Published : 11 Apr 2015 10:42 AM
Last Updated : 11 Apr 2015 10:42 AM

பஞ்சாபை பந்தாடிய பாக்னர்: ராஜஸ்தானுக்கு ராயல் வெற்றி!

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டியில் ஜேம்ஸ் பாக்னரின் அபாரமான ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால், ராஜஸ்தானிடம் சரணடைந்ததது அதிரடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

மிட்செல் ஜான்சன், சந்தீப் சர்மா ஆகிய நல்ல பவுலர்களைக் கொண்ட கிங்ஸ் லெவன் கேப்டன் ஜார்ஜ் பெய்லி டாஸில் வென்று முதலில் ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். பிட்சில் கொஞ்சம் பசுமை தெரிந்தது. ஸ்விங் பந்துக்கு ஆதரவாகவும் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸும் இருந்தது.

ஆனால், ராஜஸ்தான் கேட்பன் ஸ்மித், ஹூடா மற்றும் கடைசியில் ஜேம்ஸ் பாக்னரின் அதிரடியினால் ராஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியின் டிம் சவுத்தி, மாரிஸ், பாக்னர் ஆகியோரின் அபாரமான, துல்லியமான நெருக்குதல் பந்துவீச்சுக்கு தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

பேட்டிங்கில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ஜேம்ஸ் பாக்னர், பிறகு பந்துவீச்சிலும் முக்கிய கட்டத்தில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக அதிரடி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், கேப்டன் ஜார்ஜ் பெய்லி, மற்றும் மிட்செல் ஜான்சன் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஜேம்ஸ் பாக்னர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடிய ஆட்டத்தை அவர் அப்படியே தொடர்ந்தார்.

தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பவுலர்கள் சந்தீப் சர்மா, அனிரூத் சிங், அபாரமாக வீசினர். ரஹானே 7 பந்துகள் ரன் எடுக்க முடியாத அவஸ்தையில் ஏறி வந்து ஆட முயன்று அனிரூத் சிங்கிடம் 0-வில் வீழ்ந்தார்.

சஞ்சு சாம்சனும் தவறான ஷார்ட் தேர்வில் சந்தீப் சர்மாவிடம் எல்,.பி.ஆனார். ரஞ்சி நட்சத்திரம் கருண் நாயர் ஒரு சிக்ஸ் அடித்து 8 ரன்கள் எடுத்து அக்சர் படேலிடம் பவுல்டு ஆக ஸ்கோர் 6 ஓவர்களில் 35/3 என்று ஆனது.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது அற்புதமான ஆட்டத்தை தொடர்ந்தார். 23 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார். 4 ஓவர்களில் ஸ்கோர் 39 ரன்கள் ஏறியது. 10-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 74ஆக இருந்த போது மிட்செல் ஜான்சன் ஒரே ஓவரில் ஸ்மித்தையும், ஸ்டூவர்ட் பின்னியையும் காலி செய்தார். குறிப்பாக பின்னியை அவர் படுத்தி எடுத்து விட்டார். அதற்கு முன்பாக ஜான்சன் வீசிய ஓவரில் ஒரு பந்து கூட மட்டையில் படவில்லை. இந்நிலையில் பின்னிக்கு அதிவேக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசிய ஜான்சன் கடைசியில் ஒரு வெளியே செல்லும் பந்தை வீச பின்னி விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்தார்.

11-வது ஓவரில் ஸ்கோர் 75/5 என்று ராஜஸ்தான் சரிவு முகம் கண்ட போது களமிறங்கினார் ஆபத்பாந்தவன் ஜேம்ஸ் பாக்னர்...

ஹூடா அதிரடி... ஜான்சனை விளாசிய பாக்னர்

13-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 88/5 என்ற நிலையில் ஹூடா அடிக்கத் தொடங்கினார். கரன்வீர் சிங் வீச வந்த அந்த 14-வது ஓவரில் ஹூடா லாங் ஆன் மற்றும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் 2 சிக்சர்களை விளாசினார். அடுத்ததாக ஜான்சன் வீசிய ஓவரில் பாக்னர் மேலேறி வந்து மிட்விக்கெடில் அலட்சிய பவுண்டரி ஒன்றை அடித்தார்.

17-வது ஓவரில் ஹூடா, அனுரீத் சிங்கை லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ், பிறகு கட் ஷாட்டில் ஒரு பவுண்டரி. 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அவர் அந்த ஓவரில் வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்காக 6 ஒவர்களில் 51 ரன்களை இருவரும் எடுத்தனர். 17-வது ஓவர் முடிவில் ஸ்கோர் 128/6 என்று இருந்தது.

