Published : 24 Apr 2017 10:51 AM
Last Updated : 24 Apr 2017 10:51 AM

பார்சிலோனாவுக்காக 500 கோல்கள்: லயன் மெஸ்ஸியின் அபார கடைசி நிமிட கோலினால் ரியால் மேட்ரிட் தோல்வி

ஸ்பானிய லீக் கால்பந்து தொடரான லா லீகாவில் ரியால் மேட்ரிட் அணிக்கு எதிராக லயன் மெஸ்ஸியின் அபாரமான 92-வது நிமிட கோலினால் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியால் மேட்ரிட்டை வீழ்த்தி வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் கேசிமிரோ ரியால் மேட்ரிட்டுக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால் இது 5 நிமிடங்களே தாக்குப் பிடித்தது, ஏனெனில் லயன் மெஸ்ஸியின் தனிநபர் சாகசத்தினால் பார்சிலோனா 1-1 என்று சமன் செய்தது. பிறகு 73வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ராகிடிக் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

இந்நிலையில் ரியால் மேட்ரிட் வீரர் செர்ஜியோ ரேமோஸ் லயோனல் மெஸ்ஸியை உடல் ரீதியாக எதிர்கொண்டதையடுத்து ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 வீரர்களுடன் ஆடினாலும் ரியால் மேட்ரிட் 77-வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் மூலம் கோல் கண்டு 2-2 என்று ஆட்டம் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் காயத்தினால் நிறுத்தப்பட்ட ஆட்டத்துக்கு ஈடான நேரத்தில் அதாவது 92-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு அதிர்ச்சி கோலை அடிக்க ஆட்டத்தின் கடைசி கிக் பார்சிலோனா வெற்றியுடன் முடிய இந்த அணிக்காக மெஸ்ஸியின் 500-வது கோலாகவும் அமைந்த்து.

பார்சிலோனா அணி நெய்மர் தடையினால் சற்றே பின்னடைவு கண்டிருந்த தருணத்தில் மெஸ்ஸி எழுந்து நின்றார்.

தொடக்கத்தில் ரியால் மேட்ரிட் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பந்தை பார்சிலோனா கோலுக்கு அருகே எடுத்துச் சென்றார். அப்போது சாமுவேல் உம்டைட்டியின் எதிர்கொள்ளல் சர்ச்சையானது. ரியால் மேட்ரிட் கடுமையாக பெனால்டி கேட்டு முறையீடு செய்தது, ஆனால் நடுவர் அலட்சியமாக அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பிறகு ரொனால்டோ அடித்த அருமையான கோல் நோக்கிய ஷாட்டை பார்சிலோனா கீப்பர் ஆந்த்ரே டெர் ஸ்டீஜன் அருமையாக தடுத்தார்.

அதன் பிறகு டோனி குரூஸின் கார்னர் ஒன்று சரியாக எடுக்கப்படாத நிலையில் பந்து மார்செலோவிடம் வந்தது. இவர் ரொனால்டோவுக்கு அதனை பாஸ் செய்தார், கோல் அருகே ரேமோஸ் இருந்தார். ரேமோஸ் தனது முதல் ஷாட்டை போஸ்ட்டில் அடிக்க, கேசிமிரோ கோலாக மாற்றினார். ரியால் மேட்ரிட் 1-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகும் ஒப்பீட்டளவில் ரியால் மேட்ரிட் சவுகரியமாகவே ஆடினாலும் முன்னிலை 5 நிமிடங்கள் தாங்கவில்லை.

இதற்கிடையே மெஸ்ஸி, மார்செலோவுடன் போட்டியிடுகையில் அவரது முழங்கை மெஸ்ஸியின் வாயைத் தாக்க மெஸ்ஸிக்கு ரத்தம் வந்தது.

ஆனால், இதே மெஸ்ஸி தன் ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டினார். ரியால் மேட்ரிட் இடத்தில் பாக்ஸில் ரகீடிக்கிடமிருந்து பந்தை பெற்ற மெஸ்ஸி, டான் கர்வாஜலுக்குப் போக்கு காட்டி அற்புதமான கோலை அடித்தார். கிளாசிகோ வரலாற்றில் 15-வது கோலை அடித்து மேலும் ஒரு சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி.

இடைவேளைக்கு முன்னதாக ஓபன் கோல் வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா கீப்பரின் இரண்டு தடுப்புகள்:

இடைவேளைக்குப் பிறகு ரியால் மேட்ரிட் அபாரமாகத் தொடங்கியது. முதலில் குரூஸ் அற்புதமாக பந்தை பார்சிலோனா கோல் நோக்கி அடிக்க அதனை பார்சிலோனா கீப்பர் அருமையாக தட்டிவிட்டார்.

பிறகு ரியால் மேட்ரிட் ஒரு மூவில் மீண்டும் பார்சிலோனா கோல் அருகே கொண்டு செல்ல, கரீம் பென்சீமா மிக அருகிலிருந்து தலையால் முட்டிய பந்தை மீண்டும் ஸ்டீஜன் கோலாகாமல் தடுத்தார்.

59-வது நிமிடத்திற்கு பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கக் கிடைத்த அருமையான வாய்ப்பை கோலுக்கு மேலே அடித்து வீணடித்தார்.

இந்தக் கோலை வீணடித்ததன் காயத்தில் ஊசியைச் செலுத்துவது போல் பார்சிலோனா வீரர் ரகீடிக் மிக அருமையாக 20 அடியிலிருந்து ஒரு கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.

அதன் பிறகு ரேமோஸ் மிக அசிங்கமாக மெஸ்ஸியை இருகால்களாலும் எதிர்கொள்ள ரெட் கார்டு காண்பிக்கப்பட்டார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் காட்டப்படும் 22வது ரெட் கார்டாகும். ரியால் 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்டது.

அதன் பிறகே ரியால் மேட்ரிட் 85-வது நிமிடத்தில் ரோட்ரிக்ஸ் மூலம் 2-வது கோலை அடித்தது. பிறகு 92-வது நிமிடத்தில் ஜோர்டி ஆல்பா ஒரு பந்தை மெஸ்ஸியிடம் கொடுக்க வழக்கமான மின்னல் மெஸ்ஸியானார், அது கோலாக மாறியது. பார்சிலோனா வெற்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x