Published : 07 May 2016 09:26 AM
Last Updated : 07 May 2016 09:26 AM

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க போராடும் பெங்களூரு மற்றும் புனே அணிகள் ஐபிஎல்லில் இன்று மோதுகின்றன. இதனால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் இது வரை 9 போட்டிகளில் ஆடியுள்ள புனே அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்றைய போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இப்போட்டி பெங்களூருவில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை அது கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது. கிறிஸ் கெயில், வாட்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக இருந்தாலும் கடந்த ஐபிஎல் போட்டிகளை போல அவர்கள் அசுரத்தனமாக ஆடாதது பெங்களூரு அணிக்கு பலவீனமாகவே உள்ளது. இது போதாதென்று அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். பல ஆட்டங்களில் 180 ரன்களுக்கு மேல் குவித்தும் பெங்களூரு அணி வெற்றி பெறாதது இதற்கு சான்றாக உள்ளது. இந்த குறைகள் நீங்கி இன்றைய போட்டியில் பெங்களூரு வெற்றிபெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதே சமயம் கடந்த போட்டியில் டெல்லியை வென்றதால் உற்சாகமாக இருக்கும் புனே அணி, அதே வேகத்தில் இன்று பெங்களூருவை வெல்ல காத்திருக்கிறது. கவாஜா, பெய்லி ஆகிய இரு வீரர்கள் அந்த அணியில் புதிதாக சேர்ந்திருப்பது அவர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி - பஞ்சாப் மோதல்

மொகாலியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள டெல்லி அணி, கடந்த போட்டியில் ஜாகிர்கான் உட்பட தங்களின் முக்கியமான 4 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. அப்போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இன்று களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்று கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x