Published : 11 Mar 2016 08:18 PM
Last Updated : 11 Mar 2016 08:18 PM

பேட்டிங் வரிசையை எதிர்பாராமல் மாற்றுவோம்: எதிரணியினருக்கு ஆஸி. பயிற்சியாளர் எச்சரிக்கை

உலகக் கோப்பை டி20 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இம்முறை கோப்பையைக் கைப்பற்றுவதில் முனைப்பு காட்டும் ஆஸ்திரேலிய அணியில் நிலையான டவுன் ஆர்டர் இல்லை என்று டேரன் லீ மேன் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி வீரர் டேவிட் வார்னரை நடுவரிசையில் களமிறக்கி அதில் வெற்றியும் கண்டது ஆஸ்திரேலியா, சமீபத்தில் முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்று வாகை சூடியது.

டேவிட் வார்னர் மொத்தம் 130 ரன்களுடன் தொடர் நாயகன் விருது பெற்றார். இந்நிலையில் வார்னர் 4-ம் நிலையில் எதிர்பாராத வெற்றியடைந்தது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் கூறும்போது, “மிடில் ஆர்டரில் வார்னர் ரன் குவிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த தொடரில் (உலகக்கோப்பை டி20) நாங்கள் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்துவோம். இது எங்களது பல சாதக நிலைகளில் ஒன்று. எப்படி பேட்டிங் ஆர்டரை மாற்றினாலும் சிறப்பாகச் செயல்படும் பேட்ஸ்மென்கள் உள்ளனர்.

15 வீரர்கள் கொண்ட அணியில் இப்போது 4 வீரர்களை உட்கார வைக்க வேண்டும் என்பது மிகக் கடினமான காரியமே, ஏனெனில் ஒவ்வொருவரும் பல்வேறு திறமைப் படைத்தவர்கள்.

கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையிலும் எங்களுக்கு இந்தப் பிரச்சினை இருந்தது, ஒரு போட்டியில் வழக்கமான கேப்டன் இருந்தார், பிறகு ஜார்ஜ் பெய்லி, பிறகு கிளார்க் வந்தவுடன் பெய்லி ஆட முடியாமல் போனது.

இவையெல்லாம் ஒரு கடினமான முடிவே. ஆனால் எங்களிடம் ஒரு கூட்டு மன நிலை உள்ளது, வீரர்கள் இதனை புரிந்து கொள்பவர்களாகவே உள்ளனர். ஆனால் என்ன முடிவெடுத்தாலும் வீரர்களிடத்தில் அதனை தெளிவுபடுத்தி விட்டால் பிரச்சினை எழாது” என்றார்.

எனவே இதனை வழக்கமான ஆஸ்திரேலிய பாணி போட்டிக்கு முன்பான ‘உதார்’ பேச்சா அல்லது உண்மையில் எதிர்பாராத டவுன் ஆர்டரில் வீரர்களை மாற்றி இறக்கி எதிரணியினரின் திட்டங்களை முறியடிக்கும் உண்மையான திட்டமா என்பது தொடர் ஆரம்பித்தவுடன்தான் தெரியும்.

தோனிக்கு எதிர்மாறான நிலைப்பாடாகும் இது. தோனி மேன்மேலும் ஸ்திரத்தன்மையை நோக்கி பேசிக்கொண்டிருக்கையில், டேரன் லீ மேன் பரிசோதனை அதிரடி முயற்சிகளை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x