Last Updated : 11 Dec, 2014 04:39 PM

 

Published : 11 Dec 2014 04:39 PM
Last Updated : 11 Dec 2014 04:39 PM

பதிலடி கொடுக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்தோம்: புஜாரா

ஆஸ்திரேலியா எடுத்த 517 ரன்களுக்கு எதிராக எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்பதை விவாதித்தோம் என்கிறார் புஜாரா.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாளான இன்று இந்தியா சிறப்பாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்துள்ளது. அணியின்ஆட்டம் குறித்து புஜாரா பெருமிதம் அடைந்துள்ளார்.

புஜாரா மிகவும் அனாயசமாக 73 ரன்களை எடுத்து, நேதன் லயன் பந்தில் பவுல்டு ஆனார். பந்து அவரது மட்டையில் பட்டு ஸ்டம்பிற்கு உருண்டு சென்று பைல்களை கீழே தள்ளியது.

இன்றைய ஆட்டம் பற்றி புஜாரா கூறியதாவது: ‘இந்த டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுத்தாக வேண்டும் என்று நாங்கள் புதன்கிழமை கூடி ஆலோசித்தோம்.

அதாவது இந்தப் பிட்ச் பற்றியும் ஆஸ்திரேலியாவின் ரன் பற்றியும் விவாதித்து, பிறகு இந்த பேட்டிங் வரிசையினால் பதிலடி கொடுக்க முடியும் என்று உறுதிபூண்டோம்.

இளம்திறன்கள் கொண்ட இந்திய பேட்டிங் வரிசை இன்று தங்களை நிரூபித்துள்ளது. இந்த நிலையிலிருந்து அடுத்த இலக்கிற்கு முன்னேறுவது இப்போது அவசியம்.

இந்தத் தொடருக்காக நான் கடுமையான முன் தயாரிப்பில் ஈடுபட்டேன், நான் 73 ரன்களையே எடுத்திருந்தாலும், அது எனக்கு மனநிறைவைத் தருகிறது. கடந்த தொடரில் நல்ல தொடக்கம் கண்டேன், ஆனால் அவற்றை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்து கொண்டிருந்தேன்.

எப்போதுமே இரட்டை சதங்கள் எடுத்து விட முடியாது, ஆனாலும் எவ்வளவு ரன்களை அதிகபட்சமாக எடுக்க முடியுமோ அது வரையில் அங்கு போராடியாக வேண்டும். எதிரணியினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் ஆட்டமிழந்த பிறகு எப்படி அவுட் ஆனேன், என்ன தவறு செய்தேன் என்பதை ஆய்வு செய்தேன்” என்றார் புஜாரா.

கோலிக்கு மிட்செல் ஜான்சன் வீசிய பவுன்சர் ஹெல்மெட்டைத் தாக்கிய சம்பவம் குறித்து புஜாரா கூறும்போது, “பந்து ஹெல்மெட்டைத் தாக்கியவுடன் அனைவரும் கோலியிடம் சென்று நலமாக இருக்கிறாரா என்று விசாரித்தனர். நான் அவரை விசாரிக்க போன போது, ஹெல்மெட்டை சரிபார்த்து பிறகு ஆடத் தொடங்கினார்.

அதன் பிறகு அந்தப் பந்து பற்றி விவாதித்தோம், அதை எப்படி ஆடுவது என்பதை திட்டமிட்டோம், கோலி எப்படி ஆடினார் என்பதையும் ஆலோசித்தோம். ஆனால் அவர் அதையெல்லாம் மறந்து விட்டு நமக்கு முக்கியமான சதத்தை அடித்துக் கொடுத்துள்ளார். அவரது இன்னிங்ஸை பார்ப்பது உற்சாகமான ஒன்று.

நான் இன்று ஆட்டமிழந்த விதம் துரதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும். பந்து எங்கு சென்றது என்பது எனக்குப் புரியவில்லை. ரீப்ளே பார்த்த போதுதான் தெரிந்தது பந்து வேகமாக ஸ்டம்பை தாக்கியது. என்னால் பந்தை தடுக்க போதிய நேரம் இல்லை.

நேதன் லயன் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் பவுலர்களின் காலடித் தடங்களை நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அவர் உண்மையிலேயே நன்றாகவே வீசுகிறார்.

இந்தத் தொடருக்கான நல்ல பேட்டிங் தொடக்கமாக இந்த இன்னிங்ஸ் அமைந்துள்ளது” என்றார் புஜாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x