Published : 07 Aug 2014 05:13 PM
Last Updated : 07 Aug 2014 05:13 PM

பிராட் 6 விக்கெட்டுகள்; இங்கிலாந்து வேகத்தில் 152 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

மான்செஸ்டரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தியா 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற தோனி, ஆஸ்திரேலியா போல் ஈரப்பதத்துடன் கடினமாக இருந்த பிட்சில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அவரது முடிவை அவரது பேட்டிங்கும்,அஸ்வினின் அதிரடியுமே காப்பாற்றியது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 6 பேட்ஸ்மென்கள் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து டெஸ்ட் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளது இந்தியா.

பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகி எழும்பத் தொடங்கியது முதல் ஓவரிலிருந்து இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கடைசி ஓவர் வரை நீடித்தது. காரணம் இந்தியா 46.4 ஓவர்களிலேயே ஆட்டமிழந்தது. பந்தின் சிவப்பு நிறம் மாறவேயில்லை. அதற்குள் இந்தியா ஆல் அவுட் ஆனது.

8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்:

தவனுக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட கம்பீர் 2 லெக் திசைப் பந்துகளை தலா 2 ரன்கள் எடுத்து 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டூவர்ட் பிராட் வீசிய அருமையான எழும்பி வந்த பந்தை உள்ளே வருகிறது என்று நினைத்து லெக் திசையில் ஆடுமாறு மட்டையைத் திருப்பினார் ஆனால் பந்த் ஸ்விங் ஆகி வெளியே செல்லும் போது கம்பீர் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் ஜோ ரூட் கையில் கேட்ச் ஆனது.

14 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காத முரளி விஜய் 3வது டெஸ்ட் வரை ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கர்களைக் கணித்து ஆடாமல் விட்டு வந்தார். ஆனால் இன்று ஆண்டர்சன் பந்து ஒன்று உள்ளே வந்து பிட்ச் ஆகி வெளியே செல்ல விஜய் கிரீசில் நின்றபடி அரைகுறை ஃபுட்வொர்க்கில் மட்டையை நீட்ட எட்ஜ் ஆகி குக் கையில் எளிதான கேட்ச் ஆனது.

அதே ஓவரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் விராட் கோலி ரன் எடுக்காத நிலையில் ஆண்டர்சன் வீசிய அவுட் ஸ்விங்கருக்கு ஆஃப்-காக் ஃபார்வர்டில் மட்டையைத் தொங்க விட பந்து விளிம்பில் பட்டு குக்கிடம் மீண்டும் கேட்ச் ஆனது. கோலி மிகுந்த வருத்தத்துடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

புஜாரா 6 பந்துகள் விளையாடி ரன் எடுக்காத நிலையில் பிராட் வீசிய பந்தை தரையில் ஆட முடியாமல் போக அது நேராக ஜோர்டானிடம் கேட்ச் ஆனது. ஜோர்டான் அதனை அற்புதமாகப் பிடித்தார்.

தோனி-ரஹானே மீட்பு முயற்சி:

6வது ஓவரிலேயே தோனி களமிறங்கியது இதுவே முதல்முறையாக இருக்கலாம். அவரும் ரஹானேயும் இங்கிலாந்து பந்து வீச்சின் உச்சபட்ச தாக்குதலை எதிர்கொண்டு ஓரளவுக்கு திறமையுடன் ஆடினர்.

ரஹானே இரண்டு மிட் ஆஃப் டிரைவ்களை அபாரமாக ஆடினார். இருவரும் ஸ்கோரை மெதுவே 50-ஐ தாண்டி நகர்த்தினர். ரஹானே 52 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய ஸ்கோர் 61ஆக இருந்தது.

அப்போது ஜோர்டான் வீசிய பந்தை அவர் ஆடியிருக்கவே வேண்டாம். ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது ஏதோ இந்திய பிட்ச்களில் ஆடுவதுபோல் அரைகுறை ஃபுட்வொர்க்கில் வெளியே சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்றார். இந்திய பிட்சாக இருந்திருந்தால் அது கவர் திசையில் பறந்திருக்கும். ஆனால் இங்கு பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பெல்லிடம் எளிதான கேட்ச் ஆனது. வலைப்பயிற்சியில் ஸ்லிப் கேட்சிங் பயிற்சி அளிப்பது போல் இருந்தது அவர் ஷாட். பெரும்பாலான இந்திய பேட்ஸ்மென்களின் ஷாட்களும் அத்தகைய கேட்சிங் பயிற்சிகளே என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தியா 62/5 என்று ஆனது.