18-வது ஓவரை அக்சர் படேல் வீச, பாக்னர் அவரது அரைக்குழி பந்தை சிக்சருக்குத் தூக்கினார். அந்த ஓவரில் 10 ரன்கள்.

ஜான்சன் ஆட்டத்தின் 19-வது ஓவரை வீசினார். அது அவரது 4-வது ஓவர், ஜான்சன் வீசிய லெந்த் பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்து பந்தை மிட்வீக்கெட் திசையில் சிக்சருக்கு விரட்டினார். அடுத்த பந்தும் லெந்த் பந்து லாங் ஆஃபில் பவுண்டரி. அடுத்த பந்து டீப் மிட்விக்கெட்டில் மீண்டும் ஒரு சிக்ஸ். 20 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. 3 ஓவர்கள் 14 ரன்கள் கொடுத்திருந்த ஜான்சன் 4 ஓவர்களில் 34 ரன்கள் என்று காலியானார்.

20-வது ஓவரில் பாக்னர் அவுட் ஆனார். 33 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாசினார். ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அனுரீத் சிங் 4 ஓவர்களில் 23 ரன்கள் 3 விக்கெட்டுகள். சந்தீப் சர்மா 4 ஓவர்கள் 19 ரன்கள் 1 விக்கெட். அற்புதமான வேகப்பந்து வீச்சை இருவரும் வீசினர். ராஜஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள்.

நல்ல பந்துவீச்சில் மடிந்தது அதிரடி கிங்ஸ் லெவன்:

சேவாக் களமிறங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் நடந்ததென்னவோ எதிர்-உச்சகட்ட காட்சியானது. சவுதி வீசிய முதல் பந்து அருமையான அவுட்ஸ்விங்கராக அமைய, சேவாக் எட்ஜ் செய்ய சஞ்சு சாம்சன் அதனை அபாரமாக பிடித்தார். சேவாக் 'கோல்டன் டக்’.

விருத்திமான் சஹா (7), சஞ்சு சாம்சனின் சமயோசிதத்தினால் ரன் அவுட் ஆனார். முரளி விஜய் மட்டும் நன்றாக ஆடினார் அவர் 32 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 37 ரன்கள் எடுத்தார். அவரும் சஞ்சு சாம்சனின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஜேம்ஸ் பாக்னார், அபாய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை 7 ரன்களில் வெளியேற்ற கிங்ஸ் லெவன் 9 ஓவர்களில் 64/4 என்று ஆனது.

ஆனால் அதன் பிறகு ராஜஸ்தான் பந்து வீச்சும் இன்னும் மேம்பாடு அடைந்தது, பீல்டிங் பொறி பறந்தது. அடிக்க முடியவில்லை. 7 ஓவர்களில் 71 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டேவிட் மில்லர் (23), தவல் குல்கர்னி பந்தை அடிக்க முயன்று பந்து முன் எட்ஜில் பட்டு தேர்ட்மேனில் பாக்னரிடம் கேட்ச் ஆனது.

அக்சர் படேல் (24), பெய்லி (23) ஆகியோரால் எதிர்பார்த்த வேகத்தில் அடிக்க முடியவில்லை. மாரிஸ், சவுதி அபாரமாக வீசினர். குறிப்பாக சவுதி, பெய்லியையே கட்டிப் போட்டார். கடைசியில் வெறுப்பில் அக்சர் படேல் சுழற்ற சவுதி பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. பெய்லி மற்றும் ஜான்சனை, பாக்னர் கழற்றினார்.

ஜான்சனுக்கு சவுதி வீசிய ஒரு ஓவர் மறக்க முடியாதது. ஒரு பந்து கூட மாட்டவில்லை. கடைசியில் 136/8 என்று முடிந்தனர் கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வில்லியம் பாக்னர் ஆட்ட நாயகன்.

இன்றைய ஆட்டத்தில் மாலை 4 மணிக்கு சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளும் 8 மணிக்கு கொல்கத்தா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

மொத்தத்தில் அருமையான வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம், நல்ல பந்துவீச்சு, அருமையான பீல்டிங், திறமையான பேட்டிங் என்று நல்ல கிரிக்கெட் போட்டியாக இது அமைந்தது. ஐபிஎல் போட்டி போன்றே தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x