Published : 18 Nov 2015 12:55 PM
Last Updated : 18 Nov 2015 12:55 PM

பெங்களூரு டெஸ்ட்: 5-ம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டு டிராவில் முடிந்தது

கடந்த சனிக்கிழமை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் 2-வது டெஸ்ட் போட்டி அதன் பிறகு ஒருநாள் கூட நடைபெற முடியாமல் கைவிடப்பட்டதால் டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையை தக்க வைத்துள்ளது. சமன் செய்யும் நோக்கத்துடன் வந்த தென் ஆப்பிரிக்காவுக்கு நிச்சயம் இந்த டிரா மனச்சுமையை அதிகரிக்கும்.

ஏபி.டிவில்லியர்ஸின் 100-வது டெஸ்ட் போட்டியான இதில் அவர் அபாரமாக விளையாடி அரைசதம் எடுத்ததோடு, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தார்.

ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் சுழலில் சிக்கி 214 ரன்களுக்குச் சுருண்டது தென் ஆப்பிரிக்கா, தொடர்ந்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. அத்துடன் இந்த டெஸ்ட் முடிந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் புள்ளி விவரங்கள் சில:

1974-ம் ஆண்டுக்குப் பிறகு பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் எதிரணியை முதலில் பேட் செய்ய களமிறக்கினார்.

ஏபி.டிவில்லியர்ஸ் 38-வது அரைசதம் கண்டார். இந்தியாவுக்கு எதிராக 4-வது அரைசதம். இந்திய மண்ணில் டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 536 ரன்களை 53.60 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த 3-வது தென் ஆப்பிரிக்க வீரரானானர் டிவில்லியர்ஸ். 15 டெஸ்ட் போட்டிகளில் 1029 ரன்களை 42.29 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஜாக் காலிஸ், ஹஷிம் ஆம்லா ஆகியோரும் இந்தியாவுக்கு எதிராக 1,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

நடப்பு இந்திய தொடரில் டி20, ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் சேர்த்து டிவில்லியர்ஸ் 741 ரன்களை 67.36 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

2 பூஜ்ஜியங்கள் தவணுக்கு எதிராக இருந்தாலும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தவண் சராசரி 57.60 என்பது குறிப்பிடத்தக்கது. 6 இன்னிங்ஸ்களில் 288 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுக போட்டியில் எடுத்த 187 ரன்களும் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x