இன்னிங்ஸின் 4வது டக்:

ஜடேஜா களமிறங்கினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மீதான தீர்ப்பு யாருக்கு அதிக வலியை ஏற்படுத்தியிருக்குமோ என்னவோ ஜடேஜாவுக்கு ஏற்படுத்தியிருக்கும் குறைந்தது அவரிடம் விக்கெட் கொடுக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் ஜடேஜாவை சொல்லி வைத்து லீக் பிளேயர் போல் எடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆம்! இரண்ட்டு பந்துகளை அவுட் ஸ்விங்கராக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசி விட்டு, ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார், பந்து முழு அளவில் விழுந்தது. ஜடேஜா அதனை பிளிக் செய்ய முயன்று நேராக காலில் வாங்க நடுவர் வானை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தினார். இந்தியாவின் இந்த இன்னிங்ஸின் 4வது டக்கை எடுத்துச் சென்றார் ஜடேஜா பெவிலியனுக்கு.

அஸ்வின் அதிரடி:

63/6 என்ற நிலையில் அஸ்வின் களமிறங்கினார். உண்மையில் இந்த அதிவேக பிட்சில் இதுவரை ஆடாமல் ஆடவந்த வீரர் போல் அவர் ஆடவில்லை. முறையான பேட்ஸ்மென் போல் ஆடினார். அதுவும் லூஸ் பந்துகளை அடித்து ஆடினார்.

3 பவுண்டரிகள் அடித்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஷாட் பிட்ச் பந்து ஒன்றை சிக்சருக்கும் தூக்கினார். பேக்ஃபுட் பஞ்ச் ஷாட்டையும் அவர் ஆடினார். ஒரு கேட்ச் அவருக்கு விடப்பட்டது என்றாலும் அவரது ஆட்ட முறை கவருவதாக அமைந்தது.

42 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 40 ரன்களை எடுத்தார். தோனியும், இவரும் சேர்ந்து 14 ஓவர்களில் 66 ரன்களைச் சேர்த்தனர்.

ஸ்கோர் 129 ரன்களை எட்டியபோது பிராட் வீசிய பவுன்சரை புல் ஷாட் ஆடி ராப்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அஸ்வின். இந்தியா 129/7 என்று ஆனது.

தோனியின் பொறுப்பான டெஸ்ட் இன்னிங்ஸ்:

இந்தியாவுக்கு வெளியே குறிப்பாக இங்கிலாந்தில் தோனியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இன்று கைகூடியது. 8/4 என்ற நிலையில் களமிறங்கிய தோனி ஓரிரு ஷாட்களை எட்ஜ் செய்தாலும் பெரும்பாலும் சரியாகவே ஆடினார்.

அவர் தனது 15 பவுண்டரிகளில் 10 பவுண்டரிகளையாவது அபாரமாக ஆடினார் என்று கூறலாம். சக்தி வாய்ந்த கட் ஷாட். கவர் மற்றும் மிட் ஆஃப் திசையில்டிரைவ் மற்றும் புல் ஷாட், பிளிக் என்று அவர் பவுண்டரிகளை அடித்தார்.

133 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த தோனி, பிராட் வீசிய பந்தை மிட் விக்கெட்டில் ஒரு டுவெண்டி 20 ஷாட் ஆட நினைத்தார். ஆனால் அங்கு ஜோர்டான் கேட்ச் பிடித்தார்.

புவனேஷ் குமார் உள்ளே வந்த பந்தை ஸ்டம்பை கவர் செய்யாமல் ஆடாமல் விட்டு ஸ்டம்ப்களை இழந்தார். பங்கஜ் சிங்கையும் பிராட் வீழ்த்தினார்.

ஸ்டூவர்ட் பிராட் 13.4 ஒவர்கள் வீசி 6 மைடன்களுடன் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், ஜோர்டான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து 113/3

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் ராப்சன் 6 ரன்களுக்கு புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த குக், 17 ரன்கள் எடுத்திருந்த போது வருண் ஆரோன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மேற்கொண்டு ஆடிய இயன் பெல் மற்றும் பேலன்ஸ் ஜோடி, இந்தியப் பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. நாளின் ஆட்டம் முடியும் தருவாயில், கடைசி ஓவரில் பேலன்ஸ் 37 ரன்களுக்கு வருண் ஆரோன் பந்தில் பெவிலியன் திரும்பினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x