Published : 08 Dec 2014 08:49 PM
Last Updated : 08 Dec 2014 08:49 PM

பாதுகாப்பான அணிச்சேர்க்கை அல்ல, வெற்றிக்கூட்டணியே தேவை: விராட் கோலி

ஆஸதிரேலியாவுக்கு எதிராக தன்னம்பிக்கையான, சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்லவே வந்திருக்கிறோம் என்று கேப்டன் விராட் கோலி உறுதி அளித்துள்ளார்.

"நாங்கள் டெஸ்ட் தொடரை வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம், என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வரவில்லை. ஒன்றை நம்பாவிட்டால் நாம் அதனை சாதிக்க முடியாது, எனவே தொடரை வெல்ல ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

ஆக்ரோஷமாகவே நான் கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிவந்துள்ளேன். இதே மனநிலை, அணுகுமுறையை எனது கேப்டன்சியிலும் நான் காட்டப் போகிறேன்.

பாதுகாப்பான அணியைத் தேர்வு செய்து பாதுகாப்பாக ஆடும் அணுகுமுறை கிடையாது. எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் அணிச்சேர்க்கையைத்தான் நான் தேர்வு செய்வேன்.

வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற வகையில் சிறந்த சேர்க்கையைக் கொண்டுள்ளோம். நல்ல உடற்தகுதியுடன் வேகமாக வீசும் பவுலர்கள் இப்போது இருக்கின்றனர். ஒரு கேப்டனாக அணியில் வேகமாக, நல்ல உடற்தகுதியுடன் வீசக்கூடிய பவுலர்கள் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

100% உடற்தகுதியுள்ள தோனி வேண்டும், மேலும், ஆஸ்திரேலியாவில் அவர் தனக்கு தேவைப்படுவதாகக் கருதும் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளார். எனவே போதிய தயாரிப்பில்லாமல் வந்து விளையாடுவது என்பது அவரைப் பொறுத்தமட்டில் நடக்காது.

அணி வீரர்களை ஒருங்கிணைத்து ஒரே மனநிலையில் கவனம் செலுத்தி ஆடவைப்பதில் இப்போது எங்கள் கவனம் இருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவைப்படும் கடினமான மனநிலையிலிருந்து திசை மாறுவது கூடாது, எனவே இதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.

அணியின் ஒவ்வொரு வீரரும் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் பாசிடிவ்வாக விளையாடி, அணியின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும், சொந்த ஃபார்மை மட்டும் குறிவைத்து ஆடக்கூடாது. இவ்வகை மாற்றங்களில் தற்போது மிகக்கவனமாக இருக்கிறோம்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x