Published : 25 Nov 2014 08:23 PM
Last Updated : 25 Nov 2014 08:23 PM

பிலிப் ஹியூஸ் நிலை பற்றி ஆஸி. மருத்துவர்கள் கூறுவது என்ன?

சிட்னியில் இன்று ஷெஃபீல்ட்ஷீல்ட் போட்டியில் பவுன்சர் பந்தை எதிர்கொண்ட போது மண்டையில் படுகாயம் அடைந்த பிலிப் ஹியூஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று முன்னணி அவசரசிகிச்சை மருத்துவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சான் அபோட் வீசிய பவுன்சரை ஹூக் செய்ய முயன்ற போது பந்து பின் தலையில் ஹெல்மெட் கவர் செய்யாத இடத்தைத் தாக்கியது. அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனையடுத்து செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கோமா நிலையில் இருக்கச் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறும்போது, முதலில் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. மாலை 4.15 மணி வரை அவர் அறுவைசிகிச்சையில்தான் இருந்தார் என்றார்.

அறுவைசிகிச்சை முடிந்த பிறகு ஆஸ்திரேலிய நேரம் மாலை 5 மணியளவில் ஃபேர்பேக்ஸ் மீடியாவிடம் மருத்துவர்கள் தெரிவிக்கையில், அறுவை சிகிச்சையின் பலன்கள் என்னவென்பது இப்போதைக்கு கூறமுடியாதது என்றும் இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமாவில் ஆழ்த்தப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது.

ஆஸ்ட்ரலேசியன் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் தலைவர் அந்தோனி கிராஸ், பிலிப் ஹியூஸிற்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து விளக்கும் போது, “கிரிக்கெட் பந்தின் கடினமான தன்மையும், முழு ஹெல்மெட் அவர் அணியாததால் பந்தின் முழு வேகமும் அவரது பின் மண்டையில் தாக்கியதும் பிரதானமான காரணம்.

கிரிக்கெட் காயங்கள் பெரிய சீரியசாக இதுவரை வந்ததில்லை. குறிப்பாக உயிருக்கு ஆபத்தான தலைக்காயங்கள் இப்போதெல்லாம் ஏற்படுவதில்லை, காரணம் ஹெல்மெட்கள்.

ஆனால் ஹியூஸ் அணிந்திருந்த ஹெல்மெட் முழு ஹெல்மெட் அல்ல, மேலும் பந்து, ஹெல்மெட் கவர் செய்யாத மண்டைப்பகுதியை தாக்கியுள்ளது.

கடினமான பந்துகள் முதலில் தலையில் உள்ள மேற்புறத் தோலை கிழித்திருக்கும். ஆனால் இது ஒன்றும் ஆபத்தில்லை, மண்டை ஓடு உடைந்திருந்தால் ஆபத்து அதிகம்.

ஏனெனில் பந்து வேகமாகத் தாக்கும் போது உள்ளேயிருக்கும் மூளை சற்றே ஆட்டம் கண்டுவிடும். ஆனால், இதில் பெரிய கவலை என்னவெனில் மூளையின் உட்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டால் கடினம். ரத்தக் கசிவு ஏற்பட்டால் மண்டை ஓட்டினுள் ரத்தக்கட்டு ஏற்படும். இது மூளையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தும்.

அதாவது மூளையின் செல்களே கசக்கப்பட்டது போல் ஆகிவிடும். இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தம், பிராணவாயு கலந்த ரத்தம் மூளைக்குள் வருவதை தடுக்கத் தொடங்கும். மேலும் காயத்தினால் நச்சான ரத்தம் வெளியேறுவதும் தடைபடும்.

இது போன்ற காயங்கள் பெரும்பாலும் கார் விபத்து, பைக் விபத்தில் சிக்குபவர்களுக்குத்தான் ஏற்படும். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால் காப்பாற்றுவது சுலபம். எனவே கால நேரம் என்பது இத்தகைய காயத்தின் தீவிரத்தை தீர்மானிக்கும் ஒரு விஷயம்” என்றார்.

உயிருக்கு ஆபத்தான காயங்கள் அவரது மூளையில் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சை எத்தகைய பலன்களை அளிக்கும் என்பதை அறிய குறைந்தது 24 மணி நேரங்களாகவது ஆகும் என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x