Published : 27 May 2017 07:16 PM
Last Updated : 27 May 2017 07:16 PM

பாகிஸ்தானுக்குக் கிடைத்தார் புதிய அதிரடி ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப்: வங்கதேசம் தோல்வி

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசத்தின் 341 ரன்களை பாகிஸ்தான் அணி வெற்றிகரமாக விரட்டி பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேசம் 341 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டி 49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி சற்றும் எதிர்பாராததுதான், காரணம் பாகிஸ்தான் ஒருநிலையில் 42.4 ஓவர்களில் 249/8 என்று தடுமாறியது, ஆனால் ஃபாஹிம் அஷ்ரப் என்ற இடது கை பேட்ஸ்மென் (வலது கை பந்து வீச்சு) கடைசியில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 30 பந்துகளில் 64 ரன்களை விளாசியதும் ஹசன் அலி 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தும் இருவரும் இணைந்து அவுட் ஆகாமல் 92 ரன்களைச் சேர்த்ததும் பாகிஸ்தான் வெற்றியை தீர்மானித்தது.

பாகிஸ்தானுக்காக முதல் போட்டியில் ஆடுபவர் ஃபாஹிம் அஷ்ரப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் எந்த நிலையிலும் இலக்கைத் துரத்தும் நிலையிலேயே இல்லை, ஒரு கட்டத்தில் 168/5 பிறகு 227/6 பிறகு 42-வது ஓவரில் 242/7 என்று தடுமாறியது.

இதனையடுத்து கடைசி 8.3 ஓவர்களில் 100 ரன்கள் பக்கம் வெற்றிக்குத் தேவைப்பட்டது. மெஹதி ஹசன் மிராசை ஒரே ஓவரில் 19 ரன்கள் விளாசினார். அடுத்து மஷ்ரபே மோர்ட்சா ஓவரில் 16 ரன்கள், கடைசி ஓவரில் 13 ரன்கள் என்று அவர் விளாசி வெற்றி பெறச் செய்தார், அதுவும் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் அடித்த சிக்ஸ் மைதானத்தின் நீளமான பவுண்டரியாகும்.

முதல் போட்டியிலேயே அசத்திய இவருக்கு இந்த ஸ்கோர் முதல் தர கிரிக்கெட் ஸ்கோராக முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஆனால் வங்கதேச அணி முஸ்தபிசுர் ரஹ்மானை வைத்திருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் வெற்றி பெற முடியாமல் போயிருக்கும்.

மைதானத்தின் நீளமான பகுதிகளில் ஃபாஹிமை அடிக்க வைத்து வீழ்த்தும் வங்கதேச உத்தி எடுபடவில்லை, காரணம் அவர் டேரன் சமி போல் நேராக அடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். உண்மையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பாகிஸ்தானுக்கு ஃபாஹிம் அஷ்ரப் மூலம் கிடைத்து விட்டார்.

வங்கதேசத் தரப்பிலும் தவறுகள் இல்லாமலில்லை, சுமார் 5 கேட்ச்கள் தவற விடப்பட்டன, ஃபாஹிமுக்கும் கடைசி ஓவரில் கேட்ச் விடப்பட்டது. இது 3 ரன்களாக வேறு மாறியது. ஒரு ஸ்டம்பிங்கும் தவற விடப்பட்டது.

முன்னதாக பாகிஸ்தான் அணியில் அகமத் ஷெசாத் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்களை எடுத்தார். மொகமது ஹபீஸ் 62 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஆனால் முக்கியமாக ஷோயப் மாலிக் 66 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து மிராஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஷோயப் மாலிக் அவுட் ஆகும் போது பாகிஸ்தான்38.3 ஓவர்களில் 227/6 என்று இருந்தது. மாலிக்கிற்கு 8 ரன்களில் கேட்ச் விடப்பட்டது. இவரும் ஹபீஸும் இணைந்து 12.3 ஓவர்களில் 79 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஹபீஸ், சர்பராஸ் அகமது அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் தொய்ந்தது.

ஆனால் கடைசியில் சற்றும் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் புதிய ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப் நம்ப முடியாத அதிரடி ஆட்டம் ஆடி வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்தார்.

தமிம் இக்பால் அதிரடி சதத்தில் 341 ரன்கள் குவித்த வங்கதேசம்:

முன்னதாக முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 341 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் தமிம் இக்பால் 93 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசினார்.

பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் 9 ஓவர்கள் வீசி 73 ரன்கள் வாரி வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வஹாப் ரியாஸ் 9 ஒவர்களில் 68 ரன்களுக்கு விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. சவுமியா சர்க்கார் 19 ரன்களில் ஜுனைத் கானிடம் வீழ்ந்தார். ஆனால் அதன் பிறகு ஜுனைத் கான் வீசிய இன்னிங்ஸின் 9-வது ஓவரில் தமிம் இக்பால் புரட்டி எடுத்தார். 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் அந்த ஓவரில் தமிம் இக்பால் ஆதிக்கம் செலுத்த அந்த ஓவரில் 25 ரன்கள் வந்தது. 39 பந்துகளில் அரைசதம் கண்ட தமிம் இக்பால் 88 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை எட்டி 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரரான இம்ருல் கயேஸ் 62 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார், இருவரும் இணைந்து 142 ரன்களை 20 ஓவர்களில் விளாசினர்.

முஷ்பிகுர் ரஹிம் அவர் பங்குக்கு 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 46 ரன்களை விளாசினார். ஷாகிப் அல் ஹசன் இந்தவேகத்துக்கு இணங்க ஆடாமல் 27 பந்துகளில் 23 ரன்களில் வெளியேறினார். ஆனால் மஹமுதுல்லா 6 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 29 ரன்களையும் மொசாடக் ஹுசை 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 ரன்களையும் எடுக்க வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்களை குவித்தது.

ஆனால் பாஹிம் அஷ்ரப் வங்கதேச பந்து வீச்சை அடித்து நொறுக்கி நம்ப முடியாத நிலையிலிருந்து வெற்றி பெறச் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x