 என்று தடுமாறியது. ஜானி பேர்ஸ்டோ தனது முதல் 15 ரன்களை எடுக்க 52 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு மெல்ல அடித்து ஆடத் தொடங்கி 7 பவுண்டரிகளை அதன் பிறகு விளாசினார். மொயின் அலியின் அரைசதம் 64 பந்துகளில் வந்தது.

நேற்று 120/0 என்று வலுவாகக் களமிறங்கிய இங்கிலாந்து குக் (66), ஹேல்ஸ் (54) ஆகியோரை சடுதியில் இழந்தது. அலிஸ்டர் குக், சொஹைல் கான் பந்துக்கு தனது உடல் எடை முழுதையும் முன்னால் கொண்டு வராமல் டிரைவ் ஆட பாயிண்டில் யாசிர் ஷா டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ஹேல்ஸ், ஆமிர் பந்தை டிரைவ் ஆடியதும் சரியாக அமையாமல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. உண்மையில் இங்கிலாந்து இந்த நிலையில் 23 ரன்களே முன்னிலை பெற்று 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. ஜோ ரூட் 25 ரன்களில் இருந்த போது எட்ஜ் செய்த கேட்ச் வாய்ப்பை மொகமது ஹபீஸ் தவறவிட்டார். ஆனால் இது கடினமான வாய்ப்பே.

அதன் பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி ரூட், வின்ஸ் ஆகியோரின் பொறுமையைச் சோதித்தார், இருவரும் மசியவில்லை, ஆனால் பாகிஸ்தான் திட்டமிட்டபடி ரன் விகிதம் கடுமையாகச் சரிந்தது. ரஹத் அலி தனது 7 ஓவர் ஸ்பெல்லில் 5 தொடர் மெய்டன்களை வீசினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ரன் வறட்சி அதிகரித்தது. யாசிர் ஷா பந்தை மிட்விக்கெட்டில் புல் ஆடி ஜோ ரூட் தனது அரைசதத்தை எடுத்த போது இங்கிலாந்து 100 ரன்கள் முன்னிலையைக் கடந்தது. பிறகு யாசிர் ஷா-வின் ஒரு ஓவரில் ரூட் 2 பவுண்டரிகளையும் வின்ஸ் 1 பவுண்டரியும் அடிக்க சற்றே ரன் வரத் தொடங்கியது. ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய யாசிர் ஷாவின் பந்தை ரூட் ஸ்வீப் செய்ய டாப் எட்ஜ் எடுத்து ஹபீஸிடம் ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் ஆனது, ரூட், 123 பந்துகளில் 62 ரன்களில் காலியானார். வின்ஸ் தனது டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோரான 42-ஐ எட்டி போதுமென்ற மனமே பொன் செய்யும் விருந்தாக புதியபந்தில் ஆமிர் வீசிய பந்துக்கு மட்டையை தொங்க விட்டார் வின்ஸ், யூனுஸ் கானுக்கு கேட்சிங் பிராக்டீஸ். 257/4.

கேரி பாலன்ஸ் எச்சரிக்கையாக ஆடி 28 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தை பிளிக் செய்ய லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, இது போன்று இதே தொடரில் அவர் 3-வது முறையாக அவுட் ஆகிறார். அதன் பிறகுதான் ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி கூட்டணி 117 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இன்று ஆட்டத்தின் 5-வது நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x